Casting : Vaibhav, Varalaxmi Sarathkumar, Sonam Bajwa, Aathmika, Karunakaran, Manali Rathod
Directed By : Deekay
Music By : S. N. Prasad
Produced By : K. E. Gnanavel Raja
வைபவ், அவரது மனைவி சோனம் பஜ்வா, கருணாகரன், ரவி மரியா, ஆத்மிகா ஆகியோர் தங்கப்புதையலை தேடி ஒரு கிராமத்துக்கு செல்கிறார்கள். பகலில் மனிதர்களாக இருக்கும் அந்த கிராம மக்கள் இரவில் பேயாக மாறிவிடுகிறார்கள். இதனை அறிந்த வைபவ் உள்ளிட்டோர் அந்த கிராமத்தில் இருந்து வெளியேற முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. அந்த பேய் கிராமத்தின் பின்னணி என்ன?, கிரமாத்தில் சிக்கிக்கொண்டவர்கள் வெளியேறினார்களா? இல்லையா? என்பதை திகிலோடும், நகைச்சுவையோடும் சொல்வது தான் ‘காட்டேரி’-யின் கதை.
வைபவ் தனது அசட்டுத்தனமான நடிப்பில் வழக்கம் போல் கவர்கிறார். வசன உச்சரிப்பு, பேயிடம் இருந்து தப்பிக்க முயற்சிப்பது என்று தனது நடிப்பு மூலம் ரசிக்கவும் வைக்கிறார், சிரிக்கவும் வைக்கிறார்.
கண்களினாலேயே பல ரியாக்ஷன்களை ரிலீஸ் செய்யும் கருணாகரன், சோனம் பஜ்வாவை பார்க்கும் போதெல்லாம் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்ஸ் திரையரங்கையே அதிர வைக்கிறது. கருணாகரனின் இயல்பான வசன உச்சரிப்பும், டைமிங் ஜோக்கும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.
சோனம் பஜ்வா, ஆத்மிகா ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். பொன்னம்பலம், ரவி மரியா, ஜான் விஜய், மைம் கோபி என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் வழக்கம் போல் தங்களது நடிப்பால் கவனம் பெறுகிறார்கள்.
வரலட்சுமி சரத்குமாரின் எண்ட்ரி பதற வைக்கிறது. நான் அழகா இருக்கேனா, என்று கேட்டே அச்சப்பட வைக்கும் வரலட்சுமி சரத்குமார் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத் பேய் கிராமத்தை அழகாகவும் காட்டியிருக்கிறார். அச்சப்படும் வகையிலும் காட்டியிருக்கிறார்.
பேய் படங்களுக்கு ஏற்றபடி இசையாலும் நம்மை திகிலடைய செய்திருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.என்.பிரசாத்.
பேய் படங்கள் என்றாலே ஒரு பிளாஷ் பேக் இருக்கும், அதில் சிலர் சில காரணங்களுக்காக இறந்திருப்பார்கள், அவர்கள் பேயாக வந்து பழி வாங்குவார்கள். அப்படி ஒரு வழக்கமான பாணியை பின்னுக்கு தள்ளிவிட்டு இயக்குநர் டீகே, எழுதியிருக்கும் கதை வித்தியாசமாக இருப்பதோடு, சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.
கிணறு வெட்ட அதில் இருந்து வெளியே வரும் காட்டேரி, மூட்டை மூட்டையாக தங்கம் கொடுக்கிறது. ஆனால், அந்த தங்கத்திற்கு பதிலாக காட்டேரி கேட்கும் பொருளும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் சிரிக்கும்படியும், அலறும்படியும் சொல்லி இயக்குநர் டீகே அசத்தியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘காட்டேரி’ பேய் பட ரசிகர்களை கொண்டாட வைக்கும்.
ரேட்டிங் 3.5/5