Casting : Ashok Selvan, Priya Bhavani Shankar, Sathish, Nassar, Munishkanth, KPY Yogi, Krrish Kumar, Ravi Mariya
Directed By : Sumanth Radhakrishnan
Music By : Bobo Shashi
Produced By : R Ravindran
வீட்டில் ஏற்பாடு செய்யும் திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறும் பிரியா பவானி சங்கர், தனது காதலனை தேடி யாருக்கும் தெரியாமல் பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் நுழைகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த ஹாஸ்டலில் சிக்கிக்கொண்டு வெளியே போக முடியாமல் தவிக்கும் பிரியா பவானி சங்கரை, அங்கிருந்து வெளியேற்ற அசோக் செல்வன் மற்றும் அவரது நண்பர்கள் பல முயற்சிகள் செய்கிறார்கள். ஆனால், அனைத்தும் தோல்வியில் முடிய, இறுதியில் பிரியா பவானி சங்கர் ஹாஸ்டலில் இருந்து வெளியேறினாரா இல்லையா, அவருடைய காதலர் என்ன ஆனார், என்பதே படத்தின் மீதிக்கதை.
பாய்ஸ் ஹாஸ்டலில் ஒரு பெண் நுழைந்தால் என்ன நடக்கும், என்ற கற்பனையை காமெடி என்ற ஃபேலவரோடு சேர்த்து கொடுத்து நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
அசோக் செல்வன் முதல் முறையாக முழுநீள காமெடி படத்தில் நடித்திருக்கிறார். கொடுத்த வேலையை சரியாக மட்டும் அல்ல சிறப்பாக செய்ய வேண்டும் என்று பல இடங்களில் அவர் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. சில இடங்களில் முகபாவனைகள் மற்றும் உடல் மொழி மூலம் காமெடியை வெளிப்படுத்த முயற்சித்திருக்கும் அசோக் செல்வன் அதில் வெற்றி பெற்றிருந்தாலும், சில இடங்களில் தடுமாறவும் செய்திருக்கிறார். முதல் காமெடி படம் தானே போக போக காமெடியை கற்றுக்கொள்வார் என்று நம்பலாம்.
பிரியா பவானி சங்கர் நல்லா நடிச்சிருக்காங்க என்று சொல்வதை விட, டபுள் மீனிங் வசனங்களை நல்லாவே பேசியிருக்காங்கனு சொல்லலாம். பிரியா பவானி சங்கருக்கு ஸ்கோப் உள்ள கதாப்பாத்திரம் அதை ரொம்ப நல்லாவே கையாண்டு இருக்காங்க.
சதீஷ் வழக்கம் போல தனது டைமிங் ஜோக் மூலம் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். சில இடங்களில் சிரிக்க முடிந்தாலும் பல இடங்களில் முடியல என்று தான் சொல்லனும். அசோக் செல்வனின் நண்பர்களாக நடித்திருக்கும் கிரிஷ் மற்றும் KPY யோகி இருவரும் கொடுத்த வேலையில் குறை வைக்கவில்லை.
ஹாஸ்டல் வார்டனாக வரும் நாசர், வாட்ச்மேனாக வரும் முனிஷ்காந்த் இருவரும் வருடம் இடங்களில் சிரிக்க முடிகிறது. பிரியா பவானி சங்கரின் அப்பாவாக நடித்திருக்கும் ரவி மரியா வழக்கம் போல் தனது கூட்டணியுடன் சேர்ந்து காமெடி சரவெடி வெடித்திருக்கிறார். அவர் எண்ட்ரிக்கொடுக்கும் அனைத்துக் காட்சிகளுக்கும் திரையரங்கே அதிரும்படி ரசிகர்கள் சிரிக்கிறார்கள்.
போபோ சசியின் இசையில் கானா பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப இருக்கிறது.
பாய்ஸ் ஹாஸ்டல் என்ற ஒரே ஒரு களத்தில் முழு படத்தையும் படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார், வித்தியாசமான பிரேம்கள் மூலம் காட்சிகளை ரசிக்க வைத்திருப்பதோடு, பிரியா பவானி சங்கரை அழகாகவும் காட்டியிருக்கிறார்.
முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே நம்பியிருக்கும் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன், படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை ரசிகர்கள் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும், என்று உழைத்திருக்கிறார். அவரது உழைப்பு வீண் போகவில்லை என்றாலும், காமெடி படங்களுக்கு என்று இருக்கும் வழக்கமான டெம்ப்லெட் உடன் திரைக்கதை பயணிப்பது சில இடங்களில் சலிப்படைய செய்கிறது. இருந்தாலும் அதை நட்சத்திரங்களை வைத்து சமாளித்து விடுகிறார்.
காமெடி காட்சிகள் கை கொடுக்கவில்லை என்றால் டபுள் மீனிங் வசனங்கள் மூலம் ரசிகர்களை திருப்தி பண்ணிடலாம் என்று நினைத்த இயக்குநர், பிரியா பவானி சங்கரையே டபுள் மீனிங் பேச வைத்திருப்பது படத்தின் ஹைலைட்.
ஒரு குறிப்பிட்ட லொக்கேஷனில் முழு கதையும் நகரும்படியான படத்தை முழுவதுமாக ரசிகர்கள் ரசிப்பது என்பது சவாலான காரியம். அந்த சவாலை மிக கஞ்சிதமாக சமாளித்திருக்கும் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
மொத்தத்தில், கொஞ்சம் கடித்தாலும், குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது இந்த ’ஹாஸ்டல்’
ரேட்டிங் 3/5