Latest News :

’ஒற்று’ விமர்சனம்

1a191e58bc0d4bc243a54b62ceaf7a1d.jpg

Casting : Mathivanan, Mahasri, Indira, Don Sivakumar, Uma Maheshwari, Dinesh

Directed By : Mathivanan Sakthivel

Music By : SP Venkatesh

Produced By : Sakthi Screens

 

எழுத்தாளர் மதிவாணன், நாவல் எழுதுவதற்காக குன்னூர் பகுதிக்கு செல்கிறார். நாவல் எழுதும் பணியில் ஈடுபடும் மதிவாணன் சரியான கரு கிடைக்காமல் தடுமாறும் நேரத்தில் பார்வையற்ற பெண்ணான மஹாஸ்ரீயை சந்திக்கிறார். அவரை மையப்படுத்தி நாவல் ஒன்றை எழுத முடிவு செய்யும் மதிவாணன், மஹாஸ்ரீயின் வாழ்க்கைப் பற்றி தெரிந்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறார். அப்போது, மஹாஸ்ரீயின் வாழ்க்கையின் அதிர்ச்சிக்கரமான பல உண்மைகள் தெரிய வருவதோடு, அவருடைய வாழ்க்கையில் மதிவாணனுக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வருகிறது. அது எப்படிப்பட்ட தொடர்பு?, உண்மை தெரிந்த பிறகு என்ன நடந்தது? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

இந்திரன் என்ற எழுத்தாளர் கதாப்பாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் மதிவாணன், கதாப்பாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார். அவருடைய அளவான நடிப்பும், இயல்பான உடல் மொழியும் கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

பார்வையற்ற பெண்ணாக பிரமிளா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் மஹாஸ்ரீ, மிக அழுத்தமான கதாப்பாத்திரை மிக சுலபமாக நடித்திருக்கிறார். அவர் உண்மையிலேயே பார்வையற்றவராக இருப்பாரோ, என்று நினைக்கும் வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

 

பவிதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்திரா, செந்தில் என்ற வேடத்தில் நடித்திருக்கும் தினேஷ், இந்திரனின் தந்தையாக நடித்திருக்கும் டான் சிவகுமார், இந்திரனின் அம்மாவாக நடித்திருக்கும் உமா மகேஸ்வரி, மண்டேஸ் ரமேஷ் என படத்தின் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு, கொடுத்த வேலையை குறை வைக்காமல் செய்திருக்கிறார்கள்.

 

தினேஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்திலும் அமைதியும், அழகும் நிறைந்திருக்கிறது. எஸ்.பி.வெங்கடேஷின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. படத்தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பு நேர்த்தி.

 

எழுதும் போது ஏற்படும் சந்திப் பிழைகளை ஒற்றுப் பிழைகள் என்று சொல்வார்கள். ஆக, பிழை என்பதற்கான அர்த்தமாக தான் இப்படத்திற்கு ‘ஒற்று’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள் போலிருக்கு.

 

தேடல் ஜானர் கருவுக்கு சஸ்பென்ஸான திரைக்கதை அமைத்து, அமைதியான காட்சிகள் மூலம் ஒரு அழகான இலக்கண படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் மதிவாணன் சக்திவேல்.

 

அமைதியான சூழலில் நடக்கும் கதையில் பல சஸ்பென்ஸ் காட்சிகளை வைத்து படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கும் இயக்குநர் மதிவாணன் சக்திவேல், பிரமிளா யார்? இந்திரன் யார்? என்ற கேள்வியை ஆரம்பத்திலேயே நம் மனதில் ஏற்படுத்தி அடுத்தடுத்த காட்சிகள் மூலம் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்து விடுகிறார்.

 

படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் புதுமுகங்களாக இருப்பது மற்றும் கதை குறிப்பிட்ட லொக்கேஷன்களில் பயணிப்பது படத்திற்கு சிறிது பலவீனமாக இருந்தாலும், புதியவர்களின் இந்த முயற்சியை பாராட்டி வரவேற்கலாம்.

 

மொத்தத்தில், ‘ஒற்று’ ஒகே தான்.

 

ரேட்டிங் 2.75/5

Recent Gallery