Latest News :

’ஆர்.ஆர்.ஆர்’ விமர்சனம்

32f43c70eca7a3a865bd0c53db5f0d88.jpg

Casting : Ram Saran, Junior NTR, Aaliya Patt, Ajay Devgan, Samuthirakani

Directed By : SS Rajamouli

Music By : MM Maramagathamani

Produced By : DVV Entertainment - D. V. V. Danayya

 

பிரிட்டிஷ் இந்தியாவில் கதை நடக்கிறது. பழங்குடி சிறுமி ஒருவரை, பிரிட்டிஷ் கவர்னரின் குடும்பம் வலுக்கட்டாயமாக தங்களுடன் அழைத்துச் சென்றுவிடுகிறார்கள்.  அந்த சிறுமியை மீட்பதற்காக பழங்குடி இளைஞர் ஜூனியர் என்.டி.ஆர் தனது குழுவுடன் காட்டில் இருந்து நகரத்திற்கு வருகிறார். 

 

இப்படி ஒருவன் வரும் தகவல் கவர்னர் தரப்புக்கு கிடைப்பதோடு, எத்தனை பேர் தடுத்தாலும், அவன் அந்த சிறுமியை மீற்பான், அவனை யாராலும் தடுக்க முடியாது, என்ற கூடுதல் தகவலும் சொல்கிறார்கள்.

 

இதனால், அலாட்டாகும் கவர்னர் தரப்பு, அவரை பற்றி போலீஸ் அதிகாரிகளிடம் கூறி, அவரை பிடிப்பவர்களுக்கு உயர் பதவி வழங்கப்படும் என்று உத்தரவிடுகிறார்கள். ஆனால், அவரை பற்றி எந்த தகவலும் இல்லாததால், அவரை பிடிக்கும் வேலையை ஏற்க அதிகாரிகள் மறுக்க, ராம்சரண் மட்டும் அந்த வேலையை செய்ய முன் வருகிறார்.

 

ஜூனியர் என்.டி.ஆர் சிறுமியை தேட, அவரை போலீஸ் அதிகாரியான ராம்சரண் தேடுகிறார். ஆனால், காலம் இவர்களை உயிருக்கு உயிரான நண்பர்களாக்க, இறுதியில் ஜூனியர் என்.டி.ஆர் சிறுமியை மீட்டாரா, அல்ல அவரை மீட்க வந்த ராம் சரண் ஜூனியர் என்.டி.ஆரை கைது செய்தாரா, என்பதே படத்தின் மீதிக்கதை.

 

படத்தோட கதையை விட, அதை ஸ்க்ரீன்ல கொடுத்த விதம் தான் படத்தின் ஹைலைட்.  இன்னொரு முறை இயக்குநர் ராஜமவுலி தன்னை நிரூபித்துவிட்டார் என்றே சொல்லலாம்

 

குறிப்பாக, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரது அறிமுக காட்சிகள் செம மாஸாகவும், மிரட்டலாகவும் இருக்கிறது.  அந்த காட்சிகளின் பிரமிப்பில் இருந்து நாம் மீள்வதற்குள், ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆர் சந்தித்து கொள்ளும் காட்சியின் மூலம் மீண்டும் நம்மை பிரமிக்க வைக்கும் இயக்குநர், முழு படத்தையும் பிரம்மிப்போடு பார்க்க வைத்திருக்கிறார்.

 

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் தங்களது கதாப்பாத்திரத்தின் வலிமைக்கு ஏற்றவாறு பலம் பொருந்தியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய ஸ்க்ரீன் பிரசன்ஸ், படத்தின் பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

 

ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியான ஆலிவியா மோரிஷ், ராம்சரணின் ஜோடியான ஆலியா பட் மற்றும் அஜய் தேவ்கான் ஆகியோரது வேடங்கள் சிறப்பு தோற்றங்களாக இருந்தாலும், அவர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திர்க்கிறார்கள்.

 

கவர்னர் கதாப்பாத்திரத்தில் வரும் வில்லன் நடிகரும், அவருடைய மனைவியாக நடித்திருக்கும் நடிகையும், பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறை மற்றும் கொடூரத்தை கண்களின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

 

கே.கே.செந்திலின் ஒளிப்பதிவும், மரகதமணியின் இசையும் பிரமாண்ட காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் இருக்கிறது. சாபு சிரிலின் ஆர்ட் ஒர்க்கும் படத்தை வேற லெவலுக்கு கொண்டு போய் இருக்கிறது. பல இடங்களில் கிராபிக்ஸ் தெரியாதவாறு இருக்கிறது.

 

படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் பிரம்மாண்டமும், அந்த பிரம்மாண்டத்தை கதையோடு  சேர்த்து கொடுத்ததும் தான். குறிப்பாக, ஜூனியர் என்.டி.ஆர் கவர்னர் மாளிகையில் இருக்கும் சிறுமியை காப்பாற்ற திட்டம் போடும் போது, இவ்வளவு பேர் இருக்கும் போது எப்படி காப்பாற்றுவார், என்று தோன்றும். ஆனால், அந்த காட்சியை இயக்குநர் கையாண்ட விதம் உண்மையிலே ஆடியன்ஸுக்கு மிக பெரிய சர்பிரைஸாகவும், ஷாக்கிங்காகவும் இருக்கும். 

 

ஒரு திரைப்படத்தில் எப்படி விஷுவல் மேஜிக் நடத்த வேண்டும், என்பதை மீண்டும் நிரூபித்துள்ள இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை திரைக்கதை மற்றும் காட்சிகளை வேகமாக நகர்த்தி செல்வதோடு, பிரமாண்டத்தை எப்படி கதைக்கு ஏற்றவாறு கையாள வேண்டும், என்ற மேஜிக் மூலம் நம்மை மெய்மறக்க செய்துவிடுகிறார்.

 

படத்தின் பிரமாண்டமும், பிரமிப்பும் படம் முடிந்த பிறகும் நம் கண்ணை விட்டு அகலாதபடி செய்திருக்கும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி மீண்டும் தனது மாயாலாஜத்தில் ரசிகர்களை மயங்க வைத்திருக்கிறார்.

 

ரேட்டிங் 4.5/5

Recent Gallery