Latest News :

’டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்

f7f60e0f5ac9afe6da6a9dfb98b34d02.jpg

Casting : Arulnithi, Avantika Mishra, Karu Palaniappan, Adithya Kathir, Vijaykumar Rajendran, Ramesh Kanna, Charandeep, Thalaivasal Vijay

Directed By : Vijaykumar Rajendran

Music By : Ron Ethan Yohann, Kaushik Krish

Produced By : Aravinnd Singh

 

காட்டுப்பகுதியில் கட்டப்பட்டுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் நாயகன் அருள்நிதி, நாயகி அவந்திகா மிஷ்ரா ஆகியோர் படிக்கிறார்கள். கல்லூரி விடுதியில் இருக்கும் மாணவிகள் சிலர் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். அவர்களின் மரணத்திற்கு சிறுத்தை தான் காரணம் என்று கல்லூரி நிர்வாகம் சொல்கிறது. ஆனால், அந்த மரணங்களுக்கு சிறுத்தை காரணம் அல்ல என்பதை கண்டுபிடிக்கும் ஹீரோ அருள்நிதி, கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா?, யார் அந்த கொலையாளி? என்பதே படத்தின் கதை.

 

அருள்நிதி கல்லூரி மாணவர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். உடல் எடையை குறைத்திருப்பதோடு இளமையாகவும், அழகாகவும் தெரிகிறார். தனக்கு கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கும் அருள்நிதி, இந்த படத்தில் ஹீரோவாக அல்லாமல் ஒரு கதாப்பாத்திரமாகவே வலம் வருகிறார். அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளிப்பது தவறில்லை, ஆனால் தான் ஒரு அனுபவம் வாய்ந்த நடிகர் என்பதை உணர்ந்து கதை தேர்வில் அருள்நிதி கவனம் செலுத்துவது நல்லது.

 

ஹீரோயினாக நடித்திருக்கும் அவந்திகா மிஷ்ரா, இயக்குநர் விஜய்குமார் ராஜேந்திரன், ஆதித்யா கதிர், தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, காளி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சரண்தீப் என அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

 

கல்லூரி உரிமையாளராக சில நிமிடங்கள் வந்தாலும், தனது வசனம் மூலம் சாமியார்களை கலாய்த்து கைதட்டல் பெறுகிறார் கரு.பழனியப்பன்.

 

அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு, இசையமைப்பாளர் ரோன் எத்தன் யோஹனின் பாடல்கள் மற்றும் கெளசிக் கிரிஷின் பின்னணி இசை, கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு என தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரின் பணியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

கதை எழுதி இயக்கியிருக்கும் எரும சாணி விஜய், எளிமையான கருவை வைத்துக்கொண்டு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருக்கிறார். முழுக்க முழுக்க ஒரு கல்லூரியை மையமாக வைத்து ஒரு முழுமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.

 

மாணவிகளின் மரணங்களுக்கு காரணம் யார்? என்பது இடைவேளைக்குப் பிறகு தெரிந்தாலும், அதற்கான காரணம் என்ன? என்ற கேள்வி படத்தின் க்ளைமாக்ஸ் வரை நம்மை சீட் நுணியில் உட்கார வைப்பதோடு, விடுதிக்குள் நுழையும் அந்த மர்ம உருவத்தால் படம் பார்ப்பவர்களை பதறவும் வைக்கிறது.

 

படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும், தேவையில்லாத விஷயங்களை திணிக்காமல் தான் சொல்ல வந்ததை நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் சொல்வதில் இயக்குநர் விஜய்குமார் ராஜேந்திரன் வெற்றி பெற்றிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘டி பிளாக்’ திக்...திக்...திக்...

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery