Casting : Sivakarthikeyan, Mariya, Sathyaraj, Premji Amaran, Subbu Panchu, Suri
Directed By : Anudep
Music By : Thaman
Produced By : Narayan Das Narang
பள்ளி ஆசிரியரான சிவகார்த்திகேயன், தான் பணியாற்றும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் இங்கிலாந்து நாட்டு பெண் மரியாவை காதலிக்கிறார். மரியாவும் அவருடைய காதலை ஏற்றுக்கொள்ள, இவர்களின் காதலுக்கு சிவகார்த்திகேயனின் அப்பா சத்யராஜ் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, ஒட்டு மொத்த ஊரே எதிர்ப்பு தெரிவிக்கிறது. அது ஏன்? அந்த எதிர்ப்பை மீறி காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் ‘ப்ரின்ஸ்’.
சிவகார்த்திகேயன் வழக்கம் போல் ஜாலியான நடிப்பு, கேலியான பேச்சு என்று ரசிகர்களை திருப்திபடுத்துகிறார். மரியாவை கண்டதும் காதல் கொள்பவர் காதலுக்காக செய்யும் லூட்டிகள், தன் காதல் பற்றி அப்பாவுக்கு புரிய வைப்பது, ஊர் மக்களை சமாளிப்பது என்று அனைத்து ஏரியாவிலும் ஒன் மேன் ஆர்மியாக பர்பாமன்ஸ் செய்து படத்தை ஜாலியாக நகர்த்துவதோடு, ஒட்டு மொத்த படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் உக்ரைன் நாட்டு நடிகை மரியா, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருந்தாலும், ரசிகரகளை ஈர்க்கும் வகையில் எதுவும் செய்யவில்லை.
சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடித்திருக்கும் சத்யராஜ், வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் விளையாட்டுத்தனமாக நடித்திருக்கிறார்.
வில்லனா அல்லது காமெடியனா என்பதே தெரியாத ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பிரேம்ஜி, இரண்டையும் குறைவாக செய்திருந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார்.
சிறப்பு தோற்றத்தில் வரும் சூரி, ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு சரியான தீனி போடாமல் சென்றுவிடுகிறார்.
போலீஸ் அதிகாரியாக ஆனந்த்ராஜ் வரும் காட்சி சிரிப்பு சரவெடியாக வெடிக்கிறது. நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் வெளிநாட்டவர், சுப்பு பஞ்சு, கிராம மக்கள் என அனைவரும் அவ்வபோது சிரிக்க வைக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனின் நண்பர்களாக நடித்திருக்கும் யூடியுப் பிரபலங்கள் யூடியுபில் மட்டுமே சிரிக்க வைக்கிறார்களே தவிர படத்தில் ஒரு இடத்தில் கூட அவர்களால் ரசிகர்களை சிரிக்க வைக்க முடியவில்லை.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பளிச்சென்று இருக்கிறது.
தமனின் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது.
சாதாரணமான கதையை முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே நம்பி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் அனுதீப். சிவகார்த்திகேயனின் நகைச்சுவையான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருந்தாலும், மற்ற கதாப்பாத்திரங்களால் படத்தின் பல இடங்களில் தொய்வு ஏற்படுகிறது. இருந்தாலும், அதை சிவகார்த்திகேயேன் சாமர்த்தியமாக சமாளித்துவிடுகிறார்.
மொத்தத்தில், ‘ப்ரின்ஸ்’ சிவகார்த்திகேயனின் சிரிப்பு விருந்து
ரேட்டிங் 3.5/5