Casting : Amala Paul, Riythvika, Munishkanth, Harish Uthaman, Athulya, Thrigun
Directed By : Anoop S.Panicker
Music By : Ranjin Raj
Produced By : Amala Paul
அமலா பால் நடித்து தயாரித்துள்ள படம் ‘கடாவர்’. அறிமுக இயக்குநர் அனுப் எஸ்.பணிக்கர் இயக்கியிருக்கும் இப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது? விமர்சனத்தை பார்ப்போம்.
இதய அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதை காவல்துறை தடவியல் நிபுணரான அமலா பால் கண்டுபிடிக்கிறார். அந்த கொலை வழக்கு குறித்து விசாரிக்கும் போலீஸ் சிறையில் இருக்கும் திரிகுன் மீது சந்தேகப்படுகிறது. ஆனால், அவர் சிறையில் இருக்கும்போதே மற்றொரு மருத்துவர் கொலை செய்யப்படுகிறார். அந்த மருத்துவரை கொலை செய்ததும், இதய அறுவை சிகிச்சை மருத்துவரை கொலை செய்ததும் ஒரே நபர் தான் என்பதை அமலா பால் தனது தடவியல் மூலம் கண்டுபிடிக்கிறார்.
கொலைகளுக்கான காரணம் குறித்தும், கொலையாளி யார்? என்பதையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸும், அமலா பாலும் இறங்க, பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது. அந்த உண்மைகள் என்ன? அந்த கொலையாளி யார்? என்பதை சஸ்பென்ஸாகவும், பரபரப்பாகவும் சொல்வது தான் ‘கடாவர்’ படத்தின் கதை.
மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் மனித உடல்களை தான் கடாவர் என்று அழைப்பார்கள். படத்தின் நாயகி தடவியல் நிபுணர் என்பதாலும், மருத்துவத்துறையில் நடக்கும் க்ரைம் பற்றிய கதைக்களம் என்பதாலும் இந்த தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
பத்ரா என்ற தடவியல் நிபுணர் கதாப்பாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் அமலா பால், தனது உருவத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். அனுபவம் மிக்க நடிப்பு மூலம் தனது கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கும் அமலா பால், பல இடங்களில் கம்பீரமான நடிப்பு மூலம் அப்ளாஷ் பெறுகிறார்.
கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் அதுல்யா ரவி, தனது துடிதுடிப்பான நடிப்பு மூலம் கவனம் பெறுவதோடு, தனது மரணம் மூலம் பதறவும் வைக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஹரிஷ் உத்தமன், அதுல்யாவின் கணவராக நடித்திருக்கும் திரிகுன், அமலா பாலின் உதவியாளராக வரும் வினோத் சாகர், முனிஷ்காந்த், ரித்விகா சிங் என படத்தில் வரும் அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, கதையோடு பயணிக்கும் கதாப்பாத்திரங்களாகவும் இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கின் கேமரா திரில்லர் படங்களுக்கு ஏற்றவாறு பயணித்திருப்பதோடு, உடல் தடவியல் பரிசோதனை காட்சிகளை உண்மையாக நடப்பது போலவே காட்சிப்படுத்தி ஆச்சரியமூட்டுகிறது. அதிலும் அதுல்யா ரவியின் புதைத்த உடலை மீண்டும் தோண்டி எடுப்பது, தடவியல் பரிசோதனை செய்யும் காட்சிகளில் வியக்க வைத்திருக்கிறார்.
ரஞ்சின் ராஜின் இசையில் பாடல்கள் இனிமையாக இருக்கிறது. சோகமான சூழ்நிலையில் ஒலிக்கும் பாடல்கள் கூட கேட்பதற்கு சுகமாக இருக்கிறது. அளவான பின்னணி இசை மூலம் கவனிக்க வைத்திருக்கிறார்.
மருத்துவத்துறையில் நடக்கும் குற்ற சம்பவத்தை சுற்றி கதை நகர்கிறது. ஏற்கனவே பல படங்களில் பேசப்பட்ட கரு என்பதால், சற்று வித்தியாசமாக காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ். ஆனால், அவை சட்டென்று புரியும்படி இல்லாமல், தலையை சுத்தி மூக்கை தொடுவது போல் இருக்கிறது.
அபிலாஷ் பிள்ளையின் கதைக்கு அனூப் எஸ்.பணிக்கர் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். மருத்துவத்துறையில் நடக்கும் குற்ற சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் விறுவிறுப்பான திரைக்கதையும், காட்சி அமைப்புகளும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஏற்கனவே பல படங்களில் கையாளப்பட்ட கரு தான் என்றாலும், திரைக்கதையில் அமைத்த கிளைக்கதைகள் மற்றும் கொலை வழக்கு குறித்து அமலா பாலும், போலீஸும் விசாரிக்கும் போது வரும் திருப்புமுனைகள், கொலையாளி யார்? என்பதை யூகிக்க முடியாதபடி காட்சிகள் கையாளப்பட்டிருப்பது போன்றவை மற்ற படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.
மொத்தத்தில், ‘கடாவர்’ ரசிகர்களை கலைப்பின்றி ரசிக்க வைக்கும் க்ரைம் த்ரில்லர் படம்.
ரேட்டிங் 3/5