Latest News :

’காந்தாரா’ திரைப்பட விமர்சனம்

13c4a49beb37639d073f859d057bdd38.jpg

Casting : Rishab Shetty, Kishore, Achyuth Kumar, Pramod Shetty, Sapthami Gowda

Directed By : Rishab Shetty

Music By : B.Ajaneesh Loknath

Produced By : Vijay Kiragandur

 

மன்னர் ஆட்சி காலத்தில் கிராம மக்களுக்கு தானமாக வழங்கப்பட்ட 100 ஏக்கர் நிலத்தை, தற்காலத்து மன்னர்களின் வாரிசுகள் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். மறுபக்கம் அந்த இடத்தை மக்களிடம் இருந்து பறிக்க வனத்துறையும் களத்தில் இறங்குகிறது. இரு தரப்பினருக்கு எதிராக போரடி தங்களது நிலத்தை பாதுகாக்க மக்கள் போராடுகிறார்கள். இந்த போராட்டத்தில் அவர்களின் தெய்வ நம்பிக்கையும் இணைய, அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் ‘காந்தாரா’-வின் கதை.

 

மண்ணுக்காக போராடும் மக்கள் பற்றியும், அவர்களின் வாழ்வியல் பற்றியும் பல படங்கள் பேசியிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கதை கொண்ட படமாக இருந்தாலும், அதில் குலதெய்வத்தை இணைத்து அமைக்கப்பட்ட திரைக்கதையும், தெய்வ நம்பிக்கை மற்றும் அந்த தெய்வத்தின் விஸ்வரூப காட்சிகளும் படத்தை புதியதாக்கியிருக்கிறது.

 

கதை எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி. சாமியாடும் குடும்பத்தில் பிறந்தாலும், குடி, நண்பர்களுடன் கும்மாளும், எருமை போட்டி, வேட்டையாடுதல் என்று யாருக்கும் அடங்காதவராக சுற்றிக்கொண்டிருக்கிறார். தங்களது இடத்திற்கு பிரச்சனை என்றதும் முதல் ஆளாக அரசாங்கத்தை எதிர்ப்பவர் இறுதியில், சாமி ஆடும் காட்சியில் ஒட்டு மொத்த திரையரங்கையே அதிரச் செய்து விடுகிறார். உண்மையாகவே அவர் உடம்பில் சாமி ஏறிவிட்டதா!, என்று நினைக்கும் வகையில் ஒவ்வொரு அசைவுகளிலும் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தி மிரட்டுகிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் சப்தமி கவுடா, ஊர் மக்களுக்கு ஆதரவாக போராட முடியாமலும், வனத்துறை காவலராக செயல்பட முடியாமலும் தவிக்கும் காட்சிகள் நன்று. கதாநாயகியாக இருந்தாலும் மலைவாழ் மக்களின் ஒருவராக ரசிகர்கள் மனதில் பதியும் அளவுக்கு அவரது கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

 

வனத்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் கிஷோருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல வேடம் கிடைத்திருக்கிறது. மனுஷன் தனது நடிப்பு மூலம் அந்த வேடத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.

 

மன்னரின் வாரிசாக நடித்திருக்கும் அச்சுயுத் குமார், அமைதியாக நடித்திருந்தாலும் தன் மனதில் வைத்திருக்கும் ஆக்ரோஷம் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. அடாவடி மற்றும் அலப்பறை இல்லாமல் அமைதியாக சிரித்துக்கொண்டே அவர் செய்யும் வில்லத்தனம் எதிர்பார்க்காத திருப்புமுனை.

 

நாயகனின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் மற்றும் கிராமத்து மக்கள் என அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமானவர்களாக இருப்பதோடு, மண்ணுக்கு ஏற்ற முகங்களாகவும் இருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ்.காஷ்யப்பின் கேமரா படம் பார்ப்பவர்களையும் கர்நாடக வனப்பகுதிக்கு அழைத்து செல்கிறது. வனப்பகுதிகளின் அழகை நேர்த்தியாக படமாக்கியிருப்பவர், சாமி ஆட்டத்தின் போது நம்மை சிலிர்க்க வைக்கிறார். 

 

பி.அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பதோடு, காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. குறிப்பாக சாமி ஆடும் காட்சிகளில் பின்னணி இசை மிரட்டுகிறது. அதிலும் இறுதிக்காட்சியில் விஸ்வரூபம் எடுக்கும் நாயகன் உடம்பில் சாமி ஏறிய பிறகு அவர் போடும் சப்தமும், அதை தொடர்ந்து எழும் ஒலியும், திரையரங்கை விட்டு வெளியே வந்த பிறகும் நம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

 

படத்தொகுப்பாளர்கள் கே.எம்.பிரகாஷ் மற்றும் பிரதீஷ் ஷெட்டி தொய்வில்லாமல் காட்சிகளை தொகுத்திருக்கிறார்கள். சாதாரண கதையாக இருந்தாலும் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, படத்துடன் ரசிகர்கள் ஒன்றிவிட செய்யும் அளவுக்கு நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்கள்.

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் வாழும் மக்கள் மற்றும் அவர்களுடைய கலாச்சாரம், கடவுள் வழிவாடு ஆகியவற்றை கொண்டு, வனத்துறை பாதுகாப்பு என்ற சமூக அக்கறையோடு திரைக்கதை எழுதியிருக்கும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி, அதை கமர்ஷியலான ஒரு படமாகவும் மிக நேர்த்தியாக கொடுத்திருக்கிறார்.

 

தொழிலாளிகளை சுரண்டும் முதலாளித்துவத்தை மறைமுகமாக சாடியிருக்கும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி, சமூக பிரச்சனைகளை அழுத்தமாக சொல்லாமல், தெய்வ வழிபாடு மற்றும் அதன் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். குறிப்பாக வனப்பகுதியில் வாழும் மக்களால், வனவிலங்குகளுக்கு ஆபத்து இருப்பது போலவும், அரசு மற்றும் அதிகாரிகள் வனப்பகுதியையும், வனவிலங்குகளையும் ரட்சிக்கும் கடவுள் போல, படத்தில் பேசியிருப்பதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

படத்தில் பேசப்பட்டிருக்கும் சில விஷயங்கள் முரணாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாகவும், ஒரு கதையை எப்படி சொல்ல வேண்டும் என்ற ரீதியில் படம் மக்களை வியக்க வைக்கிறது.

 

மொத்தத்தில், ‘காந்தாரா’ திரைப்படமாக அனைவரையும் நிச்சயம் கவரும்.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery