Casting : Kalidas Jayaram, Tanya Ravichandran, Renuka, Karunakaran, Nirmal Palazhi, Gouri Kishan, NaagiNeedu, Chinni Jayanth, Kali Venkat
Directed By : Krithika Udhayanidhi
Music By : Simon K.king, Vedshanker, Dharan kumar
Produced By : Rise East Entertainment - Sreenidhi Sagar
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இணைய தொடர் ‘பேப்பர் ராக்கெட்’. எப்படி இருக்கிறது, என்று விமர்சனத்தை பார்ப்போம்.
தந்தையின் இழப்பை தாங்க முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகும் நாயகன் காளிதாஸ் ஜெயராம், மனநல மருத்துவர் பூர்ணிமா பாக்யராஜை சந்திக்கிறார். அங்கு அவரைப் போலவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்திருக்கும் தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா, கருணாகரன், நிர்மல் பாலாழி, கெளரி கிஷன் ஆகியோருடன் நட்பு ஏற்படுகிறது.
இந்த ஆறு பேரும் சேர்ந்து ஒரு பயணம் போகிறார்கள். அந்த பயணத்தில் நடக்கும் சம்பவங்கள், அதனால் அவர்களுடைய வாழ்க்கையிலும், மனநிலையிலும் ஏற்படும் மாற்றங்களை மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் காட்டுவது தான் ’பேப்பர் ராக்கெட்’ தொடர்.
காளிதாஸ் ஜெயராமுக்கு சிறப்பான வேடம். அதற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது கதாப்பாத்திர வடிவமைப்பு அழகாக இருப்பதோடு படம் பார்ப்பவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் வகையிலும் இருக்கிறது.
நாயகி தான்யா மன அழுத்தத்திற்கு காரணமாக சொல்லப்படும் சம்பவம், பல படங்களில் சொல்லப்பட்டு வருவது தான் என்றாலும், தற்போதும் சமூகத்தில் தடுக்கப்பட முடியாத அசிங்கமாகவே இருந்து வருகிறது. மிக கோபமான சுபாவம் கொண்டவராக காட்டப்படும் தான்யா ரவிச்சந்திரன், வேடத்திற்கு ஏற்றபடி நடித்திருப்பதோடு, ஆண்வர்க்கத்திற்கு பாடம் புகட்டும்படியும் நடித்திருக்கிறார்.
எதை பார்த்தாலும் மரணம் தொடர்பாகவே பேசும் கருணாகரனின் கதாப்பாத்திரம் ஆரம்பத்தில் ஆத்திரத்தை உண்டாக்கினாலும், அதன் பிறகு அவர் கொடுக்கும் விளக்கம் மூலம் அந்த கதாப்பாத்திரமும் ரசிக்கும்படி மாறிவிடுகிறது.
கெளரி கிஷனுக்கு ஏற்பட்ட பிரச்சனை மன அழுத்தத்தையும் தாண்டியது. அதன் வலி பெரியது என்றாலும், அதையும் புன்னகையோடு விவரித்து, இதுவும் கடந்து போகும் என்ற ரீதியில் அந்த கதாப்பாத்திரம் கடந்து செல்வது அழகு.
ரேணுகாவின் கதாப்பாத்திரம் சற்று அதிர்ச்சியளித்தாலும், அந்த கதாப்பாத்திரத்தையும் ரசிக்கும்படி வடிவமைத்திருக்கிறார்கள். அவரும் வழக்கம் போல் தனது வசன உச்சரிப்பால் அந்த கதாப்பாத்திரத்தை மகிழ்ச்சியாகாவே கடந்து போக செய்கிறார்.
நிர்மல் பாலாழியின் பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும், படம் முழுவதும் அவர் நம்மை சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். அதிலும், அவர் தனது முன்னாள் காதலியை சந்திக்கும் காட்சிகள் அருமை.
காளிதாஸின் அப்பாவாக நடித்திருக்கும் நாகிநீடு, காளி வெங்கட், சின்னி ஜெயந்த், ஜி.எம்.குமார், அபிஷேக், பிரியதர்ஷினி உள்ளிட்ட படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைவரும் எதாவது ஒரு நல்ல விஷயத்தை பற்றி பேசி மனதிற்கு புத்துணர்ச்சி அளித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவில் நாம் ஏற்கனவே பார்த்த பகுதிகள் அனைத்தும் புதிதாக தெரிகிறது. குறிப்பாக காரைக்குடி, திருநெல்வேலி, மார்த்தாண்டம் என படத்தில் வரும் அனைத்து லொக்கேஷன்களையும் கூடுதல் அழகாக காட்டியிருக்கும் ரிச்சர்ட், அந்த இடங்களில் நாமும் பயணிப்பது போன்ற உணர்வை தருகிறார்.
சைமன் கே.கிங், தரண்குமார், வேத்சங்கர் என மூன்று பேர் இசையமைத்திருக்கிறார்கள். பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைப்பதோடு, உருகவும் வைக்கிறது. பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப இலகுவாக பயணிக்கிறது.
லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு மிக நேர்த்தியாக உள்ளது. இணைய தொடர்கள் திரைப்படத்தைக் காட்டிலும் நீளமானது என்றாலும், அனைத்து பகுதிகளையும் ஒரே சமயத்தில் பார்த்தாலும், அந்த உணர்வு நமக்கு ஏற்படாத வகையில் காட்சிகளை நகர்த்தி செல்கிறார்.
மனித உணர்வுகளை மையப்படுத்தி ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டிருக்கும் கிருத்திகா உதயநிதி, கதாப்பாத்திரங்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு சிக்கல்களையும் தீர்க்கும் விதத்தில், இயக்குநராக உயரத்தை தொட்டு விடுகிறார்.
பல இடங்களில் மிக ஆழமாக சிந்தித்திருக்கும் இயக்குநர் கிருத்திகா உதயநிதி, அதை விளக்கும் இடங்களில் காட்டும் எளிமை மற்றும் சாதாரணவர்களுக்கும் புரியும்படி சொல்லியிருக்கும் விதம் சபாஷ் சொல்ல வைக்கிறது.
ஒரு பாகம் முடிந்ததும், அடுத்த பாகத்தில் என்ன சொல்லப்போகிறார், இந்த சிக்கலை எப்படி தீர்க்க போகிறார், என்ற எதிர்ப்பார்ப்போடு நம்மை உட்கார வைப்பதோடு, அன்பு, காதல், பாசம் என அனைத்தையும் நம் நெஞ்சுக்கு அருகே கொண்டு வந்து தொடர் முழுவதையும் ரசித்து பார்க்க வைத்திருக்கும் கிருத்திகா உதயநிதி, அழவைத்து சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறார்.
மொத்தத்தில், ‘பேப்பர் ராக்கெட்’ இருக்கமான மனங்களை இலகுவாக்கும் அருமையான தொடர்.
ரேட்டிங் 4/5