Latest News :

’ஆற்றல்’ திரைப்பட விமர்சனம்

31935cc3f914ef0326f4eb733a7a1760.jpg

Casting : Vidharth, Shridha Rao, Charli, Vicky, Rama, Vamsi Krishna

Directed By : KL Kannan

Music By : Ashwin Hemand

Produced By : Sevvanthi Movies - J Michel

 

பணம் வைத்திருப்பவர்களின் தகவல்களை ரகசியமாக சேகரிக்கும் மர்ம கும்பல், அவர்களை கொலை செய்து அவர்களிடம் இருக்கும் பணத்தையும், நகைகளையும் கொள்ளையடிக்கிறது. சென்னையின் பல இடங்களில் தங்களது கைவரிசையை காட்டி வரும் மர்ம கும்பலால் பாதிக்கப்படும் நாயகன் விதார்த், அந்த கும்பலின் பின்னணியை எப்படி கண்டுபிடித்து, அவர்களை ஒட்டு மொத்தமாக அழிக்கிறார், என்பதை அதிர்ச்சியூட்டும் வகையில் சொல்வது தான் ‘ஆற்றல்’.

 

வித்தியாசமான கெட்டப்பில் இளமை ததும்ப ததும்ப நடித்திருக்கும் நாயகன் விதார்த், கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். கெட்டப்பை மாற்றினாலும் அவருடைய உடல் மொழி என்னவோ பழைய பாணியில் தான் இருக்கிறது. இருந்தாலும், அப்பா மீதான பாசம், காதலியுடனான நேசம், வில்லன்களுடனான மோதல் என அனைத்து ஏரியாவிலும் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் ஷ்ரிதா ராவ், கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருந்தாலும், அவர் வரும் பல காட்சிகள் திணித்தது போல் இருப்பதால், அவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்களை சலிப்படைய செய்கிறது.

 

வில்லனாக நடித்திருக்கும் வம்சி கிருஷ்ணா, விதார்த்தின் தந்தையாக நடித்திருக்கும் சார்லி, விதார்த்தின் நண்பராக நடித்திருக்கும் விஜே விக்கி, வித்யூ ராமன், ரமா என அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, அளவாக நடித்து கவர்கிறார்கள்.

 

கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவு கதைக்களத்துடன் பயணித்திருப்பதோடு, காட்சிகளை இயல்பாக படமாக்கியுள்ளது.

 

அஸ்வின் ஹேமந்தின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

கதை எழுதி இயக்கியிருக்கும் கே.எல்.கண்ணன், நகரங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களை மையப்படுத்தி ஒரு கமர்ஷியல் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

 

தனியாக வீடுகளில் இருப்பவர்களின் தகவல்கள் எப்படி சேகரிக்கப்படுகிறது என்ற தகவலை சொல்லிய விதம் கவனம் பெறுவதோடு, அதை வைத்து மர்ம மும்பல் நடத்தும் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருப்பதோடு, மக்களை எச்சரிக்கும் வகையிலும் இருக்கிறது.

 

இயக்குநர் எடுத்துக்கொண்ட கதைக்களம் சுவாரஸ்யமாக இருந்தாலும், அதை சொல்லிய விதம் சலிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. குறிப்பாக காதல் காட்சிகள் நம்மை கடுப்பேற்ற செய்கிறது.

 

கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் ஒரு பக்கம் அரங்கேறி நம்மை சீட் நுணியில் உட்கார வைத்தாலும், அவ்வபோது வரும் காதல் காட்சிகள் தூங்க வைத்து விடுகிறது. இருந்தாலும், கடைசி 20 நிமிடங்களில் சரியான பாதையில் பயணிக்கும் இயக்குநர் கே.எல்.கண்ணன்,  தான் சொல்ல வந்ததை நேர்த்தியாக சொல்லி பாராட்டு பெறுகிறார்.

 

சிறு சிறு குறைகள் படம் முழுவதும் இருந்தாலும், இயக்குநர் சொல்லியிருக்கும் விஷயம் மக்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமானதாக இருப்பதால், இந்த படத்தையும் நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.

 

ரேட்டிங் 2.75/5

Recent Gallery