Casting : Arun Vijay, VaniBhojan, Ishwarya Menon, Azhagam Perumal, M.S. Baskar, Vinodhini, G.Marimuthu, Tharun Kumar, VinodSagar, Sharath Ravi, Jhonny, Kaakamuttai Ramesh, KakkamuttaiVignesh, AjitJoshy
Directed By : Arivazhagan
Music By : Vikas
Produced By : AVM PRODUCTIONS - Aruna Guhan and Aparna Guhan Shyam
அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடிப்பில், அறிவழகன் இயக்கத்தில் ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருணா குகன் மற்றும் அபர்ணா குகன் தயாரித்திருக்கும் இணையத்தொடர் ‘தமிழ் ராக்கர்ஸ்’. சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இத்தொடர் எப்படி இருக்கிறது? விமர்சனத்தை பார்ப்போம்.
தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதும் பெரும்பாலானோர் அறிந்தது தான். ஆனால், அவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? அவர்கள் எப்படி இந்த தளத்தை ஆரம்பித்திருப்பார்கள்? என்பது பற்றி யாரும் அறிந்திறாத சில உண்மை சம்பவங்களுடன், கற்பனை கலந்து 8 பாகங்களாக சொல்லியிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரின் நடிப்பில் 300 கோடி ரூபாயில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. அந்த படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பு நாங்கள் வெளியிடுவோம், என்று தமிழ் ராக்கர்ஸ் சவால் விடுகிறார்கள். அவர்களின் சவாலை முறியடிக்க படத்தின் தயாரிப்பாளர் போலீஸ் உதவியை நாடுகிறார்.
மர்ம நபர்களால் மனைவி கடத்தப்பட்டதால் மனம் தளர்ந்திருக்கும் போலீஸ் அதிகாரியான அருண் விஜயிடம், தமிழ் ராக்கர்ஸ் வழக்கை ஒப்படைக்கும் உயர் அதிகாரி, அருண் விஜயின் மனைவியை கடத்தியவர்களுக்கும், தமிழ் ராக்கர்ஸை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்ல, அருண் விஜய் தமிழ் ராக்கர்ஸின் சவாலை முறியடித்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்குகிறார். இறுதியில் அருண் விஜய் வெற்றி பெற்றாரா? அல்லது தமிழ் ராக்கர்ஸ் வெற்றி பெற்றார்களா? அருண் விஜயின் மனைவி கடத்தல் சம்பவத்திற்கும் தமிழ் ராக்கர்ஸ் அமைப்புக்கும் தொடர்பு இருப்பது உண்மையா? என்பதை பரபரப்பாக சொல்வதோடு, தமிழ் ராக்கர்ஸின் மற்றொரு அதிர்ச்சிகரமான பக்கத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
காக்கி சட்டை போடாத போலீஸாக அருண் விஜய், வழக்கம் போல் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். சினிமா பார்க்கும் பழக்கம் இல்லை என்று சொல்பவர், பிறகு திரைப்பட தயாரிப்பாளர்களின் வலியை உணர்ந்து மனம் மாறுவது, பிறகு தமிழ் ராக்கர்ஸை பிடிக்க தீவிரம் காட்டுவது என்று படம் முழுவதும் கம்பீரமாக வலம் வருகிறார்.
சைபர் க்ரைம் போலீஸ் துறையில் பணியாற்றும் வாணி போஜன் கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருந்தாலும், அவருக்கு கொடுக்கப்பட்ட பின்னணி குரல் கதாப்பாத்திரத்துடன் ஒட்டாமல் பயணிப்பது சில இடங்களில் ரசிகர்களை சலிப்படைய செய்கிறது.
அருண் விஜய்க்கு மனைவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா மேனன், அவ்வபோது தலைக்காட்டி விட்டு மறைகிறார். அவர் கடத்தப்பட்டது ஏன்? என்பதை சொல்லாமல், இறுதியில் அவரை கடத்தியது யார்? என்பதற்கான பதிலை சொல்லியிருப்பதால் அடுத்த எப்பிசோட்டில் அவரை பார்க்கலாம்.
திரைப்பட தயாரிப்பாளராக நடித்திருக்கும் அழகம்பெருமாளின் நடிப்பு அசத்தல். இறுதி காட்சியில் அவருக்கு ஏற்படும் நிலை தயாரிப்பாளர்களின் அவல நிலையை நினைவுப்படுத்துகிறது. ஒரு காட்சியில் வந்தாலும் ரசிகர்களின் மனதில் பதியும் விதத்தில் எம்.எஸ்.பாஸ்கர் பர்பாமான்ன்ஸ் செய்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் தருண் குமார் கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். வினோதினி, மாரிமுத்து, வினோத் சாகர், சரத் ரவி, ஜானி, காக்கா முட்டை ரமேஷ், காக்கா முட்டை விக்னேஷ், அஜித் ஜோஷி என மற்ற நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பி.ராஜசேகர் மிகப்பெரிய பலமாக பயணித்துள்ளார். இரவு நேர காட்சிகளையும், ஆக்ஷன் காட்சிகளையும் அமர்க்களமாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர், க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கு ஏற்றவாறு 8 தொடர்களையும் படமாக்கியிருக்கிறார்.
விகாஷின் பின்னணி இசை மற்றும் பீஜியம் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி செல்வதோடு, பல இடங்களில் அளவான இசை மூலம் தொடாருக்கு பலமாகவும் பயணித்துள்ளது.
கலை இயக்குநர் பி.பி.சரவணன் பல செட்களை தத்ரூபமாக போட்டுள்ளார். பர்மா பஜார், பழைய விசிடி-கள் என படத்தில் காட்டப்படும் பல விஷயங்களை எதார்த்தமாக காட்டி ரசிகர்களையும் கதையுடன் பயணிக்க வைத்திருக்கிறார்.
கதை எழுதியிருக்கும் மனோஜ் குமார் கலைவாணன், ராஜேஷ் மஞ்சுநாத்துடன் இணைந்து அமைத்திருக்கும் திரைக்கதை சுவாரஸ்யமாக பயணிக்கிறது. தமிழ் ராக்கர்ஸ் என்ற தலைப்பை மட்டுமே வவைத்துக்கொண்டு சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக விறுவிறுப்பாக ஒரு தொடரை கொடுத்திருக்கும் இவர்களை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
கூடுதல் திரைக்கதை மற்றும் வசனம் எழுதி அறிவழகன் இயக்கியிருக்கிறார். தமிழ் ராக்கர்ஸ் யார்? என்பதை மட்டும் சொல்லாமல், அவர்களால் சினிமாவில் எத்தனை பேர், எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள், என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார். அதே சமயம், முதல் பாகம் தொடங்கி இறுதி பாகம் வரை எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார்.
8 பாகங்களையும் ஒரே நேரத்தில் பார்ப்பது சற்று நீளமாக தோன்றுவதும், கதை பழைய பழிவாங்கும் ஜானரை மையப்படுத்தி இருப்பதும் தொடருக்கு சற்று பலவீனமாக இருந்தாலும், கடைசி இரண்டு பாகங்கள் அந்த பலவீனத்தையே பலமாக்கி ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறது.
மொத்தத்தில், ‘தமிழ் ராக்கர்ஸ்’ ரசிக்க வைக்கிறது.
ரேட்டிங் 3/5