Casting : Kishore, Charli, Jay Bala, Vincent Nakul, Vinoth Munna, Kavya Pellu, Mariya Prince, Preethisha Premkumar, Vijayalakshmi R
Directed By : Aju Kizhumala
Music By : Bijipal
Produced By : Sasikala Productions
கிராமம் ஒன்றில் இருக்கும் காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர், ஐந்து ஆண் காவலர்கள் இருக்கிறார்கள். புதிதாக வரும் சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தின் தலைமை பொறுப்பை ஏற்கிறார். காவல் நிலைய சிறைக்குள் கைதி ஒருவர் இருக்கிறார். இதற்கிடையே காவல் நிலைய மின்பொருட்களை பழுது பார்க்க இரண்டு பேர் வருகிறார்கள். சில நேரத்திற்கு பிறகு காதல் ஜோடி ஒன்று பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்திற்குள் நுழைகிறது.
இந்த சமயத்தில், சப்-இன்ஸ்பெக்டரின் காதலி தனது பிறந்தநாளை காவல்நிலைத்தில் கேக் வெட்டி கொண்டாடுகிறார். அப்போது சில நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட, அந்த சமயத்தில் காவலர் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையை செய்தது யார்? என்பதை கண்டுபிடிக்க வரும் போலீஸ் உயர் அதிகாரியான கிஷோர், கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதை சிறுவர்களின் மேடை நாடகத்தை விட மோசமாக சொல்லியிருப்பதே ‘ட்ராமா’.
படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவருமே புதுமுகங்களாக இருப்பதோடு, ஆர்வகோளாறு நடிகர்களாகவும் இருக்கிறார்கள். 100 ரூபாய்க்கு நடிக்க சொன்னால் 1000 ரூபாய்க்கு நடித்து, படம் பார்ப்பவர்களை துவைத்து தொங்க விட்டுவிடுகிறார்கள்.
படத்தில் தெரிந்த முகமாக வரும் கிஷோர், இந்த படத்தில் எப்படி நடிக்க ஒப்புக்கொண்டார் என்பது கடைசி வரைக்கும் புரியவில்லை. அவர் கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருந்தாலும், அவரை சுற்றி இருக்கும் கதாப்பாத்திரங்களின் ஓவர் ஆக்டிங் நம்மை ரம்பமாக அறுத்துவிடுகிறது.
கிஷோரை தவிர்த்து நடிகர் ஷார்லி தனது அனுபவம் வாய்ந்த நடிப்பால் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்.
காவல் நிலையத்திற்குள் நடக்கும் கதையை மிக சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறது ஷினோஸின் ஒளிப்பதிவு. பிஜிபால் இசையும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது.
ஒரு காவல் நிலையத்தில் முழு படமும் நடப்பது போன்ற கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் அஜூ கிழுமலா, அதை ஒரே ஷாட்டில் எடுப்பதற்கு கடினமாக உழைத்திருந்தாலும், அந்த உழைப்பு படத்தில் தெரியாமல் போனது பெரும் சோகம்.
நடிகர்களின் ஓவர் ஆக்டிங் ஒரு பக்கம் நம்மை பாடாய் படுத்த, மறுபக்கம் ஒரே காட்சியை திரும்ப திரும்ப வைத்து நமக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் இயக்குநர், ஒரு கட்டத்தில் விட்டால் போதுமடா சாமி, என்று ஓடும்படியும் செய்துவிடுகிறார்.
மொத்தத்தில், ‘ட்ராமா’ சிக்கியவர்களை சிதைத்துவிடும்.
ரேட்டிங் 1.5/5