Latest News :

’கார்கி’ விமர்சனம்

4d2acc79512205ddb4447da4af7a8852.jpg

Casting : Sai Pallavi, Kaali Venkat, Aishwarya Lakshmi, RS Sivaji, Jayaprakash, Dr.S.Sudha, Kavithalaya Krishnan, Saravanan

Directed By : Gautham Ramachandran

Music By : Govind Vasantha

Produced By : Ravichandran Ramachandran, Thomas George, Aishwarya Lakshmi V, Thomas George, Gautham Ramachandran

 

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிறிமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். இந்த குற்றத்தை செய்த நான்கு வட மாநில இளைஞர்களோடு ஐந்தாவது குற்றவாளியாக அந்த குடியிருப்பு காவலாளியான சாய் பல்லவியின் தந்தை ஆர்.எஸ்.சிவாஜி கைது செய்யப்படுகிறார். இதனால், சாய் பல்லவியும் அவரது குடும்பத்தாரும் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அதே சமயம், எந்த தவறும் செய்யாத தனது தந்தையை காப்பாற்ற சட்ட ரீதியான போராட்டத்தை முன்னெடுக்கும் சாய் பல்லவி, அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா?, அந்த ஐந்தாவது குற்றவாளி யார்? என்பதை விறுவிறுப்பாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்வது தான் ‘கார்கி’-யின் கதை.

 

சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் என்ற செய்தியை நாம் செய்தியாக மட்டுமே பார்த்து கடந்திருப்போம். ஆனால், இந்த படத்தை பார்த்தால் இனி நாம் அப்படி கடந்துபோக முடியாதபடி பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை நம் உள்ளத்தில் பதிய வைத்திருப்பதோடு, பல அதிர்ச்சியான திருப்பங்கள் நிறைந்த சுவாரஸ்யமான திரைப்படமாகவும் கொடுத்திருக்கிறார்கள்.

 

கார்கி என்ற கதாப்பாத்திரத்தில் முழுக்கதையையும் தோளில் சுமந்திருக்கும் சாய் பல்லவி, பல இடங்களில் தனது மெளனத்தின் மூலமாகவே பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். தனது தந்தை குற்றமற்றவர் என்று நிரூபிக்க அவர் எடுக்கும் நடவடிக்கையும், அதே சமயம் உண்மையான குற்றவாளி பற்றி தெரிந்ததும் அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன் மூலம் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட் கார்கி கதாப்பாத்திரத்தை அவ்வபோது ஓவர் டேக் செய்யும் விதத்தில் நடித்திருக்கிறார். நீதிமன்ற வழக்காடல் காட்சிகளில் ஆரம்பத்தில் பதட்டமாக இருக்கும் காளி வெங்கட், அடுத்த அடுத்த காட்சிகளில் தனது இயல்பான உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பு மூலம் அதிரடி காட்ட, ஒட்டு மொத்த திரையரங்கமே கைதட்டல் சத்தத்தால் அதிர்ந்து போகிறது.

 

சாய் பல்லவி மற்றும் காளி வெங்கட் இருவரும் உணர்ச்சி பொங்க நடிக்காமல் பல உணர்வுகளை ரசிகர்களிடம் இயல்பாக கடத்தியிருக்கிறார்கள். இவர்களின் நடிப்புக்கு விருதுகள் பல கிடைக்கப்போவது உறுதி.

 

சாய் பல்லவியின் தந்தையாக நடித்திருக்கும் ஆர்.எஸ்.சிவாஜி மிக அழுத்தமான கதாப்பாத்திரத்தை மிக அமைதியாக கையாண்டு பாராட்டு பெறுகிறார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையாக நடித்திருக்கும் சரவணன், குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட சிறுமியின் முகத்தை காட்டமலேயே, அவருடைய வேதனையை தனது சிறப்பான நடிப்பு மூலம் நம்மிடம் சரவணன் கடத்துகிறார்.

 

நீதிபதியாக நடித்திருக்கும் திருநங்கை டாக்டர்.சுதா, வழக்கறிஞராக நடித்திருக்கும் கவிதாலயா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ், சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பிரதாப் என அனைவரும் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, அவர்களின் நடிப்பு நாம் ஒரு திரைப்படம் பார்க்கிறோம் என்ற எண்ணம் ஏற்படாத வகையில் காட்சிகளுடன் நம்மை ஒன்றிவிட செய்கிறது.

