Casting : Aishwarya Rajesh, Kathir, R. Parthiban, Harish Uthaman, Sriya Reddy
Directed By : Bramma G and Anucharan
Music By : Sam C. S.
Produced By : Wallwatcher Films - Pushkar and Gayatri
புஷ்கர் & காயத்ரி தயாரிப்பில், பிரம்மா.ஜி மற்றும் அனுசரண் இயக்கத்தில் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இணைய தொடர் ‘சுழல்’. பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சஸ்பென்ஸ் இணைய தொடரான இத்தொடர் மொத்தம் 8 பாகங்களாக வெளியாகியிருக்கும் இந்த தொடர் எப்படி இருக்கிறது, என்று விமர்சனத்தை பார்ப்போம்.
‘சுழல்’ இணைய தொடரின் டிரைலரே இது எந்த மாதிரியான கதைக்களம் என்பதை நமக்கு சொன்னாலும், முதல் பாகத்தில் தொடங்கும் எதிர்ப்பார்ப்பும், சுவாரஸ்யமும் அடுத்தடுத்த பாகங்களை நேரம் போவதே தெரியாதபடி சுவாரஸ்யமாக நகர்கிறது.
சிமெண்ட் தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவராக இருக்கும் பார்த்திபனின் இளைய மகள் திடீரென்று மாயமாகி விட அவரை தேடும் முயற்சியில் பார்த்திபன் இறங்குகிறார். அப்போது தொழிற்சாலை தீ விபத்து தொடர்பாக வரை போலீஸ் கைது செய்ய, அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா ராஜேஷ் களத்தில் இறங்கு தனது தங்கையை தேடும் முயற்சியில் இறங்குகிறார். இதற்கிடையே பார்த்திபனுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை சேகரிக்கும் போலீஸ் அதிகாரிகள் ஸ்ரேயா ரெட்டி மற்றும் கதிருக்கு அவரது மகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியான ஆதாரம் ஒன்று கிடைக்கிறது. அந்த ஆதாரத்தின் மூலம் அவள் காணாமல் போகவில்லை கடத்தப்பட்டிருக்கிறாள், என்பது தெரியவர, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை பல முடிச்சுகளோடு சுவாரஸ்யமாக சொல்லியிருப்பது தான் சுழல் இணைய தொடரின் கதை.
சுழல் இணைய தொடரின் டிரைலரே அதன் கதைக்களத்தை நமக்கு புரிய வைத்தாலும், தொடரின் முதல் பாகத்தில் தொடங்கும் எதிர்ப்பார்ப்பும், சுவாரஸ்யமும் இறுதி பாகம் வரை பயணிப்பது மிகப்பெரிய பலம். குறிப்பாக ஒவ்வொரு பாகத்தின் போதும் நாம் யூகிப்பது நடக்காமல் வேறு ஒரு பாதையில் கதை பயணிப்பது நேரம் போவதே தெரியாதபடி 8 பாகங்களையும் மொத்தமாக பார்க்க வைக்கிறது.
இரண்டு மகள்களுக்கு தந்தையாக நடித்திருக்கும் பார்த்திபன் மிக இயல்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக அவரது வழக்கமான நடிப்பையும், வசனத்தையும் தவிர்த்துவிட்டு நடித்திருப்பது புதிதாக இருப்பதோடு ரசிக்கும்படியும் இருக்கிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்ரே ரெட்டி, கதாப்பாத்திரற்கு பொருத்தமாக இருப்பதோடு நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார். ஸ்ரேயா ரெட்டி என்றாலே திமிரு என்ற அடையாளத்தை இந்த தொடர் மூலம் அழித்திருப்பவரின் நடிப்பு கூடுதல் கவனம் பெறுகிறது.
சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கதிர் முழு கதையையும் தன் தோள் மீது சுமந்திருக்கிறார். தொடர் முழுவதும் வரும் அவரது கதாப்பாத்திரமும் அதற்கு ஏற்ப அவர் நடித்திருப்பதும் தொடருக்கு பலம் சேர்த்திருக்கிறது.
பெண்களை மையப்படுத்திய கதை என்பதால் ஐஸ்வர்யா ராஜேஷையும் ஒரு கதாப்பாத்திரமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். சில இடங்களில் அவரது கதாப்பாத்திரம் கவனிக்க வைத்தாலும் சில இடங்களில் திணித்திருப்பது போல் தோன்றுகிறது. இருந்தாலும் க்ளைமாக்ஸ் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும், அதனால் அவர்கள் பாதிக்கப்படுவதையும் அவரது கதாப்பாத்திரம் மிக அழுத்தமாக சொல்வது மூலம் ஒட்டு மொத்த தொடரில் அதிகமாக ஸ்கோர் செய்துவிடுகிறார்.
ஹரிஹ் உத்தமன், குமரவேல், சந்தான பாரதி என தொடரில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
சாம் சி.எஸ் பின்னணி இசையில் தான் எப்போது முன்னணி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். அவரது பின்னணி இசை கதையின் வேகத்தையும் விறுவிறுப்பையும் அதிகரித்திருக்கிறது.
முகேஷ்வரனின் ஒளிப்பதிவு பிரம்மாண்டமாக உள்ளது. மலைப்பகுதியின் அழகையும், இரவு நேர காட்சிகள் மற்றும் மயானகொள்ளை திருவிழா காட்சிகளை படமாக்கிய விதம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட லைட்டிங் அனைத்தும் கவனம் ஈர்க்கிறது.
8 தொடர்களையும் மொத்தமாக பார்த்தால் சுமார் 5 மணி நேரம் ஆகிறது. ஆனால், அந்த 5 மணி நேரம் எப்படி போனது என்பதே தெரியாதபடி காட்சிகளை மிக கச்சிதமாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.
சந்தன் குமாரின் கதை மிக சாதாரணமாக இருந்தாலும், அதற்கு இயக்குநர்கள் பிரம்மா.ஜி மற்றும் அனுசரண் அமைத்த திரைக்கதை மற்றும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கிறது. இப்படி தான் நடந்திருக்கும், என்று நாம் யோசிக்கும் போது, நம்மை அசரவைக்கும்படி புதிய ட்விஸ்டோடு கதை பயணிக்கிறது.
இணைய தொடர் என்றாலே அனைத்து விஷயங்களையும் விரிவாக சொல்வதற்கு நிறைய வாய்ப்பு இருப்பதால் பல விஷயங்களை மிக தெளிவாக சொல்லியிருப்பது தொடருக்கு பலமாக இருந்தாலும், காதல் கதையை விவரிக்கும் பகுதிகள் சில திரைக்கதைக்கு வேகத்தடையாக இருக்கிறது. இருந்தாலும், அந்த காதல் கதையில் கூட என்ன நடந்திருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்படும் வகையில் இயக்குநர்கள் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில், ‘சுழல்’ சுவாரஸ்யமும், சஸ்பென்ஸும் நிறைந்த தொடர்
ரேட்டிங் 3.5/4