Latest News :

’ஆதார்’ திரைப்பட விமர்சனம்

83b70c8760ce28e3d30fda3e3f366e1e.png

Casting : Karunas, Arun Pandiyan, Rithvika, Iniya, Uma Riaz Khan, Prabhakar, Dilipan,

Directed By : Ramnath Palanikumar

Music By : Srikanth Deva

Produced By : Vennila Creations

 

கட்டிட தொழிலாளியான கருணாஸும், அவரது மனைவி ரித்விகாவும் கட்டிட வேலை நடக்கும் இடத்திலேயே தங்குகிறார்கள். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ரித்விகாவுக்கு திடீரென்று வலி ஏற்பட அவரை மருத்துவமனைக்கு கருணாஸ் அழைத்து செல்கிறார். அப்போது அவருக்கு துணையாக குற்ற பின்னணி கொண்ட இனியா செல்வதோடு, குழந்தை பெற்றெடுக்கும் ரித்விகாவுக்கு துணையாகவும் மருத்துவமனையில் இருக்கிறார். இதற்கிடையே, கருணாஸின் மனைவி மருத்துவமனையில் குழந்தையை விட்டுவிட்டு மாயமாகிவிட, அவருக்கு துணையாக இருந்த இனியா மர்மமான முறையில் மருத்துவமனையின் பின்புறத்தில் இறந்து கிடக்கிறார்.

 

காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து கொடுக்குமாறும் காவல்துறையில் கருணாஸ் புகார் அளிக்க, அந்த புகாரின் அடிப்படையில் ரித்விகாவை தேடும் காவல்துறை அவரை கண்டுபிடித்ததா? இல்லையா?,  இனியாவின் மரணத்தின் பின்னணி என்ன? என்பது தான் ‘ஆதார்’.

 

தனிமனித அடையாளமாக அரசு ஆதார் அட்டையை கொடுத்திருந்தாலும், அதே அரசு எந்திரத்தில் இருப்பவர்கள் நினைத்தால் அந்த அடையாளத்தை முழுமையாக அழிக்க முடியும், என்பதை மிக அழுத்தமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.

 

கதையின் நாயகனாக கருணாஸ் நடித்திருந்தாலும், படத்தில் அவரும் ஒரு கதாப்பாத்திரமாகவே வலம் வருகிறார். காணாமல் போன தனது மனைவியை கண்டுபிடித்து தறுமாறு காவல்நிலையத்தில், கைகுழந்தையுடன் முறையிடும் காட்சிகளில் நடிப்பால் நம்மை கண்கலங்க வைக்கும் கருணாஸ், இப்படி பல படங்களில் பாவப்பட்ட மனிதராக நடித்திருப்பதால் அவர் மீது நமக்கு இரக்கம் வருவதற்கு பதிலாக கோபம் தான் வருகிறது. ஹீரோவாக நடிக்கிறேன் என்று இப்படியே பாவமாக நடித்து நம்மை வருத்தமடைய செய்வதை விட்டுவிட்டு, காமெடியாக நடித்து சிரிக்க வைப்பது அவருக்கும் நல்லது, ரசிகர்களுக்கும் நல்லது.

 

கருணாஸின் மனைவியாக நடித்திருக்கும் ரித்விகா, அவ்வபோது தலை காட்டினாலும் கதையை நகர்த்தும் மையப்புள்ளி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 

குற்ற பின்னணி கொண்ட பெண் வேடத்தில் நடித்திருக்கும் இனியாவின் அறிமுகம் அதிரடியாக இருந்தாலும், ஒரு சில காட்சிகளிலேயே அவருடைய வேடத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதால் அவர் மனதில் நிற்கவில்லை.

 

வயதான காவலர் வேடத்தில் நடித்திருக்கும் அருண்பாண்டியன், மிக பொறுமையான மனிதர் என்று தன்னை காட்டிக்கொள்வதற்காக மிக....மிக...பொறுமையாக நடித்திருப்பது படம் பார்ப்பவர்களின் பொறுமையை சோதிக்கிறது.

 

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பாகுபலி பிரபாகர், இனியாவின் சகோதரராக நடித்திருக்கும் திலீபன், போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருக்கும் உமா ரியாஸ்கான் ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில், “தேன் மிட்டாய்...மாங்கா துண்டு...” பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை கதையோடு பயணிக்கும்படி உள்ளது.

 

கதைக்கு ஏற்றபடி காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி, கதாப்பாத்திரங்களை இயல்பாக காட்டியிருப்பதோடு, கதைக்களத்தோடு நம்மையும் பயணிக்க வைத்திருக்கிறார்.

 

’விசாரணை’, ‘ரைட்டர்’ போன்ற படங்களை போல் காவல்துறையின் இருள் பக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் ஒரு கதையை அழுத்தமாக சொல்ல முயற்சித்து, அழுகாச்சியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம்நாத் பழனிகுமார்.

 

காணாமல் போன ரித்விகா என்ன ஆனார்?, இனியாவின் மர்மமான மரணத்தின் பின்னணி என்ன? போன்ற கேள்விகள் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி, படத்துடன் நம்மை ஒன்றிவிட செய்தாலும், மிக மெதுவாக நகரும் திரைக்கதை மற்றும் நீளமான காட்சிகளினால் படம் சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

 

மொத்தத்தில், ‘ஆதார்’ அழுகுரல்.

 

ரேட்டிங் 2.75/5

Recent Gallery