Casting : Dhanush, Nithya Menon, Prakashraj, Bharathiraja, Priya Bhavani Shankar, Rashi Khanna, Sriranjani, Mu Ramasamy, Munishkanth
Directed By : Mithran R Jawahar
Music By : Anirudh Ravichander
Produced By : Kalanithi Maran
தனுஷின் அப்பா பிரகாஷ்ராஜ், பிரகாஷ் ராஜுக்கு அப்பா பாரதிராஜா என மூன்று ஆண்கள் ஒன்றாக இருக்கிறார்கள். ஆனால், தனுஷ் தனது அப்பாவிடம் பேசாமல் இருப்பதோடு அவரைப் பார்த்தாலே கடும்கோபம் கொள்கிறார். தாத்தாவுடன் மட்டுமே தனுஷ் பேசுகிறார். பிரகாஷ்ராஜும் தனுஷைப் போலவே தனது அப்பாவிடம் மட்டுமே பேசுகிறார். ஒரே வீட்டில் இருந்தும் இப்படி பிரிந்து இருக்கும் மகன் - தந்தை மோதல் முடிவுக்கு வந்ததா? இல்லையா?, அவர்களுடைய இந்த நிலைக்கு காரணம் என்ன? என்பதோடு, தனுஷின் காதல் வாழ்க்கையில் வரும் மூன்று பெண்களில் யாரை தனுஷ் கரம் பிடித்தார்? என்பதை காதல் சொட்ட சொட்ட சொல்வது தான் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் கதை.
உணவு டெலிவரி செய்யும் நபராக நடித்திருக்கும் தனுஷ், அப்பா மீது காட்டும் கடும்கோபத்திலும், தாத்தா மீது காட்டும் பாசத்திலும் நடிப்பில் மிளிர்கிறார். கண் முன்னே நிற்கும் காதலை மறந்து, எங்கேயோ காதலை தேடிச்சென்று சங்கடத்தில் சிக்கித்தவிக்கும் போது தனுஷின் இயல்பான நடிப்பும், ரியாக்ஷனும் அவர் மீது பரிதாபப்பட வைக்கிறது. அடிதடி என்றால் பயம் என்று கூறி அமைதியாக போகும் தனுஷை அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றாலும், அதற்கான காரணமும், அதற்கு ஏற்ப தனுஷ் வெளிப்படுத்திய நடிப்பும், இப்படியும் அவரை ரசிக்கலாம் என்பதை நிரூபிக்கிறது.
தனுஷின் தந்தையாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மகன் கோபமடையும் போதெல்லாம் அவர் மவுனமாவது, பதிலுக்கு கோபமடைவது என்று தனது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
தனுஷின் தாத்தாவாக நடித்திருக்கும் பாரதிராஜாவின் கதாப்பாத்திரமும், நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. சண்டைப்போட்டுக் கொள்ளும் அப்பா - மகன் இடையே பாலமாக இருக்கும் பாரதிராஜாவின், முதிர்ச்சியான நடிப்பும், தனுஷ் உடனான அவரது கெமிஸ்ட்ரியும் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது.
தனுஷின் தோழியாக நடித்திருக்கும் நித்யா மேனன் ஒட்டு மொத்த நடிகர்களுக்கும் போட்டியாக நடித்திருக்கிறார். படத்தின் நாயகன் தனுஷ் பயணிக்கும் அத்தனை கதாப்பாத்திரங்களுடனும் பயணிக்கும் மிக அழுத்தமான கதாப்பாத்திரத்தை அசால்டாக கையாண்டிருக்கும் நித்யா மேனன், தனது துறுதுறு நடிப்பு மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டு விடுகிறார்.
பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா என்று மேலும் இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும், அவர்களுக்கு சில காட்சிகளும் ஒரு பாடலும் தான். அதையும் அவர்கள் சரியாக செய்து மனதில் நிற்கிறார்கள்.
முனிஷ்காந்த், ஸ்ரீரஞ்சனி, மு.ராமசாமி என சிறு சிறு வேடத்தில் நடித்திருக்கும் நடிகர்களும், அவர்களது கதாப்பாத்திரமும் ரசிக்கும்படியும், மனதில் நிற்கும்படியும் உள்ளது.
அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாகவும், தாளம் போடும் வகையிலும் இருக்கிறது. பின்னணி இசையும் கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்துள்ளது.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் நகரம் மற்றும் கிராமம் இரண்டுமே அழகாக இருக்கிறது. பாடல் காட்சிகளை படமாக்கிய விதம் ரசிக்க வைக்கிறது.
அப்பா - மகன் இடையே இருக்கும் மோதல் பிறகு அவர்களுக்கு இடையே இருக்கும் பாசம், போன்றவற்றை ஏற்கனவே பார்த்திருந்தாலும் அதையே வேறு ஒரு வடிவத்தில் அழகாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர், படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படாத வகையில் காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.
தாத்தா, அப்பா, மகன் ஆகியோர் சேர்ந்து இருப்பதை பார்க்கும் போதெல்லாம் இப்படி ஒரு பாக்கியம் நமக்கு கிடைக்காதா!, என்று நம்மை ஏங்க வைக்கும் இயக்குநர், மறுபக்கம் காதலை மிக நாகரீகமாக காட்சிப்படுத்தியதோடு, காதல் என்றால் என்ன? என்பதை இளைஞர்களுக்கு மட்டும் இன்றி பெரியவர்களுக்கும் புரிய வைத்திருக்கிறார்.
ஆக்ஷன் மாஸ் ஹீரோவான தனுஷை மயில் இறகு போல மிக மென்மையாக காட்டுவதோடு, அவரது அமைதியான மற்றும் அழகான வாழ்க்கையோடு நம்மையும் பயணிக்க வைக்கும் படம், பாசம், காதல் போன்ற உணர்வுகளின் சுகத்தை அனுபவிக்க வைத்து மகிழ்ச்சியடைய செய்கிறது.
மொத்தத்தில், ‘திருச்சிற்றம்பலம்’ குடும்பத்தோடு பார்ப்பதற்கான மிக சிறந்த படமாக மட்டும் இன்றி காதலர்கள் கொண்டாடும் கவிதையாகவும் இருக்கிறது.
ரேட்டிங் 4/5