Latest News :

’யானை’ விமர்சனம்

76aa1e1293c7f1ea272d563a01c32493.jpg

Casting : Arun Vijay, Priya Bhvani Shankar, Samuthirakani, Bose Venkat, Ramachandra Raju, Yogi Babu, Radhika, Sanjeev

Directed By : Hari

Music By : GV Prakash Kumar

Produced By : Drumsticks Productions - S.Shakthivel

 

ராமநாதபுரம் மாவட்டத்தின் அடையாளமாக திகழும் பி.ஆர்.வி குடும்பத்தின் கடைக்குட்டி வாரிசான அருண் விஜய், தனது குடும்பம் மீதும் அண்ணன்கள் மீதும் அளவு கடந்த பாசத்துடன் இருந்தாலும் அவரது அண்ணன்கள் அவரை தனது தந்தையின் இரண்டாம் தாரத்து பிள்ளையாகவே பார்க்கிறார்கள். இதற்கிடையே சிறையில் இருந்து விடுதலையாகும்  அருண் விஜயின் குடும்ப எதிரியான ராமச்சந்திர ராஜு,  அருண் விஜயின் குடும்பத்தாரை கொலை செய்ய துடிக்க, அவரிடம் இருந்து தனது அண்ணன்களை காப்பாற்றுவதில் அருண் விஜய் கவனம் செலுத்துகிறார். 

 

இதற்கிடையே பி.ஆர்.வி குடும்பத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தால் அருண் விஜய்க்கு அவரது அண்ணன்கள் துரோகி என்ற முத்தியை குத்தி வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வில்லன் ராமச்சந்திர ராஜு, அருண் விஜயின் அண்ணன்களை அழிக்க முடிவு செய்ய, அவர்களை அருண் விஜய் காப்பாற்றினாரா?, பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பதை விறுவிறுப்பாகவும் வேகமாகவும் சொல்வது தான் ‘யானை’.

 

மாஸ் ஆக்‌ஷன் படங்கள் மூலம் தொடர் வெற்றி பெற்று வரும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் முதல் முறையாக நடித்திருக்கும் அருண் விஜய், தனது அதிரடி ஆக்‌ஷன் மற்றும் நடிப்பு மூலம் ‘யானை’ என்ற தலைப்புக்கு நூறு சதவீதம் நியாயம் சேர்த்துள்ளார். தனது குடும்பத்திற்கு ஆபத்து என்று தெரிந்ததும் பதறும் காட்சியில் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தும் அருண் விஜய், பகைவர்களை பந்தாடும் காட்சிகளில் ஆக்‌ஷன் ஹீரோவாக ஜொலித்து, காதல் காட்சிகளில் நாகரீகமாக நடித்திருக்கிறார். மொத்தத்தில், எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் பக்காவாக பொருந்துவதோடு, அந்த கதாப்பாத்திரத்திற்கு தனது நடிப்பு மூலம் பலம் சேர்க்கும் நடிகர்களில் அருண் விஜய் முக்கியமானவர் என்று நிரூபித்துள்ளார்.

 

கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், கதாப்பாத்திரத்திற்கு ஏற்றபடி குடும்ப பாங்காக இருக்கிறார். கொடுத்த வேலையையும் குறையில்லாமல் செய்திருக்கிறார். இருந்தாலும் பல இடங்களில் அவரை கதாநாயகியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

அருண் விஜயின் அண்ணன்களாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், சஞ்சீவ் ஆகிய மூன்று பேரின் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக சமுத்திரக்கனி மற்றும் போஸ் வெங்கட்டின் அனுபவம் வாய்ந்த நடிப்பு அமர்க்களம்.

 

’கே.ஜி.எப்’ புகழ் ராமச்சந்திர ராஜு வில்லனாக நடித்திருக்கிறார். அவரின் தோற்றம் மற்றும் ஸ்க்ரீன் பிரசன்ஸ் அளவுக்கு அவருடைய கதாப்பாத்திரத்திற்கு பலம் இல்லை. இருந்தாலும் குறைவான வாய்ப்பை நிறைவாகவே செய்திருக்கிறார்.

 

யோகி பாபு வரும் இடங்கள் அனைத்தும் சிரிப்பு வெடி. அதிலும், இமான் அண்ணாச்சியை வைத்து யோகி பாபு கலாய்க்கும் காட்சிகள் திரையரங்கே அதிரும் வகையில் மக்களை சிரிக்க வைக்கிறது. இமான் அண்ணாச்சியும் தனது பங்கிற்கு சிரிப்பு வெடிகுண்டுகளை வீசி ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்.

 

அருண் விஜயின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, கிடைக்கும் சிறு சிறு வாய்ப்புகளிலும் தனது அதிரடி நடிப்பால் கவனம் பெறுகிறார்.

 

மாஸ் ஆக்‌ஷன் படங்களுக்கான வழக்கமான பாணியை தவிர்த்துவிட்டு ஆக்‌ஷன் காட்சிகளை வித்தியாசமான முறையில் ஒளிப்பதிவாளர் கோபிநாத் படமாக்கியிருக்கிறார். குறிப்பாக இரண்டு சண்டைக்காட்சிகளை ஒரே ஷாட்டாக எடுத்திருப்பது பாராட்டும்படி இருப்பதோடு,  வியக்கும்படியும் இருக்கிறது.

 

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணிக்கிறது.

 

இயக்குநர் ஹரி படம் என்றாலே வேகத்திற்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது. அப்படி வேகமான மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் காட்சியமைப்போடு படம் இருந்தாலும், பல இடங்களில் தனது வேகத்தை குறைத்து கதாப்பாத்திரங்களின் உணர்வுகளையும், நடிகர்களின் நடிப்பையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இயக்குநர் ஹரி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

 

ஹீரோவின் ஆக்ரோஷமான வசனங்களும், அதிரடியான சண்டைக்காட்சிகளும் கதையை வேகமாக நகர்த்தினாலும், காணாமல் போன அருண் விஜயின் அண்ணன் மகள் என்ன ஆனார்? என்ற கேள்வியோடு படம் பார்ப்பவர்களை எதிர்ப்பார்ப்போடு படத்துடன் பயணிக்க வைக்கிறார் இயக்குநர் ஹரி.

 

இயக்குநர் ஹரியின் படங்களின் இதுவரை இல்லாத அளவுக்கு சாதி பற்றிய வசனங்கள் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. அதில் பல வசனங்கள் உயர் சாதியினருக்கு ஆதரவாக இருப்பது அதிர்ச்சியளித்தாலும், ஹீரோ அருண் விஜய் மூலம் சாதி பாகுபாடு பார்க்க கூடாது என்ற கருத்தை வலியுறுத்தியிருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது.

 

தனது வழக்கமான பிளேவரில் கதை மற்றும் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ஹரி, அதை தனது வழக்கமான பாணியில் சொல்லாமல் சற்று வித்தியாசமான ரூட்டில் பயணித்திருப்பது ஒட்டு மொத்த படத்தையும் ரசிக்க வைக்கிறது.

 

மொத்தத்தில், ரசிகர்கள் கொண்டாடும் மிரட்டலான மாஸான ஆக்‌ஷன் படமாக இருக்கிறது இந்த ‘யானை’

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery