Casting : Arul Saravanan, Urvashi Rautela, Geethika Tiwari, Suman, Vamsi Krishna, Prabhu, Yogi Babu, Vivek, Robo Shankar
Directed By : J. D.–Jerry
Music By : Harris Jayaraj
Produced By : Saravanana Productions
மருத்துவத்துறையில் சாதனை புரிந்த விஞ்ஞானியான சரவணனுக்கு மருத்துவத்துறையில் பெரிய பதவி கொடுக்க இந்திய அரசு முன்வருகிறது. ஆனால் அதை தவிர்த்துவிட்டு தனது ஊர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அவர் முடிவு செய்கிறார். அதன்படி, மக்கள் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய சவால இருக்கும் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான ஆராய்ச்சியில் சரவணன் ஈடுபட, அதற்கு மருந்து தயாரிப்பு மாஃபியாக்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள். அவர்களை எதிர்த்து தனது ஆராய்ச்சியில் சரவணன் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் பார்த்த அண்ணாச்சி அதே பாணியில் ஆட்டம், பாட்டம், ஆக்ஷன் என்று நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர், ரஜினி போல கிடைக்கும் கேப்பில் மக்களுக்கு அறிவுரை சொல்வதோடு, அதிரடியான சண்டைக்காட்சிகள் மூலம் அசரடிக்கவும் செய்கிறார். ஒரு முன்னணி ஹீரோ நடிக்கும் மாஸான கதைக்களத்தில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் சரவணன் நடிப்பில் பல இடங்களில் சொதப்பினாலும், நடனம் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் அதீத ஈடுபாட்டுடன் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். என்னதான் ஊர் உலகம் அண்ணாச்சி ஹீரோவானதை கலாய்த்தாலும் தன்னம்பிக்கையோடு தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கிய அவருடைய தைரியத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
கதாநாயகிகளாக நடித்திருக்கும் ஊர்வசி ரவுதாலா மற்றும் கீதா திவாரி இருவரும் கமர்ஷியல் கதாநாயகிகளுக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்தவர்களாக இருப்பதோடு, நிறைவாகவும் நடித்திருக்கிறார்கள்.
முதல் பாதி காமெடி ஏரியாவை விவேக்கும், இரண்டாம் பாதி காமெடி ஏரியாவை யோகி பாபுவும் கையில் எடுத்து கலக்கியிருக்கிறார்கள். விவேக்கின் காமெடி காட்சிகளை விட யோகி பாபு வரும் காமெடி காட்சிகள் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் சுமன், வம்சி கிருஷ்ணா, சரவணனின் அண்ணனாக நடித்திருக்கும் பிரபு, அப்பாவாக நடித்திருக்கும் விஜயகுமார், ரோபோ சங்கர், நாசர் என அனைத்து நடிகர்களும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஹாரிஷ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது. மெலொடி பாடல்கள், அதிவேக பாடல்கள் என இசை மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கும் ஹரிஷ் ஜெயராஜ், பின்னணி இசையிலும் குறை வைக்க வில்லை.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்துள்ளார். பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும், பட காட்சிகளை பிரம்மாண்டமாகவும் படமாக்கியிருக்கும் வேல்ராஜ், ஹீரோ சரவணனை மாஸாக காட்டுவதில் மெனக்கெட்டிருப்பது அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது.
படத்தொகுப்பாளர் ரூபன் காட்சிகளை விறுவிறுப்பாக தொகுத்திருப்பதோடு, ஆக்ஷன் காட்சிகளை வெட்டியிருயிக்கும் விதம் பாராட்டும்படி இருக்கிறது. அசத்தலான ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கும் ஸ்டண்ட் இயக்குநரையும் பாராட்டியாக வேண்டும்.
சமூகத்தில் நடக்கும் மிக முக்கியமான பிரச்சனையை கதைக்கருவாக எடுத்துக்கொண்ட இயக்குநர்கள் ஜெடி - ஜெர்ரி அதற்கு மாசான மற்றும் மசாலத்தனமான திரைக்கதை அமைத்து முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார்கள்.
ரஜினியின் ‘சிவாஜி’ படத்தின் கருவை காப்பியடித்ததோடு, சரவணனையும் ரஜினி போலவே நடிக்க வைத்து, நடனம் ஆட வைத்திருக்கும் இயக்குநர்கள் முழுக்க முழுக்க சரவணனுக்காகவே இந்த படத்தை எடுத்திருப்பது பல காட்சிகளில் அப்பட்டமாக தெரிகிறது. சில இடங்களில் நாம் பார்ப்பது படம் தானா அல்லது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரமா! என்ற குழப்பமும் ஏற்படுகிறது.
படத்தின் ஆரம்பத்திலேயே என்ன நடக்கப் போகிறது என்பதை நாம் யூகித்தாலும், முழு படத்தையும் சுவாரஸ்யமாக நகர்த்த இயக்குநர்கள் கையாண்ட சில யுக்திகள் அவர்களுக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில், ‘தி லெஜண்ட்’ மேதை இல்லை என்றாலும் மோசம் இல்லை.
ரேட்டிங் 3/5