Casting : Sarathkumar, Nepolean, Ajay, Suhasini
Directed By : JPR
Music By : Jakes Bejoy
Produced By : PK Ram Mohan
சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ‘சென்னையில் ஒருநாள் 2’.
போலீஸ் அதிகாரியான சரத்குமார் சென்னையில் இருந்து கோயமத்தூருக்கு டிரான்ஸ்பர் ஆகிறார். அங்கு பெற்றோரை இழந்த, தனது அக்கா பிள்ளைகள் மூன்று பேருக்கு கார்டினயாக இருந்துக் கொண்டு தனது போலீஸ் வேலையை கவனித்து வருகிறார்.
இதற்கிடையே, கோவை மாநகரம் முழுவதும் ”ஏஞ்சலினா மரணம் இன்றா? நாளையா?” என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட, அதை ஒட்டியாது யார், எதற்காக ஒட்டினார்கள், என்பதை விசாரிக்கும் பொறுப்பு சரத்குமாறுக்கு வழங்கப்படுகிறது. அதே சமயம், சரத்குமாரின் அக்கா மகளுக்கு ஒரு கடிதம் வருகிறது. ஏஞ்சலினா என்ற பெயரில் வரும் அந்த கடிதம், மிரட்டும் தோனியில் இருக்கிறது. மேலும், அந்த கடிதத்தின் விலாசம் சென்னை என்றும் குறிப்பிடப்பட்டிருகிறது.
இதையடுத்து ஏஞ்சலினா யார்? என்பது குறித்து சரத்குமார் விசாரிக்க தொடங்க, அதன் பிறகு நடக்கும் சம்பங்களும், அந்த சம்பவங்களின் சஸ்பென்ஸ் மற்றும் அதற்கான விளக்கங்களும் தான் படத்தின் கதை.
போலீஸ் வேடம் ஏற்றிருந்தாலும், தாடி, கோட் சூட் என்று சரத்குமார் ஸ்டைலிஷான லுக்கில் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். ஆனால், நடிப்பில் மட்டும் எந்த வித்தியாசத்தையும் காட்டவில்லை. மாறாக, ரொம்ப அடக்கி வாசிக்கிறேன், என்ற பெயரில் நடிப்பதையே சுத்தமாக மறந்திருக்கிறார். இருந்தாலும், காதல், டூயட் என்று நம்மை கடப்பேற்றாமல், சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்திற்கு எது தேவையோ அதை மட்டுமே செய்திருப்பது மிக்கப்பெரிய ஆறுதல்.
படத்தில் பல மைனஸ் இருந்தாலும், முக்கியமான மைனஸ் வில்லன். ஏதோ பள்ளி நாடகத்தில் சிறு பிள்ளைகள், வயதான வேடத்திற்கு சாக் பீஸ் பவுடரை தலையில் தேய்த்துக் கொள்வது போல, தலை முடியை வெள்ளையாக்கிக் கொண்டு நடித்துள்ள அந்த குள்ள மனிதரை வில்லனாக மட்டும் அல்ல நடிகராகவே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரை மட்டுமல்ல, படத்தில் வரும் எந்த நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஒட்டாமலே இருக்கிறார்கள்.
அதிலும், போலீஸாக நடித்திருக்கும் முனிஷ்காந்தின், காமெடி காட்சிகளும், அவர் பேசும் வசனங்களும் செம மொக்கையாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் விஜய் தீபக் மற்றும் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் ஆகியோர் இந்த படத்திற்கு தங்களது பணி எவ்வளவு முக்கியம் என்பதை மறந்துவிட்டு வேலை செய்திருப்பார்கள் போல. இருந்தாலும், சில இடங்களில் இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் ஆடியன்ஸை மிரட்டவும் செய்திருக்கிறார்கள். அதை கொஞ்சம் அதிகமாக செய்திருந்தால் அவர்கள் பெரிய அளவில் பாராட்டப்பட்டிருப்பார்கள்.
’துருவங்கள் 16’ போல திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கும் இயக்குநர் ஜெபிஆர், காட்சிகள் அமைப்பில் தான் சற்று தடுமாறியிருக்கிறார். வித்தியாசமாக காட்சிகளை கோர்வைப்படுத்துகிறேன், என்ற பெயரில் ரசிகர்களை சில இடங்களில் குழப்பமடைய செய்திருப்பது, படத்திற்கு பெரிய பலவீனமாக அமைந்துவிட்டது.
இருந்தாலும், சரத்குமார் போன்ற மக்களுக்கு நன்றாக பரிச்சயமான ஒரு நடிகை வித்தியாசமாக காட்டியிருப்பதோடு, தான் சொல்ல வந்ததை நேர்த்தியாக சொல்வதில் தடுமாறியிருந்தாலும், இறுதியாக அனைத்து முடிச்சுகளையும் அவிழ்ப்பதற்கான காரணத்தை தெளிவாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஜெபிஆரின் இந்த ‘சென்னையில் ஒருநாள் 2’ படத்தை ஒரு முறை பார்க்கலாம்.
ஜெ.சுகுமார்