 

வலி மிகுந்த கதைக்கருவுக்கு தனது இசை மூலம் வலிமை சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா. அவரது பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். 

 

ஒளிப்பதிவாளர்கள் ஸ்ரையந்தி மற்றும் பிரேம்கிருஷ்ணா அக்கடு கதைக்கு ஏற்றவாறு ஒளிப்பதிவு செய்திருப்பதோடு, காட்சிகளை மிக இயல்பாகவும் படமாக்கியிருக்கிறார்கள்.

 

அமைதியான கதையை விறுவிறுப்பாக நகரும்படி தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ஷபிக் முஹமது, படத்தில் உள்ள திருப்புமுனைகளை ரசிகர்கள் யூகிக்க முடியாதபடி மிக நேர்த்தியாக நகர்த்தியிருக்கிறார்.

 

பாலியல் பலாத்காரம் என்ற மையக்கரு மற்றும் அதை சுற்றி நடக்கும் கதையை வழக்கமான பாணியில் சொல்லாமல் மிக வித்தியாசமான முறையில் சொல்லியிருக்கும் இயக்குநர் கெளதம் ராமசந்திரன், ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார்.

 

தனது தந்தையை காப்பாற்ற சாய் பல்லவி எடுக்கும் நடவடிக்கை மூலம், இதுபோன்ற வழக்குகளில் அப்பாவி மனிதர்கள் கூட குற்றவாளிகளாக மாற்றப்படுகிறார்கள், என்பதை சொல்லியிருக்கும் இயக்குநர் உண்மையான குற்றவாளி யார்? என்பதை சொல்லும் இடத்தில் சாய் பல்லவிக்கு மட்டும் அல்ல படம் பார்க்கும் அனைவருக்கும் பேரதிர்ச்சியை கொடுக்கிறார்.

 

நடிகர்களின் இயல்பான நடிப்பும், வசனங்களும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. நீதிபதியாக வரும் திருநங்கை தன்னை ஏலனமாக பேசிய அரசு வழக்கறிஞருக்கு பதிலடி கொடுக்கும் காட்சி, காளி வெங்கட்டின் வழக்காடல் காட்சி, தனது மகளின் நிலையை சரவணன் சொல்லி வருத்தப்படும் காட்சி என்று படத்தில் ஏகப்பட்ட காட்சிகளுக்கு திரையரங்கமே அதிரும் வகையில் ரசிகர்கள் கைதட்டுவது உறுதி.

 

சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ படத்திற்குப் பிறகு வழக்காடல் காட்சிகளை ரசிகர்கள் கைதட்டி கொண்டாடும் வகையிலும், மிக இயல்பாகவும் வடிவமைத்திருக்கும் இயக்குநர் கெளதம் ராமசந்திரனை கோலிவுட் கைதட்டி வரவேற்கப் போவது உறுதி. 

 

என்னதான் இந்தியாவில் பல மாற்றங்களும், முன்னேற்றேங்களும் நடந்தாலும், பெண்கள் ஆண்களுக்கு சமமாக பல துறைகளில் சாதித்தாலும், பாலின சமத்துவம் ஏற்படும் வரை பெண்களின் அவலநிலை தொடரும் என்ற உண்மையை படத்தின் க்ளைமாக்ஸில் ஐஸ்வர்யா லட்சுமி கதாப்பாத்திரம் மூலம் சொல்லிய இயக்குநர் கெளதம் ராமசந்திரனுக்கு பாராட்டோடு நின்றுவிடாமல் பல விருதுகளும் வழங்கலாம்.

 

சூர்யாவின் 2டி மற்றும் சக்திவேலனின் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனங்கள் தயாரிக்கும் மற்றும் வெளியிடும் படங்கள் மீது ரசிகர்களுக்கு ஏற்படும் எதிர்ப்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்திருப்பதோடு, சமூகத்திற்கு தேவையான அதே சமயம் பெரியவர்களோடு சிறுவர்கள் கட்டாயம் பார்க்க  வேண்டிய ஒரு படமாகவும் இருக்கிறது.

 

மொத்தத்தில், ’கார்கி’ காட்சிக்கு காட்சி மக்கள் கைதட்டி கொண்டாடும் மக்களுக்கான திரைப்படம்.

 

ரேட்டிங் 4.5/5