Casting : Vidharth, Krishna, Thanshika, Venkat Prabhu
Directed By : Meera Kathiravan
Music By : Sathyan Mahalingam
Produced By : Meera Kathiravan
நான்கு வெவ்வேறு கதைகள், ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாத மனிதர்கள். ஆனால், சூழ்நிலை இவர்களை ஒன்றாக இணைப்பதோடு, தொடர்பு இல்லாத இவர்களுக்குள் தொடர்பையும் ஏற்படுத்துகிறது. அது எப்படி என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருப்பது தான் ‘விழித்திரு’ படத்தின் கதை.
ஊருக்கு செல்லும் கிருஷ்ணா தனது பணத்தை தொலைத்துவிட்டு, ஊருக்கு செல்ல முடியாமல் பணத்திற்காக இரண்டு மணி நேரம் டிரைவர் வேலை செய்ய, அவர் காரில் வரும் நிருபர் ஒருவரை அமைச்சரின் ஆட்கள் சுட்டுக் கொலை செய்துவிடுகிறார்கள். கொலையை பார்த்த சாட்சியான கிருஷ்ணாவையும் அந்த கும்பல் கொலை செய்ய நினைக்க, அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆக கிருஷ்ணா ஓடிக்கொண்டிருக்கிறார்.
அதே சமயம், தனது மகளை தொலைத்து விட்டு தேடும் பார்வையற்ற வெங்கட் பிரபு ஒரு பக்கம். திருடர்களான விதார்த், தன்ஷிகா ஒரு பக்கம், பெரும் பணக்காரரான ராகுல் ஒரு பக்கம், என்று வெவ்வேறு பிரச்சினைகளால் சென்னையில் இரவில் சுற்றிக் கொண்டிருக்கும் இவர்கள், இறுதியில் கிருஷ்ணாவின் விஷயத்தில் சம்மந்தப்படுவதோடு, அவரை சிக்கலில் இருந்து காப்பாற்றவும் முயற்சிக்கிறார்கள். அதை அவர்கள் செய்தார்களா இல்லையா, அவர்களது பிரச்சினைகள் தீர்ந்ததா, என்பது தான் க்ளைமாக்ஸ்.
ஒரே இரவில் நடக்கும் கதையம் கொண்ட, இது போன்ற படங்கள் சில ஏற்கனவே தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும், இயக்குநர் மீரா கதிரவனின் விறுவிறுப்பான திரைக்கதையும் சுவாரஸ்யமாக காட்சிகளும் நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கிறது.
கிருஷ்ணா, விதார்த், தன்ஷிகா, வெங்கட்பிரபு, ராகுல் என்று அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் நடித்திருக்கிறார்கள்.
வெங்கட் பிரபு கதை கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தாலும், கிருஷ்ணாவின் பிரச்சினையில் அவர்கள் சம்மந்தப்படும் போது படம் சுவாரஸ்யமாகிறது.
ஒளிப்பதிவாளர்கள் விஜய் மில்டன், ஆர்.வி.சரவணன் ஆகியோர் இரவு நேர சென்னையை பிரமாதமாக படமாக்கியிருக்கிறார்கள். சத்யன் மஹாலிங்கத்தின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
படத்தில் இடம்பெறும் நான்கு கதைகளும், கதாபாத்திரங்களும் இறுதியில் ஒரே கோட்டில் சந்திக்க போகிறார்கள், என்பது ஆரம்பத்திலேயே ரசிகர்களுக்கு தெரிந்துவிட்டாலும், அது எப்படி நிகழ போகிறது, என்பதற்காக திரைக்கதையையும், காட்சிகளையும் இயக்குநர் மீரா கதிரவன் சுவாரஸ்யமாக அமைத்திருக்கிறார். கூடவே, டி.ராஜேந்தரை ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட வைத்து படபடப்பாக இருக்கும் ரசிகர்களை சற்று நேரத்திற்கு குஷிப்படுத்துகிறார்.
மொத்தத்தில், சினிமா ரசிகர்களுக்கான ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக உள்ளது இந்த ‘விழித்திரு’
ஜெ.சுகுமார்