Casting : Akshay Kumar, Jacqueline Fernandez, Nushrratt Bharuccha, Satya Dev
Directed By : Abhishek Sharma
Music By : Daniel B. George
Produced By : Aruna Bhatia, Vikram Malhotra
ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் மன்னார் தீவுகளுக்கும் இடையே 48 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சுண்ணாம்பு கற்களால் ஆன பாலத்தை ராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் என்று அழைக்கின்றனர். ராவணனால் சிறை வைக்கப்பட்ட சீதையை மீட்கச் சென்ற போது ராமர் கடலை கடந்து செல்வதற்காக இந்த பாலத்தை வானர படையினர் கட்டியதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த பாலத்தை ராமர் பாலம் என்று அழைப்பதோடு, இந்த பாலத்தை இந்துக்கள் புனிதமாக கருதுகின்றனர்.
அதே சமயம், ராமர் பாலம் இருக்கும் இடத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் பாறைகளை தகர்த்து கடலை ஆழப்படுத்தினால் கப்பல் போக்குவரத்தில் புதிய புரட்சி ஏற்படுவதோடு, தமிழகம் கப்பல் போக்குவரத்திலும், துறைமுக தொழிலிலும் வளர்ச்சி பெறும் என்பதால் ‘சேது சமுத்திர திட்டம்’ என்ற பெயரில் இந்த திட்டத்தை செயல்படுத்த பல ஆண்டுகள் முயற்சி செய்தனர். ஆனால், இது ராமர் கட்டிய பாலம், இது ராமரின் அடையாளம், என்று கூறி பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் சேது சமுத்திர திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
நாட்டுக்கு வளர்ச்சியை தரக்கூடிய திட்டமாக இருந்தாலும், கடவுளின் பெயரால் தடுத்து நிறுத்தப்பட்ட சேது சமுத்திர திட்டத்திற்கு தடையாக இருக்கும் அந்த சுண்ணாம்புக்கல் பாலத்தை உண்மையிலேயே ராமர் தான் கட்டினாரா? அல்லது அது இயற்கையில் உருவான பாறைகளா? என்ற கேள்விக்கான பதில் தான் ‘ராம் சேது’ படத்தின் கதை.
இந்தி திரைப்படம், அக்ஷய் குமார் நாயகனாக நடித்திருக்கிறார் என்றதுமே, இது இந்துத்துவா அமைப்புகளின் ஆதரவால் உருவான படம் என்றும், அவர்களுக்கான பிரச்சாரம் என்பதும் நமக்கு புரிந்துவிடுகிறது. ஆனால், ராமர் பாலம் ராமரால் கட்டப்பட்டது என்பதை நிரூபிப்பதற்காக, திரைப்படத்தில் சொல்லப்படும் ஆதாரங்கள் என்ன? அவற்றை எப்படி காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை ராமர் பிரச்சாரமாக மட்டும் இன்றி ஒரு சாகச திரைப்படமாகவும் கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள்.
ஆரியன் என்ற கதாப்பாத்திரத்தில் தொல்லியல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் அக்ஷய் குமார், கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, தனது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
அக்ஷய் குமாருடன் பணியாற்றும் சக விஞ்ஞானிகளான ஜாக்குலின் பெர்னாண்டஸ், அக்ஷய் குமாரின் மனைவியாக நடித்திருக்கும் நூஷ்ரத் பருக்ஷா, ஆராய்ச்சி திட்டத்தின் தலைவராக நடித்திருக்கும் பர்வேஷ் ராணா ஆகியோரும் தங்களது கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ராமருக்கு உதவிய ஹனுமான் போல், அக்ஷய் குமாருக்கு உதவி செய்யும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யதேவ் காஞ்சார்னாவின் துடிதுடிப்பான நடிப்பு ரசிககர்களுக்கு உற்சாகத்தை கொடுப்பதோடு, படத்தை சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்கிறது.
அஷீம் மிஸ்ராவின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. ஒளிப்பதிவாளரும், கிராபிக்ஸ் வல்லுநரும் ஒன்று சேர்ந்து பாராட்டும்படி பணியாற்றியிருக்கிறார்கள். சில இடங்களில் அனிமேஷன் என்பது அப்பட்டமாக தெரிவதை தவிர்த்திருக்கலாம்.
இசையமைப்பாளர் டேனியல் பி.ஜார்ஜின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது.
ராமர் பாலத்தை மையமாக வைத்துக்கொண்டு இந்துத்துவா கருத்துக்களை திணிப்பதோடு, சாகசங்கள் நிறைந்த படமாக கொடுக்க நினைத்த இயக்குநர் அபிஷேக் சர்மா, இந்துத்துவா கருத்துக்களை திணித்திருப்பதோடு, அவற்றை சினிமாத்தனமாக சொல்லியிருப்பது சலிப்படைய செய்கிறது.
ராமர் பக்தராக திரைக்கதையையும், காட்சிகளையும் கையாண்டிருக்கும் இயக்குநர், ஆராய்ச்சிப்பூர்வமான விஷயங்களை அழுத்தமாக பேசாமல் ராம ஜெயம் பாடியிருப்பது பெரும் கேலி கூத்தாக இருக்கிறது. அதிலும், ராமர் இருந்தார் என்பதை நிரூபிப்பதற்காக ராவணனின் அடையாளங்களை தேடிச்செல்லும் காட்சிகள் போரடிக்கும் வகையில் இருக்கிறது.
நாட்டின் வளர்ச்சி திட்டத்திற்காக குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் சுண்ணாம்பு பாறைகளை தகர்த்திவிட்டு, கடலை ஆழப்படுத்த முயற்சிப்பவர்களை, புத்தர் சிலையை வெடிவைத்து தகர்த்த தலிபான்களுடன் ஒப்பிடும் வசனங்கள், இந்துத்துவாவின் வன்மத்தை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.
மொத்தத்தில், ’ராம் சேது’ படம் சொல்லும் கருத்துகளும், படத்தின் காட்சிகளும் வெகுஜன மக்கள் சிரிக்கும்படியும், ராமர் பக்தர்கள் கோபமடையும் விதத்திலும் இருக்கிறது.
ரேட்டிங் 2.5/5