Casting : V, Chaitra Reddy, Anikka Vikraman
Directed By : V
Music By : Kavin and Aaditya
Produced By : Honey Frame Works
பிரச்சனையில் உள்ள தம்பதிகளுக்கு தனது பேச்சு மூலம் தீர்வு கொடுப்பதோடு, அவர்களின் சிக்கல்களையும் தீர்த்து வைக்கும் லைப் கோச்சிங் தொழிலை செய்யும் ஹீரோ வி, இந்த உலகத்தில் எதுவுமே தானாக நடப்பதில்லை, நம்மால் நடத்தி வைக்கப்படுவது தான் வாழ்க்கை, என்பதை மிக அழுத்தமாக நம்புவதோடு, அதன்படியே வாழ்ந்தும் வருகிறார். அவரிடம் தனது தோழியின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையை தீர்க்க வருகிறார் நாயகி அனிக்கா விக்ரமன். அவருடைய தோழியின் பிரச்சனையை தீர்த்து வைக்கும் வி, அப்படியே அனிக்காவையும் காதலிப்பதாக சொல்வதோடு, தனது முன்னாள் காதல் மற்றும் காதலி பற்றியும் சொல்கிறார். பிறகு வி-க்கும், அனிக்காவுக்கும் திருமணம் நடக்க, சந்தோஷமாக போகும் அவர்களது இல்லர வாழ்வில் திடீரென்று வி-யின் முன்னாள் காதலி சைத்ரா ரெட்டி எண்ட்ரி கொடுக்கிறார். தனது முன்னாள் காதலி இன்னமும் தன்னையே நினைத்துக்கொண்டு வாழ்வதை அறிந்துக்கொள்ளும் வி அவருடன் நட்பாக பழக அதை அவரது மனைவி அனிக்கா சந்தேக கண்ணுடன் பார்க்கிறார். அதனால் ஏற்படும் பிரச்சனைகளும், அதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யமாகவும், எதிர்ப்பார்க்காத ட்விஸ்ட்டோடும் சொல்வது தான் ‘விஷமக்காரன்’ படத்தின் கதை.
சமீபத்தில் வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை கொண்டாடிய ரசிகர்கள் இந்த ‘விஷமக்காரன்’ படத்தை பார்த்தால், அந்த படத்தை விட ஒரு படி மேல் இந்த படத்தை கொண்டாடுவார்கள். அந்த அளவுக்கு க்ளைமாக்ஸில் மிகப்பெரிய விஷமம் செய்திருக்கிறார் இயக்குநர் வி.
லைப் கோச்சிங் பணி செய்யும் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தும் ஹீரோ வி படம் முழுவதும் பேசிக்கொண்டே இருந்தாலும், அந்த பேச்சை சலிக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு பேச்சால் அத்தனை பேரையும் கவர்ந்து விடுபவர், கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை மிக கச்சிதமாக கொடுத்திருக்கிறார்.
அனிக்கா விக்ரமன், சைத்ரா ரெட்டி என இரண்டு ஹீரோயின்களும் அழகிலும் சரி, நடிப்பிலும் சரி அடங்கப்பா...ரகம் தான். அதிலும், ஹீரோவுடன் சேர்ந்து இவங்க இரண்டு பேரும் பேசுவதோடு மட்டும் அல்லாமல் பல காட்சிகளில் தங்களது கண்களினாலேயே நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது.
வி, சைத்ரா ரெட்டி, அனிக்கா விக்ரம் என்ற மூன்று நடிகர்கள் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை கதையை சுமக்கிறார்கள். இவர்கள் மூன்று பேர் மட்டுமே திரை முழுவதும் நிறைந்திருப்பதோடு, வசனங்கள் மூலம் காட்சிகளை நிறைத்திருப்பது சில இடங்களில் சலிப்படைய செய்வதையும் மறுக்க முடியாது. அதிலும் ஹீரோ வி பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசுவது சில ரசிகர்களுக்கு படம் புரியாத புதிர் போல் தோன்றுவதற்கான அபாயமும் இருக்கிறது.
இப்படி படம் முழுவதும் பேசிக்கொண்டே நடித்தாலும், படத்தின் இறுதிக் காட்சியில் நடக்கும் சம்பவமும், பிறகு அந்த சம்பவத்திற்கான காரணத்தை ஹீரோ விளக்கும் போது, ஒட்டு மொத்த திரையரங்கே கைதட்டி கொண்டாடுகிறது. அத்தகைய ஒரு கொண்டாட்டத்தை இறுதியில் ரசிக்க வேண்டுமானால், படத்தின் ஆரம்பத்தில் வரும் அத்தனை பேச்சுக்களையும் நாம் கடந்து செல்ல வேண்டும்.
கவின் ஆதித்யாவின் இசையும், ஜெ.கல்யாணின் இசையும் படத்துடன் பயணித்திருக்கிறது. முழு படத்தையும் குறிப்பிட்ட நான்கு சுவர்களுக்குள் வைத்து முடித்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனத்தை காட்டுவதோடு, இப்படியும் ஒரு படம் எடுக்க முடியுமா! என்று ஆச்சரியப்படவும் வைக்கிறது.
முதல் படத்திலேயே இயக்குநர் மற்றும் ஹீரோ என்று இரட்டை குதிரை சவாரி செய்திருக்கும் வி-யின் சவாரி பாராட்டும்படி இருக்கிறது. கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்து நடிகராக ஜொலிப்பவர், சிறிய ஐடியாவை மிக அழுத்தமான திரைக்கதையாக்கி அதை சுவாரஸ்யமான படமாகவும் கொடுத்திருக்கிறார்.
மூன்று கதாப்பாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு முழுப்படத்தையும் தைரியமாக நகர்த்தி செல்லும் இயக்குநர் வி-யின் ‘விஷமக்காரன்’-னில் சில குறைகள் இருந்தாலும், க்ளைமாக்ஸ் காட்சி அத்தனை குறைகளையும் நிறைகளாக மாற்றி படத்தை கொண்டாட வைக்கிறது.
மொத்தத்தில், ‘விஷமக்காரன்’ மூளைக்காரன்
ரேட்டிங் 3.5/5