Latest News :

’விக்டிம்’ ஆந்தாலஜி பட விமர்சனம்

994d70da5918ac2a973714a653bf74f8.jpg

Casting : Nazar, Prasanna, Guru Somasundaram, Amala Paul, Priya Bhavani Shankar, Natty, Kalaiyarasan, Hari Krishnan, Baby Tharani, Thambi Ramaiah

Directed By : Venkat Prabhu, Chimbudevan, Rajesh.M, Pa.Ranjith

Music By : Sam CS, Prem Ji, Ganesh Sekar, Tenma

Produced By : Axes Film Factory and Black Ticket Company

 

ஒரே கருவை மையமாக வைத்து நான்கு வெவ்வேறு கதைகளைக் கொண்ட ஆந்தாலஜி வகை திரைப்படம் ‘விக்டிம்’. பா.இரஞ்சித், சிம்புதேவன், எம்.ராஜேஷ் மற்றும் வெங்கட் பிரபு ஆகிய நான்கு பேர் இயக்கியுள்ள இப்படம் சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு கதையும் சுமார் 30 நிமிடங்கள் ஓடக்கூடியது. நான்கு கதைகளையும் சேர்த்து சுமார் இரண்டு மணி நேரம் ஓடும் இந்த படம் எப்படி இருக்கிறது? விமர்சனத்தை பார்ப்போம்.

 

பா.இரஞ்சித்தின் ‘தம்மம்’

 

ஆதிக்க மனோபாவம் கொண்ட நிலச்சுவாந்தரால் அடித்தட்டு விவசாயி ஒருவர் எப்படி பாதிக்கப்படுகிறார், என்பது தான் கதை. மறைமுகமாக அரசியல் பேசியிருக்கும் இந்த படத்தின் வசனங்கள் மிக அழுத்தமாக இருக்கிறது. குரு சோமசுந்தரம், கலையரசன், ஹரி கிருஷ்ணன், பேபி தாரணி ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தின் முழு கதை வயல்வெளியில் நடக்கிறது. ஆதிக்க வர்க்கத்திடம் முந்தைய தலைமுறைக்கு இருந்த பயம், அடுத்த தலைமுறைக்கு இல்லை, என்பதை பேபி தாரணி கதாப்பாத்திரம் மூலம் அழுத்தமாக சொல்லியிருப்பது சபாஷ் சொல்ல வைக்கிறது.

 

Guru Somasundaram

 

குரு சோமசுந்தரம், கலையரசன், ஹரி கிருஷ்ணன், பேபி தாரணி ஆகியோரது நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது. குறிப்பாக வயல்வெளியில் நடக்கும் சண்டைக்காட்சி ஒரிஜினல் சண்டைப்போல் மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்கள். தமிழ் அழகனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். சிறுமி மீன் பிடிக்கும் காட்சி ஆச்சரியம் தருகிறது. வயல்வெளியை ஏரியல் ஷாட்டில் காட்டியது, சண்டைக்காட்சியை படமாக்கிய விதம் என படத்தை தொழில்நுட்ப ரீதியாக தூக்கி நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன். தென்மாவின் இசை படத்திற்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது.

 

சிம்பு தேவனின் ‘கொட்டைபாக்கு வத்தலும், மொட்டை மாடி சித்தரும்’

 

கொரோனா ஊரடங்கு காலத்தில் நிருபர் ஒருவர் தனது வேலையை காப்பாற்றிக்கொள்ள மொட்டை மாடி சித்தரை சிறப்பு பேட்டி எடுக்க முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா, என்பது தான் இதன் கதை. சிம்புதேவன் தனது வழக்கமான ஃபாண்டசி முறையில் அரசியல் நையாண்டி செய்திருக்கிறார். தம்பி ராமையா, நாசர், விஜே விக்கி ஆகியோர் இதில் நடித்திருக்கிறார்கள்.

