Casting : Dhanush, Indhuja, Elli AvrRam, 'Ilaiyathilagam' Prabhu, Yogi Babu, Hiya Davey, Pranav, Prabhav, Frankinsten, Sylvensten, Thulasi, Saravana Subbaiyah, Shelly N Kumar, K Selvaraghavan
Directed By : K Selvaraghavan
Music By : Yuvan Shankar Raja
Produced By : Kalaipuli S.Thanu
இரட்டை பிறவிகளான சகோதரர்களில் அண்ணன் கெட்டவன், தம்பி நல்லவன். அண்ணன் தனுஷ் சிறு வயதில் அப்பாவையே கொலை செய்யும் அளவுக்கு மிருகத்தனம் கொண்டவராக இருப்பதால், அவரை தனியே விட்டு விட்டு தம்பி தனுஷுடன் அவருடைய அம்மா சென்றுவிடுகிறார்.
அண்ணன் தனுஷ் மற்றும் தம்பி தனுஷ் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் நிலையில், பெரியவர்கள் ஆன பிறகு இருவரும் சந்தித்து கொள்ளும் சூழல் உருவாகிறது. அந்த சூழலின் பின்னணியும், அவர்கள் சந்தித்துக்கொள்ளும் போது நடக்கும் சம்பவங்களையும் மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் சொல்வது தான் ‘நானே வருவேன்’.
நல்லவன், கெட்டவன் என்று இரு வேடங்களில் நடித்திருக்கும் தனுஷ் இரண்டு வேடங்களுக்குமான வித்தியாசத்தை நடிப்பில் மிரட்டலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
பிரபு என்ற கதாப்பாத்திரத்தில் சாதுவாக நடித்திருந்தாலும், மகளுக்காக மற்றவரின் உயிரையும் எடுக்க துணிந்து, தனது உயிரை கொடுத்து போராடும் வேடத்திலும் சரி, கொடூரத்தனம் கொண்ட கதிர் என்ற வேடத்தில் அதிரடியாக நடித்ததிலும் சரி, இரண்டு வேடங்களையும் ரசிக்கும்படி செய்திருக்கும் தனுஷ், தனது நடிப்பால் இரண்டு கதாப்பாத்திரங்களையும் நம் ஆழ் மனதில் பதிய வைத்து விடுகிறார்.
இந்துஜா, எல்லி அவரம் என்று இரண்டு கதாநாயகிகளும் இரண்டு தனுஷ்களின் மனைவிகளாக நடித்திருக்கிறார்கள். இருவரும் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
தனுஷின் மகளாக நடித்திருக்கும் ஹியா தவேவின் கதாப்பாத்திரமும், அதில் அவர் நடித்த விதமும் படத்திற்கு கூதல் பலம் சேர்த்திருக்கிறது.
பிரணவ் - பிரபவ் மற்றும் ஃபிராங்க்கிங்ஸ்டன் - சில்வென்ஸ்டன் என இரட்டை சகோதர்களாக நடித்திருக்கும் இரட்டையர்களும், அவர்களது நடிப்பும் கவனம் பெறுகிறது.
சரவண சுப்பையா, ஷெல்லி என்.குமார், ஒரு காட்சியில் வரும் இயக்குநர் செல்வராகவன் என மற்ற கதாப்பாத்திரங்கள் அளவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு தனுஷின் இரட்டை வேடங்களுக்கு இருக்கும் வித்தியாசத்தை நேர்த்தியாக காட்டியிருப்பதோடு, கதைக்களத்தை மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இரட்டை வேடங்களை எந்தவித கிராபிக்ஸ் காட்சிகளும் இல்லாமல் இயல்பாக படமாகியிருப்பது பாராட்டும்படி உள்ளது.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் “வீரா சூரா...” பாடல் உற்சாகத்தை கொடுக்கிறது. பீஜியமும், பின்னணி இசையும் படத்தின் வேகத்தை அதிகரித்திருப்பதோடு, கதாப்பாத்திரங்களின் உணர்வுகளையும் நம்முள் கடத்துகிறது.
புவன் சீனிவாசனின் படத்தொகுப்பு படத்தை தொய்வில்லாமல் நகர்த்தி செல்வதோடு, காட்சிகளை வேகமாகவும் பயணிக்க வைக்கிறது.
தமிழ் சினிமாவில் சைக்கோ த்ரில்லர் மற்றும் அமானுஷ்ய திரைப்படங்கள் பல வெளியாகியிருந்தாலும், அவற்றில் இருந்து முற்றிலும் வித்தியாசமான முறையில் மட்டும் இன்றி மிக இயல்பான முறையிலும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.
அமானுஷ்ய படங்கள் என்றாலே அதீத சத்தங்கள், இருள் சூழ்ந்த காட்சிகள், மிரட்டும் உருவங்கள் என்ற வழக்கமான பாணியை உடைத்து, சாதாரணமான காட்சியின் மூலம் கூட ரசிகர்களை மிரட்டுவதோடு, சீட் நுணியிலும் உட்கார வைக்க முடியும் என்பதை இயக்குநர் செல்வராகவன் நிரூபித்து, தமிழ் சினிமாவில் புதிய ஃபார்முலாவை தொடங்கி வைத்துள்ளார்.
தந்தை, மனைவி, பிள்ளைக என அனைத்து உறவுகளையும் கொலை செய்யும் காட்சிகள் படத்தில் இருந்தாலும், எந்த இடத்திலும் அதிகமான இரத்தக் காட்சிகள் இல்லாமல் படத்தை நகர்த்தி செல்லும் இயக்குநர் செல்வராகவன், தனிமையின் வலி எத்தகையது என்பதையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
நடிப்பு அசுரனான தனுஷை ஒரே படத்தில் அன்பானவராகவும், அசுரனாகவும் காட்டி ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர் செல்வராகவன், தனுஷை வில்லனாக்கினாலும் அந்த வேடத்தை மாஸாக காட்டி அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருப்பதோடு, நல்லவராக நடித்திருக்கும் தனுஷை பாசமானவராக காட்டி குடும்ப ரசிகர்களையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
ரேட்டிங் 3.5/5