Casting : Bharath, Anoop Khalid, Viviya Santh, Adil Ibrahim, Anumohan
Directed By : Sunish Kumar
Music By : Kailas Menon
Produced By : Anoop Khalid
நகருக்கு வெளியே இருக்கும் ஒரு பாழடைந்த பங்களாவில், 20 கோடி ரூபாய் இருப்பதை தெரிந்துக்கொள்ளும் நான்கு கொள்ளையர்கள் அந்த பணத்தை திருட முடிவு செய்கிறார்கள். ஆளே இல்லை என்று நினைத்துக்கொண்டு அந்த பாழடைந்த பங்களாவுக்குள் நுழையும் அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பரத் அங்கு இருக்கிறார். பார்வை இல்லாத பரத் கொள்ளையர்களிடம் இருந்து பணத்தை பாதுகாத்தாரா? இல்லையா? என்பதை விறுவிறுப்பாகவும், திரில்லராகவும் சொல்வது தான் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’.
சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரத், பார்வையற்றவர் கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்ப்பதோடு, ஆக்ஷன் காட்சிகளில் அசுரத்தனமாக நடித்திருக்கிறார். முன் கதையில் வேறு ஒரு பரத்தாக வந்து நெகிழ வைக்கவும் செய்கிறார்.
கொள்ளையர்களாக நடித்திருக்கும் அனூப் காலித், விவியா சாந்த், அடில் இப்ராஹிம், அனுமோகன் ஆகியோர் அளவான நடிப்பு மூலம் கவர்கிறார்கள். பரத்தின் அதிரடியான தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறும் காட்சிகளில் நான்கு பேரின் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
இசையமைப்பாளர் கைலாஸ் மேனனின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்ப்பதோடு, திகிலையும் கூட்டியிருக்கிறது. ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த் பாழடைந்த பங்களாவையும், பரத்தையும் பயங்கரமாக காட்டியிருப்பதோடு, சண்டைக்காட்சிகளை வித்தியாசமாகவும் படமாக்கியிருக்கிறார்.
கொள்ளை சம்பவத்தை கருவாக வைத்துக்கொண்டு பரபரப்பாக கதை சொல்லியிருக்கும் இயக்குநர் சுனிஷ்குமார், திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார்.
பரத் மற்றும் நான்கு கொள்ளையர்கள் கதாப்பாத்திரத்தை கையாண்ட விதமும், அவர்களுக்கு இடையே நடக்கும் மோதலும் படத்தை ரசிக்க வைக்கிறது.
மொத்தத்த்தில், ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ பரத்தின் பெஸ்ட் படங்களில் ஒன்றாக இருக்கும்.
ரேட்டிங் 3/5