Latest News :

’எமோஜி’ இணைய தொடர் விமர்சனம்

6ac25041c4eb13566dfb4897faf87511.jpg

Casting : Mahat Raghavendra, Devika Satheesh, Manasa Chowdary, VJ Ashiq, Aadukalam Naren, Priya Dharshi

Directed By : SEN.S. Rangasamy

Music By : Sanath Bharadwaj

Produced By : Ramanaa Arts - A.M Sampath Kumar

 

ஆஹா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இணைய தொடர் ‘எமோஜி’. ரமணா ஆர்ட்ஸ் தயாரிப்பில், சென் எஸ்.ரங்கசாமி இயக்கத்தில் மஹத் ராகவேந்திரா, தேவிகா சதீஷ், மானசா செளத்ரி ஆகியோர் நடித்துள்ள இத்தொடர் மொத்தம் 7 பாகங்களை கொண்டது.

 

காதல், மோதல், சந்தோஷம், துக்கம், கோபம், ஏமாற்றம் என உணர்வுகள் அனைத்தையும் தற்போதைய காலக்கட்ட இளைஞர்கள் எமோஜிக்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்கள். அப்படி அனைத்து உணர்வுகளையும் காதல் மூலம் கடந்து செல்லும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை கவிதைப்போல் இனிமையாக சொல்வது தான் இந்த ‘எமோஜி’ இணைய தொடரின் கதை.

 

நாயகன் மஹத் ராகவேந்திராவின் வாழ்வில் காதலியாகவும், மனைவியாகவும் வரும் இரண்டு பெண்கள் அவரை விட்டு பிரிந்து செல்கிறார்கள். அது ஏன்? என்பதை திகட்டாத காதலோடும், நெருடல் இல்லாத காமத்தோடும் சொல்லி நம் மனதை மயக்குகிறது இந்த எமோஜி.

 

நாயகனாக நடித்திருக்கும் மஹத் ராகவேந்திராவின் இளமையும், அழகும் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தாலும் அவரது நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு சிம்பு போலவே இருக்கிறது. எப்போதும் சிம்புவுடன் இருப்பதற்காக அப்படியே சிம்பு போலவே நடித்திருப்பதை கூட ஏற்றுக்கொள்ளாலாம். ஆனால், அனைத்து காட்சிகளிலும் ஒரே மாதிரியாக நடித்திருப்பதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிலும், சோகம், சந்தோஷம் இரண்டுக்கும் ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷனை கொடுக்கும் மஹத், காதல் மற்றும் ஊடல் காட்சிகளில் கூட தெம்பு இல்லாமல் நடித்திருப்பதை சகித்துக்கொள்ள முடியவில்லை.

 

மஹத்தின் காதலியாக நடித்திருக்கும் மானசா செளத்ரி ஆண்மைத்தனம் கலந்த அழகியாக கிரங்கடிக்கிறார். அவரை கடந்து செல்பவர்கள் யாரும் அவரை காதலிக்காமல் இருக்க மாட்டார்கள், அந்த அளவுக்கு தனது கண்களினாலேயே பேசுகிறார்.

 

Emoji

 

மஹத்தின் மனைவியாக நடித்திருக்கும் தேவிகா சதீஷ், அழகில் மட்டும் அல்ல நடிப்பிலும் அதிகம் கவனம் பெறுகிறார். கல்லு குடித்துவிட்டு திருமண வீட்டில் அவர் செய்யும் அலப்பறை அவரது அல்டிமேட் நடிப்பு. கோலிவுட்டில் அம்மணிக்கு பெரிய எதிர்காலம் உண்டு.

 

மஹத்தின் நண்பராக நடித்திருக்கும் விஜே ஆஷிக் அளவான நடிப்பால் கவனம் பெறுவதோடு, தனது அளவான பேச்சால் சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். ஆடுகளம் நரேன், பிரியதர்ஷினி என்று சிறு சிறு வேடத்தில் நடித்தவர்கள் கூட நம் மனதில் நிற்கும் அளவுக்கு கதையை கடந்து செல்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசன், ஐடி இளைஞர்களின் ஆடம்பர வாழ்க்கையை நேர்த்தியாகவும், கதாப்பாத்திரங்களை அழகாகவும் காட்டியிருக்கிறார். அதிலும் காதல் மற்றும் ஊடல் காட்சிகளை படமாக்கிய விதம் படம் பார்ப்பவர்களையும் பரவசப்படுத்துகிறது.

 

சனத் பரத்வாஜ் இசையில் இடம்பெற்ற பாடல்கள் இனிமை. சில இடங்களில் பாடல்கள் ஏன் இல்லை, என்றும் தோன்றுகிறது. ஆனால், பின்னணி இசை தான் ஒரே மாதிரியாக இருக்கிறது. படம் முழுவதும் ஒரே இசையை கேட்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இருந்தாலும், இனிமையான காதலுக்கு ஏற்ற இதமான இசையாகவே இருக்கிறது.

 

கதை எழுதி இயக்கியிருக்கும் சென் எஸ்.ரங்கசாமி திரைக்கதையை ஆழமாகவும், காட்சிகளை அழகாகவும் வடிவமைத்திருப்பதோடு, இயல்பான வசனங்கள் மூலம் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

 

காதலில் எதிர்ப்பார்ப்பு இருக்க கூடாது என்பதையும், காமம் கலந்து வருவது தான் காதல் என்பதையும் அழகியலோடு சொல்லியிருக்கும் இயக்குநர் காதலர்கள், திருமண தம்பதிகள், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் போராடிக்காத வகையில் பாடமும் எடுத்துள்ளார்.

 

முழுக்க முழுக்க காதலை மட்டுமே சுற்றி சுற்றி கதை நகர்ந்தாலும், காதல் காட்சிகள் மற்றும் காதலர்களின் ஊடல் காட்சிகள் இளைஞர்களை கவர்ந்திழுப்பதோடு, மூத்தவர்களையும் ரசிக்க வைக்கும்படி இருக்கிறது. 

 

7 பாகங்களையும் மொத்தமாக பார்த்தாலும் நேரம் போனதே தெரியாதபடி அனைத்து பாகங்களையும் மிக சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும் இயக்குநர் சென் எஸ்.ரங்கசாமி, கணவன் - மனைவி பிரிவு ஏன்?  என்பதை தெரிந்துக்கொள்ள 7 வது பாகத்தையும் எதிர்ப்பார்ப்போடு பார்க்க வைக்கிறார்.

 

மொத்தத்தில் ‘எமோஜி’ அனைத்து உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தும் சுவாரஸ்யமான காதல் கதை.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery