Casting : Vignesh, Aara, Maha, Shalini, Senthi kumari, Alex
Directed By : Chera Kalayaiarasan
Music By : D.M.Udayakumar
Produced By : Mukkuzhi Films
ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படிக்கும் நாயகன் விக்னேஷும், நாயகி ஆராவும் காதலிக்கிறார்கள். வெவ்வேறு சாதியை சேர்ந்த இவர்களது காதல் விவகாரம் தெரிந்த உடன், இவர்களது பெற்றோர் ஒரு பக்கம் எதிர்க்க, சாதி பெருமை பேசும் ஊர் மக்களும் இவர்களது காதலுக்கு குழி தோண்டுகிறார்கள். இறுதியில் காதலர்கள் சேர்ந்தார்களா?, இல்லையா? என்பதை சொல்வது தான் ‘குழலி’.
ஆணவக்கொலைகள் குறித்து வெளியான பல படங்களில் இதுவும் ஒன்றாக இருப்பதோடு, கிராமத்து நட்பு, பள்ளி காதல், ஊரை விட்டு காதல் ஜோடி ஓட முயற்சிப்பது என பழைய பாணியிலான காதல் படமாகவும் இருக்கிறது.
நாயகனாக நடித்திருக்கும் காக்கா முட்டை விக்னேஷ், கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் புதுவரவு ஆரா, கவனிக்க வைக்கிறார். நடனம், நடிப்பு இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருப்பவர் பக்கத்து வீட்டு பெண் போல் இயல்பாகவும் நடித்து நம்மை ஈர்த்து விடுகிறார்.
மஹா, ஷாலினி, செந்தி குமார் அலெக்ஸ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, சாதி பிடியில் சிக்கி தவிக்கும் மனிதர்களாகவும், சாதி வெறி பிடித்த மனிதர்களாகவும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்.
சமீரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. பாடல் காட்சிகளை ரசிக்கும்படி படமாக்கியிருப்பவர், சாதாரண லொக்கேஷன்களை கூட அழகாக காட்ட அதிகமாக மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.
டி.எம்.உதயகுமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாகவும், வரிகள் புரியும் ரகமாகவும் இருக்கிறது. பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு ஏற்றபடி பயணிக்கிறது.
என்ன தான் நாகரீகமும், தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்தாலும், ஏதாவது ஒரு மூளையில் சாதி ஒடுக்குமுறையும், ஆணவக்கொலைகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது, என்பதையும் அவற்றால் பாதிக்கப்படும் மனிதர்கள் பற்றியும் சொல்வதோடு, அதை அழகான காதல் கதையாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சேரா கலையரசன்.
அழகான காதல் கதையாக இருந்தாலும், அதை பள்ளி பருவ காதலாக காட்டியிருப்பதை தவிர்த்திருக்கலாம். அதிலும், காதல் விவகாரம் தெரிந்த பிறகு படிப்பில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து காதலிப்பது, அதை தொடர்ந்து காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடுவது போன்ற காட்சிகள் அதர பழசாக இருப்பதோடு, படம் சொல்ல வந்த கருத்தையே சிதைக்கும் வகையிலும் இருக்கிறது.
மொத்தத்தில், சாதி வெறி பிடித்தவர்களுக்கு பாடம் எடுத்திருக்கும் ‘குழலி’ சினிமா ரசிகர்களுக்கு பிடித்த படமாக இல்லை.
ரேட்டிங் 2.5/5