Latest News :

’வெந்து தணிந்தது காடு’ திரைப்பட விமர்சனம்

c982e3561a818ead9b70f392e4a69a38.png

Casting : Silambara, Siddhi Idnani, Raadhika Sarathkumar, Siddique, Neeraj Madhav, Delhi Ganesh, Appukutty

Directed By : Gautham Vasudev Menon

Music By : A. R. Rahman

Produced By : Ishari K. Ganesh

 

வரட்சியான கிராமத்தில் வாழும் சிம்பு, பிழைப்புக்காக மும்பைக்கு செல்கிறார். அங்கு தமிழர் நடத்தும் உணவகம் ஒன்றில் வேலைக்கு சேருகிறார். சிம்புவை போல் பிழைப்புக்காக வந்த தமிழக இளைஞர்கள் பலர் அந்த உணவகத்தில் வேலை செய்கிறார்கள். அந்த இடத்தில் உணவகத்தையும் தாண்டிய ஒரு தொழில் நடக்கிறது. விருப்பம் இல்லாமல் அந்த தொழிலில் ஈடுபடும் சிம்புவின் வாழ்க்கை என்னவானது என்பது தான் கதை.

 

20 வயது இளைஞராக மாறுவதற்காக மெனக்கெட்டிருக்கும் சிம்புவின் உழைப்பு அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது. தென்மாவட்ட இளைஞராக நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் அசத்தியிருக்கும் சிம்பு, தனது படிபடியான வளர்ச்சியை உடலிலும், நடிப்பிலும் மிக நேர்த்தியாக காட்டி வியக்க வைக்கிறார். ஹீரோயின் உடனான காதலும், அதில் சிம்பு வெளிப்படுத்தும் நடிப்பும் திகட்டாத சுவையாக இருக்கிறது. 

 

நாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி மேக்கப் இல்லாமலேயே அழகாக இருக்கிறார். கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்தும் இருக்கிறார்.

 

ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ், வில்லன்களாக நடித்திருக்கும் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

ஏ.ஆர்.ரஹ்மான் இசை ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், கதைக்கு ஏற்றபடி இருக்கிறது. பாடல்கள் அனைத்திலும் பழைய பாடல்களின் பாதிப்பு இருப்பது சற்று பலவீனம்.

 

சித்தார்தா நுனியின் ஒளிப்பதிவு மும்பையின் இருள் உலகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. சண்டைக்காட்சிகள் இயல்பாக இருப்பதற்காக கேமராவை கையில் வைத்து எடுத்திருப்பது ரசிக்க வைப்பதோடு, இயல்பாகவும் இருக்கிறது.

 

ஜெயமோகனின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் கெளதம் மேனன். இயக்குநர் கெளதம் மேனனின் பாணியும், ஜெயமோகனின் எதார்த்தமாமும் இணைந்திருப்பது வித்தியாசமாக இருந்தாலும், அதுவே சில இடங்களில் விபரீதமாக முடிந்திருக்கிறது.

 

கேங்க்ஸ்டர் கதையை வழக்கமான பாணியில் சொல்லாமல் தனது பாணியில் அழகியலோடு சொல்லியிருக்கும் இயக்குநர் கெளதம் மேனன், மும்பையில் இருக்கும் இருள் உலகத்தையும், அந்த உலகத்தில் வாழும் தமிழர்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

 

இயக்குநர் கெளதம் மேனனின் இயக்கம் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகனின் கதை இரண்டையும் தாண்டி சிம்புவின் நடிப்பு மட்டுமே முழு படத்தையும் சுமந்திருக்கிறது. சுமார் மூன்று மணி நேரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் நடித்திருக்கும் சிம்புவின் ஒவ்வொரு அசைவும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.

 

மொத்தத்தில், சிம்புவை நடிப்பு கனல் என்று நிரூபித்திருக்கிறது ‘வெந்து தணிந்தது காடு’

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery