Latest News :

‘நிலை மறந்தவன்’ விமர்சனம்

658ed817f91ce38fd38b966e9b05560d.jpg

Casting : Fahadh Faasil, Nazriya Nazim, Dileesh Pothan, Gautham Vasudev Menon, Soubin Shahir, Chemban Vinod Jose, Vinayakan, Sreenath Bhasi

Directed By : Anwar Rasheed

Music By : Jackson Vijayan and Sushin Shyam

Produced By : Anwar Rasheed

 

கிறிஸ்த்தவ மதத்தில் இருக்கும் சிலர் அம்மதத்தை வைத்துக்கொண்டு செய்யும் வியாபாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது தான் இப்படத்தின் கதை. கிறிஸ்த்தவ நிறுவனங்களால் நடத்தப்படும் ஆன்மீக கூட்டங்கள் மற்றும் அதில் நடக்கும் அதிசய சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் பலகோடி வியாபாரத்தை மிக தைரியமாக அம்பலப்படுத்தியிருக்கும் இப்படம், சில அப்பாவி மக்கள் கடவுள் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை விவரித்திருக்கிறது.

 

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பகத் பாசில் நடிப்பு மூலம் மிரட்டுகிறார். பல இடங்களில் தனது கண்கள் மூலமாகவே நடித்திருப்பவர், ஒவ்வொரு காட்சியிலும் காட்டும் வித்தியாசமான உடல் மொழி மற்றும் எக்ஸ்பிரஷன்கள் அத்தனையும் மிக சிறப்பாக இருக்கிறது.

 

நாயாகியாக பகத் பாசிலின் மனைவி நஸ்ரியா நடித்திருக்கிறார். துள்ளல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் நஸ்ரியா சிகரெட் புகைப்பது மற்றும் மது அருந்தும் காட்சிகளை மிக இயல்பாக நடித்து மிரட்டுகிறார்.

 

வில்லன்களாக நடித்திருக்கும் கவுதம் மேனன் மற்றும் செம்பன் வினோத் ஜோஸ் அமைதியான முறையில் வில்லத்தனத்தை வெளிப்படுத்தினாலும், பார்வையிலேயே நம்மை பயமுறுத்துகிறார்கள்.

 

சில காட்சிகளில் வரும் விநாயகன், தொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கும் ஷோபின் ஷாகீர்,  திலீஸ் போத்தன், பகத் பாசிலின் தம்பியாக நடித்திருக்கும் ஸ்ரீநாத் பாசி என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் அமல்நீரத், கிறிஸ்த்தவ மதக்கூட்டங்களை பிரம்மாண்டமாக படமாக்கியிருக்கிறார். உண்மையான மதக்கூட்டங்கள் நடப்பது போல் காட்சிகளை கையாண்டிருப்பவர், கதைக்கு ஏற்றவாறு பயணித்திருப்பதோடு, போலி கிறிஸ்த்தவ பாதரியார்களின் உல்லாச மற்றும் சொகுசு வாழ்க்கையை தனது கேமரா மூலம் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார்.

 

ஜாக்சன் விஜயன் மற்றும் சுஷின்ஷியாம் ஆகியோரது இசை படத்திற்கு பலமாக அமைந்திருப்பதோடு, இசை மூலமாவும் மனிதர்களின் உணர்வுகளுடன் விளையாடலாம் என்பதையும் புரிய வைத்திருக்கிறது.

 

தமிழில் வசனங்கள் எழுதியிருக்கும் சர்வம் கிருஷ்ணார்ப்பணம் கடவுள் மீது நம்பிக்கை வைக்கலாம் ஆனால், கடவுள் பெயரை சொல்லி உபதேசம் செய்பவர்களை நம்புவதால் ஏற்படும் விளைவுகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

கிறிஸ்த்தவ மதத்தில் நடக்கும் தவறுகளை வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தை இயக்கியிருக்கும் அன்வர் ரஷீத், கிறிஸ்தவ மதம் தவறானது அல்ல அந்த மதத்தில் இருக்கும் சில தவறானவர்களால் மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

 

மொத்தத்தில், கிறிஸ்த்தவ மதத்தில் நடக்கும் வெளிப்படையான வியாபாரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கும் ’நிலை மறந்தவன்’ கிறிஸ்த்தவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery