Casting : RS Karthik, Linga, Kalpika, Monisha Murali, Vinothini, Janaki Suresh
Directed By : Dwarakh Raja
Music By : RajKumar Amal
Produced By : S.Madhusudhanan
சிறு வயதில் தந்தையை இழந்துவிடும் லிங்கா மற்றும் ஆர்.எஸ்.கார்த்திக், தாய் ஜானகி சுரேஷ் அரவணைப்பில் வளர்கிறார்கள். மூத்த மகன் லிங்கா மீது அதிகம் பாசம் காட்டுவதாக நினைத்துக்கொள்ளும் இளைய மகன் ஆர்.எஸ்.கார்த்திக், தன் அம்மா மீதும் அண்ணன் மீதும் கோபம் கொள்கிறார். இதற்கிடையே, கொலை வழக்கு ஒன்றில் கைதாகும் லிங்கா சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு சென்றுவிடுகிறார். அங்கு சந்திக்கும் சில பிரச்சனைகளால் மேலும் சில கொலைகளை செய்யும் லிங்காவுக்கு சிறை தண்டனை அதிகமாகிறது.
லிங்காவின் தாய் தனது மகனை எப்படியாவது வெளியே எடுக்க வேண்டும் என்று போராட, ஒரு கட்டத்தில் அவரை பரோலில் எடுக்க முயற்சிக்கிறார். ஆனால், இதனை விரும்பாத தம்பி ஆர்.எஸ்.கார்த்திக், தனது அண்ணன் பரோலில் வருவதை தடுக்கும் முயற்சியில் இறங்க, இறுதியில் லிங்கா பரோலில் வந்தாரா? இல்லையா? என்பது தான் ‘பரோல்’ கதை.
பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் லிங்கா, முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் கரடுமுரடான தோற்றத்தோடு வலம் வருபவர் நடிப்பிலும் அதே குணத்தை வெளிப்படுத்தி வேடத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
இயல்பாக நடிக்க கூடிய நடிகராக கவனம் பெறும் ஆர்.எஸ்.கார்த்திக், இந்த படத்திலும் தனது எதார்த்தமான நடிப்பால் கவர்கிறார். சில இடங்களில் மட்டும் கொஞ்சம் ஓவராக நடிப்பது போல் தெரிகிறது. அதை சரி செய்துகொண்டால் கோடம்பாக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்திக்கிற்கு நிரந்தர இடம் நிச்சயம் உண்டு.
கதாநாயகிகளாக நடித்திருக்கும் கல்பிக்கா மற்றும் மோனிஷா முரளி இருவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி சுரேஷின் நடிப்பு நேர்த்தி என்றாலும் சில இடங்களில் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. வழக்கறிஞராக நடித்திருக்கும் வினோதி நீதிமன்ற காட்சிகளில் கவனம் பெறுகிறார்.
ஒளிப்பதிவாளர் மகேஷ் ராஜ்குமார் படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்துள்ளார். கதையோடு ரசிகர்கள் ஒன்றிவிடுவதற்கு மகேஷ் ராஜ்குமாரின் ஒளிப்பதிவு முக்கிய பங்கு வகித்திருக்கிறது.
அமலின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகமாக இருந்தாலும் பின்னணி இசை கவனம் பெறுவதோடு, கதைக்களத்திற்கு ஏற்றவாறும் பயணித்துள்ளது.
இரண்டு சகோதரர்களுக்கு இடையே நடக்கும் ஈகோ போட்டியை வைத்துக்கொண்டு பரோல் என்றால் என்ன? என்பதை இயக்குநர் துவராக் ராஜா விரிவாக சொல்லியிருப்பது புதிதாக இருக்கிறது. நீதிமன்ற காட்சிகள் மற்றும் கதைக்களம் அனைத்தும் இயல்பாக இருப்பதால் படத்தின் ஆரப்பத்திலேயே படத்துடன் ஒன்றிவிட முடிகிறது.
கதையின் நாயகர்கள் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு அவர்களிடம் சரியான முறையில் இயக்குநர் வேலை வாங்கியிருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
சில இடங்களில் சில குழப்பங்கள் ஏற்படுவது படத்திற்கு குறையாக இருந்தாலும், தனது மேக்கிங் மூலம் அந்த குறையை சரிசெய்து, படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும் இயக்குநர் துவராக் ராஜா, தான் சொல்ல வந்ததை நேர்த்தியாக சொல்லியிருப்பதோடு, காட்சிகளை சுருக்கமாக வைத்து தொய்வு ஏற்படாமல் படத்தை நகர்த்துகிறார். குறிப்பாக பரோல் எடுக்க என்ன செய்ய வேண்டும்?, போன்ற விஷயங்களை சொல்லியிருக்கும் விதம் மற்றும் காட்சிப்படுத்திய விதம் சுவாரஸ்யம்.
மொத்தத்தில், ‘பரோல்’ பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5