Casting : Vikram Prabhu, Anjsali Nair, Lal, Madhusuthana Rao, Bose Venkat, Paval Navageethan
Directed By : Thamizh
Music By : Gibran
Produced By : Potential Studios LLB
பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘டாணாக்காரன்’ படத்தை ‘ஜெய் பீம்’ படத்தில் போலீஸாக நடித்து மிரட்டிய தமிழ் இயக்கியிருக்கிறார். ஒடிடி-யில் வெளியாகியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு என்று பார்ப்போம்.
விளையாட்டு மைதானம் ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு காவலர் பயிற்சி பள்ளியில் நடக்கும் அவலங்களை அதிரடியாகவும், அழுத்தமாகவும் சொல்வது தான் ‘டாணாக்காரன்’.
விக்ரம் பிரபு தனக்கு கொடுத்த வேடத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அப்பாவின் லட்சியத்தை நிறைவேற்ற துடிக்கும் மகன், அதே சமயம் தன்னை காக்கி சட்டை போட விடாமல் தடுக்க நினைக்கும் உயர் அதிகாரிகளின் அடக்குமுறைக்கு அடங்கி போக முடியாமலும், அவர்களை எதிர்க்கவும் முடியாமலும் தடுமாறும் இடங்களில் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
ஈஸ்வர மூர்த்தி என்ற காவல்துறை பயிற்சி அதிகாரியாக நடித்திருக்கும் லால் நடிப்பில் மிரட்டுகிறார். இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் மதுசூதனன் ராவ், உயர் அதிகாரிகளின் அடக்குமுறையை தனது நடிப்பு மூலம் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கர் தனது முதிர்ச்சியான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார். சில காட்சிகளில் வந்தாலும் காவல்துறையில் இருக்கும் நேர்மையானவர்களையும், காவல்துறையின் சிஸ்டத்தை மாற்ற துடிக்கும் அதிகாரிகளையும் பிரதிபலிக்கிறார் போஸ் வெங்கட்.
விக்ரம் பிரபுவின் நண்பராக நடித்திருக்கும் பாவல் நவகீதனின் கதாப்பாத்திரமும், அதில் அவர் நடித்த விதமும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. சித்தப்பா வேடத்தில் நடித்த பிரகதீசுவரனின் வேடம் அரசு வேலைக்காக அலக்கழிக்கப்பட்டவர்களின் குமுறலாக இருக்கிறது.
விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் இடையிலான காதல் காட்சிகள் திரைக்கதை ஓட்டத்திற்கு எந்த வகையிலும் இடையூறாக இருந்து விட கூடாது என்பதில் இயக்குநர் கவனமாக இருந்திருக்கிறார். அதனால், சிறிதளவு மட்டுமே அஞ்சலி நாயரை பயன்படுத்தியிருந்தாலும், அந்த சிறிதளவு காட்சிகளில் வந்தே நம் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
மைதானத்தில் பெரும்பாலான காட்சிகள் நகர்ந்தாலும், நமக்கு சலிப்பு ஏற்படாத வகையில் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் காட்சிகளை கையாண்டிருக்கிறார்.
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் காட்சிகளோடு பயணிக்கிறது. பின்னனி இசை கதாப்பாத்திரங்களின் வலியையும், களத்தின் வலிமையையும் ரசிகர்களிடம் கடத்துகிறது.
படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜின் படத்தொகுப்பு நேர்த்தி. நீளமாக சொல்ல வேண்டிய காட்சிகளை சுருக்கமாக சொன்னாலும், அதன் கருத்துக்கள் மக்கள் மனதில் பதியும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
இதுவரை சினிமாவில் சொல்லாத ஒரு களத்தை, ஒரே ஒரு மைதானத்துக்குள் வைத்தே சொல்லியிருப்பதோடு, காவல்துறையின் வரலாறு, அவர்களுடைய சிஸ்டம் மற்றும் அதிகாரிகளின் அடக்குமுறை ஆகியவற்றையும் சொல்லி, அதை சமூக பிரச்சனையாகவும் மக்கள் புரிந்துக்கொள்ளும்படி பதிவு செய்திருக்கும் இயக்குநர் தமிழை பாராட்டி வரவேற்கலாம்.
பொதுவாக போலீஸ் என்றால் பொதுமக்களுக்கு ஒருவித பயம் இருக்கும். ஆனால், இந்த படத்தை பார்க்கும் போது போலீஸ் வேலைக்கு போக நினைப்பவர்களே போலீஸை பார்த்து பயப்படுவார்கள். அந்த அளவுக்கு படத்தின் முதல் பாதி மிரட்டுகிறது.
மொத்தத்தில், இதுவரை சினிமாவில் சொல்லாத ஒரு களத்தையும், காவலர் பயிற்சி பள்ளியில் நடக்கும் அவலங்களையும் பதிவு செய்த வகையில் இந்த ‘டாணாக்காரன்’ கவனம் ஈர்க்கிறான்.
ரேட்டிங் 3.5/5