Latest News :

’சினம்’ திரைப்பட விமர்சனம்

731dbc54b7df4041a7aa23331a22258b.png

Casting : Arun Vijay, Pallak Lalwani, Sindhu Sankar, Kaali Venkat, R. N. R. Manohar, Baby Desina

Directed By : G. N. R. Kumaravelan

Music By : Shabir

Produced By : Movie Slides Pvt Ltd - R. Vijayakumar

 

நேர்மையான போலீஸ் சப் இன்ஸ்பெக்டரான அருண் விஜய், நாயகி பாலக் லால்வாணியை காதலித்து திருமணம் செய்துக்கொள்கிறார். அனாதை இல்லத்தில் வளர்ந்த அருண் விஜய் தனது மனைவி, குழந்தை தான் உலகம் என்று வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பும் பாலக் லால்வாணி வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அருண் விஜய் அவரை தேடிக்கொண்டிருக்கும் போது, பாலக் லால்வாணி கொலை செய்யப்பட்ட தகவல் அவருக்கு கிடைப்பதோடு, அவர் உடல் பக்கத்தில் மற்றொரு ஆணும் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். 

 

தொலைபேசியில் பேசிய சில நிமிடங்களில் மாயமான மனைவி எப்படி கொலை செய்யப்படார்? அவரது கொலைக்கு பின்னணி என்ன? கொலை செய்யப்பட்ட ஆண் யார்? என்பதை போலீஸாக மட்டும் இன்றி சினம் கொண்ட கணவராகவும் அருண் விஜய் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை விறுவிறுப்பாகவும், உணர்வுப்பூர்வமாக சொல்வது தான் ‘சினம்’.

 

போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தும் அருண் விஜய், கம்பீரமான நடிப்போடு, உணர்வுப்பூர்வமான நடிப்பாலும் கவர்கிறார். ஆக்ரோஷமான போலீஸாக அதிரடி காட்டுவதோடு மட்டும் இன்றி, மனைவியை இழந்து தடுமாறும் கணவராகவும், தாயை இழந்து தவிக்கும் குழந்தையை சமாதனாப்படுத்த முடியாத தந்தையாகவும் நடிப்பில் கலங்க வைக்கிறார். 

 

நாயகியாக நடித்திருக்கும் பாலக் லால்வாணி அறிமுக காட்சியிலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார். படத்தின் பாதியிலேயே அவரது கதாப்பாத்திரம் மரணம் அடைந்தாலும், அவருடைய இறப்பு ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

 

அருண் விஜய்க்கு தொல்லை கொடுக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் சித்து சங்கரின் கதாபாத்திரமும் நடிப்பும் கவனம் பெறுகிறது. உண்மையான போலீஸா? என்று கேட்கும் விதத்தில் தோற்றத்திலும், நடிப்பிலும் இயல்பாக இருக்கும் அவர், சிரித்துக்கொண்டே கத்தியில் குத்துவது போல் வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும், மனைவியை இழந்த அருண் விஜயிடம் விசாரணை என்ற பெயரில் அவர் மனதை நோகடிக்கும் காட்சியில், படம் பார்ப்பவர்களே அவர் மீது கடும்கோபம் கொள்ளும் அளவுக்கு மனுஷன் அசத்தியிருக்கிறார்.

 

போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் காளி வெங்கட் , உயர் அதிகாரியாக நடித்திருக்கும் ஆர்.என்.ஆர்.மனோகர், ரேகா சுரேஷ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் எஸ்.கோபிநாத் கதையோடு பயணித்தது மட்டும் இன்றி, காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் அனைத்து காட்சிகளையும் லைவ் லொக்கேஷன்களில் படமாக்கியிருக்கிறார். குறிப்பாக இரவு நேர காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

ஷபீரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை கதையின் போக்கை மாற்றாமல் பயணித்திருக்கிறது.

 

போதை பழக்கத்தால் நடக்கும் குற்றங்கள் பற்றி பல தமிழ்ப் படங்களில் பேசியிருக்கிறார்கள். ஆனால், இந்த படத்தில் குற்றம் மற்றும் அதன் பின்னணி மட்டும் இன்றி அதன் வலியை படம் பார்ப்பவர்களிடமும் கடத்தும் வகையில் சொல்லியிருப்பது தனி சிறப்பு.

 

ஆர்.சரவணனின் கதை ஏற்கனவே தமிழ் சினிமாவில் பார்த்த கதை தான் என்றாலும், அதற்கு இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் அமைத்திருக்கும் திரைக்கதை மற்றும் காட்சிகள் விறுவிறுப்பாக மட்டும் இன்றி சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

 

நாயகியை கொலை செய்தது யார்? என்ற கேள்விக்கு எந்தவித துப்பும் கிடைக்காமல் அருண் விஜய் திணறுவது போல், படம் பார்ப்பவர்களாலும் யூகிக்க முடியாதபடி காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் குமரவேலன், படத்தின் இறுதிக்காட்சி வரை அந்த விறுவிறுப்பு குறையாமல் படத்தை நகர்த்தி செல்வது படத்திற்கு மிகப்பெரிய பலம்.

 

இயக்குநர் குமரவேலனின் புத்திசாலித்தனமான திரைக்கதை யுக்தி ஒரு பக்கம், அருண் விஜயின் நடிப்பு மறுபக்கம் என இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நம்மை இரண்டு மணி நேரம் கட்டிப்போட்டு விடுகிறார்கள். அதிலும், படத்தில் இடம்பெறும் செண்டிமெண்ட் திரைக்கதையின் வேகத்தை குறைக்காதவாறு பயணித்திருப்பதோடு, நம்மையும் கலங்க செய்வது தான் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி.

 

மொத்தத்தில், ‘சினம்’ அனைவரும் பார்க்க கூடிய மற்றும் சமூகத்திற்கு தேவையான திரைப்படம்.

 

ரேட்டிங் 4/5

Recent Gallery