Casting : Prabajan, Kovai sarala, Aara, Abdulla, Charles Vinoth
Directed By : M.S.Sakthivel
Music By : Ashwin Hemanth
Produced By : G group productions - Rajathi pandian
அம்மா கோவை சரளா, தங்கை ஆரா ஆகியோருடன் வாழ்ந்து வரும் ஹீரோ பிரபஞ்சன், சரியான வேலை கிடைக்காமல் கஷ்ட்டப்படுகிறார். விவசாயத்திற்காக வாங்கிய கடனுக்கான வட்டி ஒரு பக்கம் அதிகரிக்க, மறுபக்கம் நிரந்தரமான வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்துக்கொண்டிருக்கிறார் நாயகன் பிரபஞ்சன்.
இதற்கிடையே, வட்டிக்கு பணம் கொடுக்கும் வினோத் சார்லஸ், கடனை திருப்பி கொடுக்க முடியாத குடும்பத்தில் இருக்கும் பெண்களை தனது ஆசைக்கு இனங்க வற்புறுத்துகிறார். அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட, நாயகனின் தங்கை மீது அவர் கண் வைக்கிறார். கடனை கொடுக்க வில்லை என்றால், பெண்ணை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும், என்று அடாவடி செய்யும் சார்லஸ் வினோத்தின் கடனை அடைப்பதற்காக நாயகன் பிரபஞ்சன் வெளிநாட்டுக்கு வேலைக்கு போக முடிவு செய்கிறார். அதற்காக தனது அப்பாவின் நினைவாக வைத்திருந்த தாலியை அம்மா கோவை சரளா விற்று அவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புகிறார்.
வெளிநாட்டுக்கு வேலைக்கு போக வேண்டிய நாயகன் பிரபஞ்சன், எதிர்பாராத சில பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வதால் வெளிநாட்டுக்கு போக முடியாமல் மும்பையில் சிக்கிக்கொள்ள, அதே சமயம் கையில் வைத்திருந்த பணத்தை இழந்துவிட்டதால் சொந்த ஊருக்கும் போக முடியாமல் தவிக்கிறார்.
இந்த நிலையில், நாயகன் பிரபஞ்சனுக்கு பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. பணக்காரர்களால் அப்பாவிகளின் உயிரை வைத்து விளையாடப்படும் சூதாட்டமான அந்த போட்டியில் கலந்துக்கொள்பவர்களின் உயிருக்கு ஆபத்து அதிகம் என்றாலும், அந்த விளையாட்டில் கலந்துக்கொள்ள நாயகன் முடிவு செய்கிறார். அதே சமயம், அந்த விளையாட்டை தடுக்க இண்டர்போல் போலீஸ் முயற்சியில் இறங்குகிறது.
இறுதியில் நாயகன் அந்த போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்றாரா? அல்லது உயிரை விட்டாரா?, அந்த விளையாட்டு போட்டி என்ன? அதனை இண்டர்போல் போலீஸ் ஏன் தடுக்க நினைக்கிறது? என்பதை பரபரப்பாகவும்,விறுவிறுப்பாகவும் சொல்வது தான் ‘ஒன்வே’.
கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தின் துயரங்கள், வட்டிக்கு பணம் கொடுப்பவர்களின் அத்துமீறல்கள் என்று தொடங்கும் படம் இரண்டாம் பாதியில் நாம் எதிர்பார்க்காத அதே சமயம் நிஜத்தில் நடக்கும் சில அதிர்ச்சிகரமான தகவல்களோடு ஹாலிவுட் படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.
நாயகனாக நடித்திருக்கும் பிரபஞ்சன், கிராமத்து கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். தன் குடும்ப கஷ்ட்டத்தை போக்குவதற்காக பல வேலைகள் செய்பவர், தன் உயிர் போனாலும் பரவாயில்லை என்று அந்த பயங்கர விளையாட்டில் ஈடுபட்டாலும், சக மனிதர்களை கொல்ல மாட்டேன் என்று அவர் தடுமாறும் இடங்களில் பாராட்டும்படி நடித்திருக்கிறார்.
நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் ஆரா, நம் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் போல் இயல்பாக இருக்கிறார். அவருடைய நடிப்பும் ரொம்ப எதார்த்தமாக இருக்கிறது. கடன்காரர்களின் தொல்லைக்கு ஆளாகும் ஏழை பெண்களை பிரதிபலிக்கும்படி சிறப்பாக நடித்திருக்கும் ஆராவுக்கு கோடம்பாக்கத்தில் நல்ல எதிர்காலம் உண்டு.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் கோவை சரளா, தன்னை மீண்டும் ஒரு முறை சிறந்த குணச்சித்திர நடிகை என்பதை நிரூபித்துள்ளார். வட்டிக்கு பணம் கொடுப்பவராக நடித்திருக்கும் சார்லஸ் வினோத்தின் வேடமும், அவரது நடிப்பும் படம் பார்ப்பவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது.
மிக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் அப்துல்லா கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு, அமைதியாக நடித்து பாராட்டு பெறுகிறார். பவா செல்லதுறை உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
முத்துக்குமரனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. முதல் பாதியில் கிராமத்தின் அழகை கச்சிதமாக காட்சிப்படுத்தியிருப்பவர், இரண்டாம் பாதியில் படத்தின் கோணத்தையே மாற்றும் அளவுக்கு காட்சிகளை கையாண்டுள்ளார். குறிப்பாக உயிரை வைத்து விளையாடப்படும் போட்டியை காட்சிப்படுத்திய விதம் பதற வைக்கிறது.
இசையமைப்பாளர் அஷ்வின் ஹேமந்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் விதமாகவும், புரியும் விதமாகவும் இருக்கிறது. பின்னணி இசை கதையோடு பயணிப்பதோடு, ஒரே கதைக்களத்தில் இரண்டு வெவ்வேறு களங்களுக்கான பின்னணி இசையை மிக நேர்த்தியாக கொடுத்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் சரண் சண்முகம் காட்சிகளை தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறார். இரண்டாம் பாதியில் நடத்தப்படும் போட்டியை தொகுத்திருக்கும் விதம் படம் பார்ப்பவர்களை பயபப்ட வைத்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் எம்.எஸ்.சக்திவேல், பல உண்மை சம்பவங்களை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். குறிப்பாக விவசாயிகள் மட்டும் அல்ல அவர்களது குடும்பமும் எத்தகைய துயரத்தோடு வாழ்கிறது என்பதை முதல் பாதியில் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
பணம் படைத்தவர்களின் பொழுதுபோக்கு ஏழைகளின் உயிரை எப்படி காவு வாங்குகிறது, என்பதை இரண்டாம் பாதியில் சொல்லியிருக்கும் இயக்குநர் அந்த காட்சிகளை ஹாலிவுட் படங்களுக்கு நிகராக கையாண்டிருப்பது படத்தின் கூடுதல் பலம்.
இப்படி எல்லாம் இங்கு நடக்கிறதா? என்று படம் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துவதோடு, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்போடு சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் வகையில் இரண்டாம் பாதியை படு விறுவிறுப்பாக இயக்குநர் நகர்த்தி செல்கிறார்.
நடிகர்களை கையாண்ட விதம், இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாக படம் மிக தரமாக இருப்பதோடு, ஒரு புதிய விஷயத்தை மிக வித்தியாசமாகவும் அதே சமயம், அதை விவசாயத்தின் பின்னணியில் சொல்லியிருப்பதோடு, விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இயக்குநர் எம்.எஸ்.சக்திவேலுக்கு கோடம்பாக்கம் சிவப்பு கம்பளம் விரிப்பது உறுதி.
மொத்தத்தில், ‘ஒன் வே’ சினிமா ரசிகர்களுக்கான பாதை.
ரேட்டிங் 3.5/5