Casting : Soniya Agarwal, Vimala Raman, Hemanth Menon, Bournami Raj
Directed By : Shijinlal SS
Music By : Shankar Sharma
Produced By : Jayaraj R and Vinayaka Sunil Kumar
பசுமையான அதே சமயம் தனிமையில் அமைந்திருக்கும் மிக அழகான ஒரு பிரம்மாண்டமான வீடு. அதில் வழக்கறிஞர் விமலா ராமன், தனது மகள் பௌர்ணமி ராஜுடன் வாழ்ந்து வருகிறார். வேலையில் பிஸியாக இருக்கும் விமலா ராமன், தனது மகளை பார்த்துக்கொள்ள மற்றும் அவருக்கு வீட்டிலேயே பாடம் சொல்லி கொடுக்க ஆசிரியரை நியமிக்கிறார். ஆனால், அந்த வீட்டுக்கு வரும் ஆசிரியர்கள் அங்கிருக்கும் அமானுஷ்யத்தின் ஆபத்தை உணர்ந்து ஓட்டம் பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட அந்த வீட்டில் ஆசிரியராக வரும் சோனியா அகர்வாலையும் அமானுஷ்யம் அச்சுறுத்த, சோனியா அகர்வாலும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தாரா ? இல்லையா?
அந்த வீட்டில் இருக்கும் அமானுஷ்யம் யார்? எதற்காக அங்கு வரும் ஆசிரியர்களை அச்சுறுத்துகிறது? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
ஒரு வீட்டில் அல்லது குறிப்பிட்ட ஒரு லொக்கேஷனில் கதை நடப்பது போல் பல பேய் படங்கள் வந்திருந்தாலும், அவற்றில் சில படங்கள் மட்டுமே ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான படங்களாக இருக்கும். அப்படி ஒரு படமாக இப்படமும் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், படத்தில் இடம்பெற்றுள்ள வீடு.
இயற்கை எழில் மிகுந்த மலைப்பிரதேசத்தில் மிக அழகான ஒரு பகுதியில் அமைந்திருக்கும் அந்த வீட்டை ஏரியல் ஷாட்டில் காட்டும் போதெல்லாம் ஏதோ சொர்க்கத்தையே பார்த்த ஒரு உணர்வு நமக்கு ஏற்படுகிறது. அதனுடன், அந்த வீட்டில் நடக்கும் திகில் சம்பவங்களும் அவற்றின் மூலம் எழும் கேள்விகளும் நம்மையும் அந்த வீட்டுக்குள் பயணிக்க வைத்துவிடுகிறது.
சோனியா அகர்வால், விமலா ராமன், சிறுமி பெளர்ணமி ராஜ் ஆகியோரின் கதாப்பாத்திரங்களும், அதில் அவர்கள் வெளிப்படுத்திய நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.
ஆசிரியராக நடித்திருக்கும் சோனியா அகர்வால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக தோன்றியிருக்கிறார். அமைதியான முகத்தோடு, அளவாக நடித்திருக்கும் சோனியா அகர்வால், அச்ச உணர்வையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
தோற்றத்திலும், நடிப்பிலும் கம்பீரத்தை காட்டியிருக்கும் விமலா ராமன், வழக்கறிஞர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். நீதிமன்றத்தில் வாதிடும் காட்சிகள் அவருக்கு இல்லை என்றாலும், அவருடைய வசன உச்சரிப்பும், தன்னை மிரட்டுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் காட்சியிலும் அவருடைய நடிப்புக்கு ஆயிரம் அப்ளாஷ் கொடுக்கலாம்.
சிறுமி பெளர்ணவி ராஜ், கண்களின் மூலம் நடிப்பது மட்டும் இன்றி நம்மை பயமுறுத்தவும் செய்கிறார். அமானுஷ்யத்துடன் பேசுவதோடு, அமானுஷ்யத்தை பற்றி சொல்லி சோனியா அகர்வாலை அவர் அச்சப்பட வைக்கும் போது, அவர் மீதே நமக்கு பயம் ஏற்படுகிறது.
படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஹெமந்த் மேனன், சாக்லெட் வில்லனாக இனிக்கும் அளவுக்கு வில்லத்தனத்தை வெளிக்காட்டியிருக்கிறார். அவருடன் வரும் ஆறடி மனிதரும் மிரட்டல். சர்க்கரை கலந்த பேச்சால் தங்களது மிரட்டலை வெளிப்பத்துபவர்கள், பிறகு காட்டும் அதிரடி அதிர வைக்கிறது.
நடிகர்களுடன் படத்தின் லொக்கேஷனையும் ஒரு கதாப்பாத்திரமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கும் ஒளிப்பதிவாளர் யஸ்வந்த் பாலாஜியின் ஒளிப்பதிவும், காட்சிகளை அவர் கையண்ட விதமும் சபாஷ் சொல்ல வைக்கிறது.
பேய் வருவதற்கு முன்பாகவே தனது இசை மூலம் ரசிகர்களை அச்சத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் இசையமைப்பாளர் சங்கர் ஷர்மா, தனது பின்னணி இசை மூலம் முழு படத்தையும் பீதியுடன் பார்க்க வைக்கிறார்.
வீட்டில் இருக்கும் அமானுஷ்யம் யார்? என்பதை படத்தின் ஆரம்பத்திலேயே நமக்கு சொல்லிவிட்டாலும், படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்படும் வகையில் காட்சிகளை மிக நேர்த்தியாக தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளரின் பணியும் பாராட்டும்படி இருக்கிறது.
ஒரு வீடு, அதில் ஒரு பேய், அதன் பின்னணி என்ன? என்ற எளிமையான கதைக்கருவை வைத்துக்கொண்டு வலிமையான காட்சி அமைப்புகள் மூலம் நம்மை இரண்டு மணி நேரம் கட்டிப்போடுகிறார் இயக்குநர் சிஜின்லால் எஸ். எஸ்.
காமெடி படங்களிலும் திகில் படங்களிலும் லாஜிக் என்ற ஒன்று இருப்பது குதிரை கொம்பு போல தான். ஆனால், இயக்குநர் சிஜின்லால் எஸ்.எஸ், திகில் திரைப்படத்தை மிக லாஜிக்கோடும், அமானுஷ்யத்தின் உண்மைத்தன்மையோடும் இப்படத்தை இயக்கியிருப்பது படத்தின் கூடுதல் சிறப்பு. குறிப்பாக இறந்தவர்களின் ஆன்மா எப்படிப்பட்டது?, ஆன்மாக்களை பேயாக நினைத்து பயப்படுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பது குறித்து சுருக்கமாகவும் விரிவாகவும் விளக்கியிருப்பது, இதுவரை எந்த ஒரு பேய் படத்திலும் சொல்லாத ஒன்றாக இருக்கிறது.
முனி, காஞ்சனா, அரண்மனை பேய், காஞ்சூரியன் பேய் என கோலிவுட் முதல் ஹாலிவுட் பேய் வரை நாம் ஏகப்பட்ட பேய் படங்களை பார்த்திருந்தாலும், அவற்றில் இருந்து சற்று மாறுபட்ட ஒரு பேயாகவும், அப்படங்களுக்கு இணையாக நம்மை அச்சுறுத்தும் ஒரு பேயாகவும் இருக்கிறது இந்த ‘கிராண்மா’
மொத்தத்தில், ‘கிராண்மா’ பேய் படங்களின் கிரேட்மா...
ரேட்டிங் 3/5