 

Nazar

 

சித்தராக நாசர் சிறப்பாக நடித்திருக்கிறார். நிருபராக தம்பி ராமையா வழக்கம் போல் ஓவராக நடித்திருக்கிறார். விஜே விக்கி கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

 

Thambi Ramaiah

 

வெங்காய விலை ஏற்றத்திற்கு அமைச்சர் சொல்லும் பதில், தம்பி ராமையா கேட்கும் அரசியல் கேள்விகளுக்கு நாசர் சொல்லும் பதில் போன்றவை ரசிக்க வைத்தாலும், கதை என்னவோ ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. அதே சமயம், கதையில் வைக்கப்பட்ட நான்கு கிளைமாக்ஸுகளும் நல்ல மெசஜை சொன்னாலும், நம் வாழ்க்கையில் நடப்பவை அனைத்தும் ஏற்கனவே எழுதப்பட்டவை, என்று சொல்லும் மெசஜ் நம்மை முட்டாளுக்கும் விதமாக இருக்கிறது.

 

எம்.ராஜேஷின் ‘மிரேஜ்’ (Mirrage)

 

வேலை விஷயமாக சென்னைக்கு வரும் பிரியா பவானி சங்கர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்குகிறார். அங்கு நடக்கும் சில அமானுஷ்ய விஷயங்களால் பதறிப்போகும் பிரியா பவானி சங்கர், அங்கிருந்து தப்பித்தாரா? இல்லையா?, அந்த அமானுஷ்யத்தின் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் கதை.

 

Priya Bhavani Shankar

 

பிரியா பவானி சங்கர் மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் மட்டுமே இந்த கதையில் நடித்திருக்கிறார். நட்டி மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.

 

Natty

 

காமெடியில் கலக்கிக் கொண்டிருந்த இயக்குநர் ராஜேஷ், திகில் படத்தின் பக்கம் வந்திருக்கிறார். கதையில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள், படம் பார்ப்பவர்களின் மனதில் பல கேள்விகளை எழுப்புவதோடு, கதையில் என்னவோ நடக்கப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. ஆனால், படம் முடியும் போது இயக்குநர் ராஜேஷ் கொடுக்கும் முடிவு பெரிய ஏமாற்றத்தை கொடுக்கிறது.

 

வெங்கட் பிரபுவின் ‘கன்ஃபெக்‌ஷன்’ (Confession)

 

அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசிக்கும் அமலா பாலை, பிரசன்னா கொலை செய்ய முயற்சிக்கிறார். கொலை செய்யாமல் இருக்க வேண்டுமானால் அமலா பால் வாழ்க்கையில் செய்த தவறுகளை சொல்லுமாறு கேட்கிறார். அதன்படி தனது வாழ்க்கையில் நடந்த தவறுகளை பிரசன்னாவிடம் அமலா பால் ஒவ்வொன்றாக சொல்ல, பிரசன்னா அவரை கொலை செய்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

 

Amala Paul

 

அமலா பால் மற்றும் பிரசன்னா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த கதையை வெங்கட் பிரபு தனது பாணியில் கிளுகிளுப்பாக இயக்கியிருக்கிறார். அமலா பால் கணவனிடம் பேசும் காட்சிகள் இளசுகளை ஈர்க்கும்படி உள்ளது. அமலா பால் இயல்பாக நடித்திருக்கிறார். பிரசன்னாவும் அவருக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார்.

 

சென்னையில் துப்பாக்கி கலாச்சாரம், அதுவும் ஸ்னைபர் ஷாட் துப்பாக்கி என்பது எல்லாம் ஒட்டாத விஷயங்களாக இருக்கிறது. கதையின் இறுதியில் வரும் ட்விஸ்ட் ரசிக்கும்படியாக இருந்தாலும், அதன் பிறகு நடப்பவையும், படத்தின் இறுதிக்காட்சியும் முழுமை பெறாமல் இருப்பது படத்திற்கு பெரிய பலவீனம்.

 

Prasanna

 

இந்த நான்கு கதைகளும் ஒரே கருவை மையமாக கொண்டதாக தான் இருக்க வேண்டும். ஆனால், பா.இரஞ்சித்தின் ‘தம்மம்’ கதையை தவிர மற்ற மூன்று கதைகளும் ட்விஸ்ட் என்ற ஒரே கருவை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த ட்விஸ்ட்டை மட்டுமே சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்களே தவிர, முழுமையான கதையாக சுவாரஸ்யமாக சொல்ல சற்று தடுமாறியிருக்கிறார்கள்.

 

இருந்தாலும், இரண்டு மணி நேரம் நம் கவனத்தை ஈர்க்கும் வகையில் நான்கு கதைகளும், அதை படமாக்கிய விதமும் அமைந்துள்ளது.

 

மொத்தத்தில் ‘விக்டிம்’ குறையில்லை.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery