Casting : Thiyan Prabhu, Ashmitha, Mano Bala, Velmurugan, Vicky, Ramesh, Valavan
Directed By : ThiyanPrabhu
Music By : Balamurali
Produced By : Natchathiram Sebastian
படம் இயக்குவதற்காக வாய்ப்பு தேடும் நாயகன் தியான் பிரபு, தயாரிப்பாளர் மனோ பாலாவிடம் பேய் கதை ஒன்றை சொல்கிறார். அந்த பேய் கதைப்படி தியான் பிரபு, அஸ்மிதா உள்ளிட்ட ஆறு பேர் ஒரு வீட்டுக்குள் செல்கிறார்கள். அங்கிருக்கும் பேய் அவர்களை ஒவ்வொருவராக கொலை செய்கிறது. அந்த பேய் யார்? எதற்காக அவர்களை கொலை செய்தது? என்பதை சொல்லி முடிக்கும் போது படத்தில் எதிர்பாராத ட்விஸ்ட் வந்து நம்மை அதிர செய்கிறது. அந்த ட்விஸ்ட் என்ன என்பதோடு, உதவி இயக்குநர்களின் வலியையும் அழுத்தமாக சொல்வது தான் ‘படைப்பாளன்’ படத்தின் கதை.
வெற்றி பெற்றவர்களை மட்டுமே கொண்டாடும் சினிமாவில், வாழ்க்கையை தொலைத்த உதவி இயக்குநர்கள் ஏராளாம். குறிப்பாக தங்களது கதை திருடப்பட்டு அதனால் எதிர்காலத்தையே தொலைத்தவர்கள் ஏராளம். அப்படிப்பட்டவர்களின் அவல நிலையை மிக அழுத்தமாக சொல்லியிருப்பதோடு, அதை திடுக்கிடும் திகில் படமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் தியான் பிரபு.
கதை எழுதி இயக்கியிருப்பதோடு படத்தின் நாயகனாகவும் நடித்திருக்கும் தியான் பிரபு, கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார். சினிமாவை நம்பி ஏமாந்தவர்களின் துயர நிலையை தனது நடிப்பு மூலம் கச்சிதமாக வெளிப்படுத்தியிருப்பவர், திடீரென்று எதிர்ப்பார்க்காத வேடத்திற்கு மாறி நம்மை பயமுறுத்தவும் செய்கிறார்.
அஸ்மிதா, நிளோஃபர், வளவன், பாடகர் வேல்முருகன், விக்கி, ரமேஷ், மனோ பாலா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
கெளரவ தோற்றத்தில் நடித்திருக்கும் ஜாக்குவார் தங்கம், தருண் கோபி, திருச்சி வேலுச்சாமி ஆகியோர் இடம்பெறும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி கவனம் ஈர்க்கிறது.
படத்தின் ஆரம்ப காட்சியிலேயே நம்மை திரைக்குள் இழுத்துவிடுகிறார் ஒளிப்பதிவாளர் வேல்முருகன். இரவு நேரத்தில் நீண்ட சாலையில் பயணிக்கும் போலீஸ் வாகனமும் அதை தொடர்ந்து வரும் இரவு நேர காட்சிகளையும் மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.
பால முரளியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருப்பதோடு, பாடல் வரிகளும் புரியும்படி இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்தாலும் சில இடங்களில் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே கேட்கிறது.
எஸ்.பி.அஹமத்தின் படத்தொகுப்பு படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் இருக்கிறது.
வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமான முறையில் திகில் ஜானர் படத்தை இயக்கியிருக்கும் தியான் பிரபு, திரைத்துறையில் இருக்கும் மிக முக்கியமான பிரச்சனை பற்றி பேசியிருப்பது பாராட்டத்தக்கது.
தான் ஹீரோவாக நடித்தாலும் தேவையில்லாத விஷயங்களை திணிக்காமல் சொல்ல வந்ததை மிக நேர்த்தியாகவும் அதே சமயம் சுருக்கமாகவும் சொல்லியிருக்கும் தியான் பிரபு, தொழில்நுட்ப ரீதியாகவும் படத்தை தரமாக இயக்கியிருக்கிறார்.
பேய் வரும் சில காட்சிகள் சற்று நீளமாக இருப்பது மட்டுமே படத்தின் சிறு குறையாக இருக்கிறது. அந்த குறையை தவிர்த்துவிட்டு பார்த்தால் ‘படைப்பாளன்’ வித்தியாசமான மற்றும் விறுவிறுப்பான திகில் படமாக மட்டும் இன்றி, உதவி இயக்குநர்களின் அவலநிலையை சொல்லும் படைப்பாகவும் இருக்கிறது.
மொத்தத்தில், ‘படைப்பாளன்’ பார்க்க வேண்டிய படம்
ரேட்டிங் 3/5