Latest News :

’குலுகுலு’ விமர்சனம்

5c0e8020c82fd2d7add5479cfb873bd9.jpg

Casting : Santhanam, Athulya Chandra, Namita Krishnamurthy, Pradeep Rawat, Mariyam George, Sai Dheena, 'Lollu Sabha' Maaran, Bipin

Directed By : Rathna Kumar

Music By : Santhosh Narayanan

Produced By : S. Raj Narayanan

 

நாடோடியாக வாழும் சந்தானம், யார் எந்த உதவி கேட்டாலும் மறுப்பு தெரிவிக்காமல் செய்யக்கூடிய குணம் கொண்டவர். ஆனால், அந்த உதவியால் பல நேரத்தில் உபத்தரங்களையும் எதிர்கொள்கிறார். இதை அறிந்த இளைஞர்கள் சிலர் கடத்தப்பட்ட தனது நண்பனை கண்டுபிடிக்க உதவி கேட்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய களத்தில் இறங்கும் சந்தானத்தை மிகப்பெரிய பிரச்சனை பின் தொடர, அதில் இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா?, கடத்தப்பட்டவரை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

 

ஹீரோவாக நடித்து கதாப்பாத்திரத்தில் என்ன தான் வித்தியாசத்தை காட்டினாலும், காமெடியாகவே நடித்து வந்த சந்தானம், இந்த படத்தில் கெட்டப்பில் காட்டியிருக்கும் வித்தியாசத்தைப் போல் நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். படத்தில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும் காமெடி செய்தாலும், சந்தானம் எந்த ஒரு இடத்திலும் காமெடி செய்யாமல் சீரியஸாக நடித்திருப்பது புதிதாக இருக்கிறது. அதிலும், சில இடங்களில் தன்னை கலாய்க்கும் வசனங்களுக்கு கூட கவுண்டர் கொடுக்காமல் அதையும் சீரியஸான வசனங்கள் மூலம் கடந்து சென்று கவனிக்க வைக்கிறார்.

 

நமீத கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதுல்யா சந்த்ரா இரண்டு பேரும் நாயகிகளாக அல்லாமல் கதாப்பாத்திரமாக வலம் வருகிறார்கள். இருவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு கச்சிதமாக நடித்திருப்பதோடு, தேவையான இடத்தில் காமெடியாக நடித்து சிரிக்கவும் வைக்கிறார்கள்.

 

வில்லனாக நடித்திருக்கும் ப்ரதீப் ராவத், போலீஸாக நடித்திருக்கும் தீனா, மரியம் ஜார்ஜ், பிபின், ஹரிஷ், கவி ஜெ.சுந்தரம், மெளரிஷ், யுவராஜ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாப்பாத்திரங்களும் படம் முழுவதும் பயணிப்பதோடு, கதையோடும் பயணித்து கவனம் பெறுகிறார்கள்.

 

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருப்பதோடு, பின்னணி இசை கதையின் போக்கையே மாற்றும் வகையில் பயணித்துள்ளது. காமெடி காட்சிகளில் சிரிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கும் இசை ஆக்‌ஷன் காட்சிகளில் அதிர்ந்து போகும் விதத்தில் ஒலிக்கிறது.

 

விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, சந்தானம் உள்ளிட்ட படத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரங்களை வித்தியாசமாக காட்டியிருக்கிறது.

 

சந்தானத்தை வைத்துக்கொண்டு காமெடி படம் மட்டுமே எடுக்க முடியும் என்ற இமேஜை உடைத்திருக்கிறார் இயக்குநர் ரத்ன குமார். படத்தில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும் நம்மை சிரிக்க வைத்தாலும், சந்தானத்தின் கதாப்பாத்திரம் மட்டும் மிக அழுத்தமாகவும், நம் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் சித்தரிக்கப்பட்டிருப்பது படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

 

சந்தானம் மூலம் உலக அரசியல் பேசியிருக்கும் இயக்குநர் ரத்ன குமார், பல இடங்களில் உள்ளூர் அரசியல் மற்றும் அதில் நடக்கும் மொழி அரசியலை மிக அழுத்தமாக பேசியிருக்கிறார்.

 

சந்தானம் ஒரு பக்கம் சீரியஸாக இருந்தாலும், அவரை சுற்றி இருப்பவர்களின் இயல்பான உடல் மொழி மற்றும் நடிப்பு நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. அதிலும் லொள்ளு சபா மாறன் காட்சிகள் எப்போதும் போல் சிரிப்பு சரவெடியாக இருக்க, ஜார்ஜ் மரியன் மற்றும் அவரது குழுவினர் செய்யும் கடத்தல் காமெடி அல்டிமெட்டாக இருக்கிறது. 

 

முழு படமும் நாம் சிரித்து சிரித்து ரசிக்கும்படி இருந்தாலும், சந்தானம் வரும் காட்சிகள், அவர் பேசும் வசனங்கள் அனைத்தும் சிந்திக்கும்படி இருக்கிறது.

 

மொத்தத்தில், ‘குலுகுலு’ சந்தானத்திற்கு மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் வித்தியாசமான அனுபவமாக உள்ளது.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery