Casting : Shirish, Miruthula Murali, Arunthathi Nair, Yogi Babu, Sathish, Senthil, Gnanasampantham, Swaminathan
Directed By : M.Ramesh Bhaarathi
Music By : Dharan Kumar
Produced By : Bhuvaneshwari
பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல் நடக்கும் திருமணங்களை தடுத்து நிறுத்துவதையே தொழிலாக செய்யும் நாயகன் சிரிஷுக்கு 6 மாதத்திற்குள் கட்டாயம் திருமணம் நடக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், அவரது பெற்றோர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால், சிரிஷின் திருமணத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள் உருவெடுக்க இறுதியில் அவருக்கு திருமணம் நடந்ததா?, இல்லையா? என்பதை காமெடியோடும், கருத்தோடும் சொல்வது தான் ‘பிஸ்தா’.
சாந்தமான முகத்தை வைத்துக்கொண்டு கல்யாண வீடுகளில் சிரிஷ் செய்யும் அளப்பறைகள் அதிர வைக்கிறது. ஹீரோயினை பார்த்ததும் காதல் கொண்டு அவர் பின்னாள் சுற்றுவதும், தனது வேலையால் காதலுக்கு எதிராக உருவெடுக்கும் சிக்கல்களை சமாளிக்கும் காட்சிகளிலும் நடிப்பில் கவர்கிறார். படம் முழுவதும் ஜாலியான இளைஞராக வலம் வரும் சிரிஷ், தனது திருமண விஷயத்தில் எடுக்கும் இறுதி முடிவு இளைஞர்களுக்கு நல்ல அறிவுரையாக இருப்பதோடு, படத்திற்கும் பலம் சேர்க்கிறது.
கதாநாயகியாக நடித்திருக்கும் மிர்துளா முரளி, கதைக்கான காட்சிகளில் அளவாக பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பாடல் காட்சிகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
கதாநாயகியின் தோழியாக வரும் அருந்ததி நாயர், கதாநாயகியை அவ்வபோது ஓவர் டேக் செய்து கவனிக்க வைக்கிறார். இறுதியில், அவரது ஓவர் டேக்கிற்கான காரணம் சபாஷ் சொல்ல வைக்கிறது.
யோகி பாபு, சதிஷ், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் தேவைப்படும் இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்கள். பேராசிரியர் ஞானசம்பந்தம் சில இடங்களில் குணச்சித்திர நடிகராகவும், சில இடங்களில் காமெடி நடிகராகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
எம்.விஜயின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளையும், அங்குள்ள கோவில்களையும் ரசிக்கும்படி படமாக்கியுள்ளது.
தரண் குமாரின் இசையில் பாடல்கள் எல்லாமே கேட்கும் ரகமாகவும், புரியும் ரகமாகவும் இருக்கிறது. பின்னணி இசை திரைக்கதையோடு பயணித்துள்ளது.
மண்ப்பெண்ண்னே இல்லாத திருமணம், என்ற ஆச்சரியமான ஐடியாவோடு படத்தை ஆரம்பித்து, நம்மை ஆரம்பத்திலேயே படத்தோடு ஒன்றிவிட செய்கிறார் இயக்குநர் எம்.ரமேஷ் பாராதி. அதன் பிறகு ஹீரோ மற்றும் அவரது நண்பர்கள் திருமணங்களை தடுத்து நிறுத்துவது, அதனால் ஏற்படும் பிரச்சனைகளை காமெடியாக சொல்லி படம் முழுவதையும் ஜாலியாக நகர்த்தி செல்கிறார்.
திருமணத்தை மையமாக வைத்து வழக்கமான திரைக்கதை அமைப்போடு, ஜாலியான ரூட்டில் படத்தை பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர் ரமேஷ் பாரதி, இறுதியில் எதிர்பார்க்காத முடிவு ஒன்றை வைத்து படம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துவதோடு, எழுந்து நின்று கைதட்டவும் செய்து விடுகிறார்.
மொத்தத்தில், படத்தின் க்ளைமாக்ஸுக்காக ‘பிஸ்தா’-வை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.
ரேட்டிங் 3/5