Casting : Sam Jones, Kayal Anandi, Karu Pazhaniappan, Vela Ramamoorthy, A Venkatesh, Munishkanth
Directed By : Thamarai Selvan
Music By : Dhibu Ninan Thomas
Produced By : MAS Cinemas
நாயகன் சாம் ஜோன்ஸும், நாயகி ஆனந்தியும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். இருவரும் நண்பர்களாக பழகுகிறார்கள். ஆனந்தியின் குடும்பத்தின் மீது இருக்கும் பகையால், அவர் சாம் ஜோன்ஸை காதலிப்பதாக கரு.பழனியப்பன் வதந்தி கிளப்பு விடுகிறார். அந்த வதந்தியால் சாம் ஜோன் மற்றும் ஆனந்தி வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது, அதன் மூலம் அவர்கள் எத்தகைய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள், என்பது தான் படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சாம் ஜோன்ஸ் கல்லூரி மாணவர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். ஆனந்தியின் காதலை மறுப்பதும் அலறியடித்து ஓடுவதும் என்று தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
ஹீரோவை காட்டிலும் பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார் நாயகி ஆனந்தி. வழக்கமான தனது குழந்தைத்தனமான நடிப்பு மூலம் கவனம் பெறும் ஆனந்தி, பல இடங்களில் கைதட்டலும் பெறுகிறார்.
ஆனந்தியின் பெரியப்பவாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி தனது வழக்கமான உடல் மொழி மூலம் வழக்கமான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார். ஊர் பெரிய மனிதர் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பவர் பல இடங்களில் சற்று ஓவராகவும் நடித்திருக்கிறார்.
வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கரு.பழனியப்பன், தனது வசன உச்சரிப்பையே நடிப்பாக்கி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அவர் பேசும் எளியமையான வசனங்கள் கூட வலிமையாக இருக்கிறது.
மைக் செட் ஸ்ரீராம் வரும் காட்சிகள் அனைத்தும் போரடிப்பதோடு, படத்தின் நீளத்தையும் அதிகரித்திருக்கிறார். ஆனந்தியின் தந்தையாக நடித்திருக்கும் ஏ.வெங்கடேஷ், நடிப்பில் குறை இல்லை என்றாலும் கதாப்பாத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு மிக மிக குறைவு.
முனிஷ்காந்த் காமெடியனாக அல்லாமல் குணச்சித்திர நடிகராக கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
திபு நினன் தாமஸின் பிசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். காதல் படங்களின் வெற்றிக்கு பெரும் பங்கு வகிப்பது பாடல்களாக தான். ஆனால், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையும் மற்றொரு படத்தின் காப்பியாக இருக்கிறது.
முழு மதுரையையும் சுற்றி காண்பித்திருக்கும் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு, கதைக்கு ஏற்றவாறு கேமராவை பயணிக்க வைத்திருக்கிறார்.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை பரபரப்பாக நகர்ந்தாலும், அவ்வபோது சில தேவையில்லாத கதாப்பாத்திரங்கள் மற்றும் காட்சிகளின் மூலம் இயக்குநர் தாமரை செல்வன் சலிப்பை ஏற்படுத்தி விடுகிறார். இருந்தாலும், இடைவேளை காட்சி யாரும் எதிர்ப்பார்க்காத ஒன்றாக இருப்பதோடு, நாம் பதறும்படியும் இருக்கிறது.
இடைவேளைப் போல் படத்தின் முழு திரைக்கதையிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘நதி’ ரசிகர்களின் நரம்புகளை முறுக்கேற செய்யும் காதல் படமாக இருந்திருக்கும்.
மொத்தத்தில், ‘நதி’-யில் ஜீவன் இல்லை.
ரேட்டிங் 2.5/5