Latest News :

’பன்னி குட்டி’ விமர்சனம்

a1d6ec1035c92961b7fcb7b709ed7c44.jpg

Casting : Karunakaran, Yogi Babu, Singampuli, Dindigul Leoni Ramar, Thangadurai

Directed By : Anusaran

Music By : Krishna Kumar

Produced By : Lyca Production - Subaskaran

 

வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாத கருணாகரன் தற்கொலை செய்ய முயற்சிக்கிறார். அவரை காப்பாற்றும் ராமர் அவரை சாமியார் திண்டுக்கல் லியோனியிடம் அழைத்து செல்ல, சாமியார் சொல்வதை கருணாகரன் செய்ய, அவருடைய பிரச்சனைகள அனைத்தும் தீர்ந்து விடுகிறது. உடனே சாமியாருக்கு நன்றி சொல்ல போகும் போது, பன்னி குட்டி ஒன்றின் மீது கருணாகரன் மோதிவிட, அவர் வாழ்க்கையில் மீண்டும் பிரச்சனைகள் வருகிறது. அந்த பிரச்சனைகள் தீர மீண்டும் அதே பன்னி குட்டி மீது பைக்கில் சென்று மோத வேண்டும், என்று சாமியார் சொல்வதோடு, ஐந்து நாட்களுக்குள் அதை செய்ய வேண்டும், இல்லை என்றால் மிகப்பெரிய பிரச்சனைகள் வரும் என்று கூறிவிடுகிறார். 

 

அதே பன்னி குட்டியை ஐந்து நாட்களுக்கு பத்திரமாக பார்த்துக்கொண்டால் தான் தனக்கு திருமணமாகும் என்பதால் யோகி பாபு, அந்த பன்னி குட்டியை குழந்தையை போல் பார்த்துக்கொள்ள, கருணாகரன் பன்னி குட்டி மீது மீண்டும் மோதினாரா? இல்லையா?, அவருடைய பிரச்சனை தீர்ந்ததா இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கருணாகரன் தனது வழக்கமான இயல்பான நடிப்பு மூலம் கவர்கிறார். காட்சிகளுக்கு ஏற்ற வகையில் காமெடியனாகவும், கதையின் நாயகனாகவும் கலக்கியிருப்பவர் காதல் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.

 

படத்தின் மற்றொரு நாயகனாக யோகி பாபு நடித்திருந்தாலும் அவர் வரும் காட்சிகள் சற்று குறைவு தான். அந்த குறைவான காட்சிகளிலும் நம்மை நிறைவாக சிரிக்க வைக்கிறார்.

 

ராமர், தங்கதுரை, சிங்கம் புலி ஆகியோரது கூட்டணி காமெடி திரையரங்கே அதிரும் வகையில் சிரிக்க வைக்கிறது. அதிலும் சிங்கம்புலியின் காமெடி படத்திற்கு மிகப்பெரிய ஹைலைட்டாக அமைந்துள்ளது.

 

கிருஷ்ண குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணிக்கிறது.

 

பன்னி குட்டியின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து ஓடி ஓடி காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் சதிஷ் முருகன், காட்சிகளையும் பன்னி குட்டியையும் ரசிக்கும்படி காட்டியிருக்கிறார்.

 

ரவி முருகையாவின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் அனுசரன், காமெடி காட்சிகள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.

 

வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொண்டாலே அதற்கு தீர்வு கிடைத்துவிடும், அதை விட்டுவிட்டு சாமியார், பூஜை என்று மூடநம்பிக்கையை பின்பற்ற கூடாது என்ற கருத்தை இயக்குநர் அனுசரன் மிக அழுத்தமாக பதிவு செய்திருப்பது பாராட்டத்தக்கதாக இருந்தாலும், படத்தின் இறுதியில் மூடநம்பிக்கையை ஜெயிக்க வைத்திருப்பது ஏன்? என்று தான் தெரியவில்லை.

 

நல்ல கருத்தை நல்லவிதமாக சொல்லவில்லை என்றாலும், இரண்டு மணி நேரம் அனைத்து கவலைகளையும் மறந்துவிட்டு வயிறு வலிக்க சிரிக்கும் அளவுக்கு படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் அனுசரன்.

 

மொத்தத்தில், ‘பன்னி குட்டி’ நல்ல காமெடி படம்

 

ரேட்டிங் 3/5