Latest News :

‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ (மலையாளம்) திரைப்பட விமர்சனம்

3bb54e4080e6a3e94783d70cb6a8977e.jpg

Casting : Vinith Srinivasan, uraj Venjaramoodu, Sudhy Kopa, Arsha Baiju, Tanvi Ram, George Kora, Riaa Saira, Sudheesh

Directed By : Abhinav Sunder Nayak

Music By : Sibi Mathew Alex

Produced By : Manoj Ponkunnam

 

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டும், என்று சொல்வார்கள். ஆனால், வாழ்க்கையில் எளிதாக முன்னேற வேண்டும் என்றால், வல்லவனாக இருந்தால் மட்டும் போதாது கெட்டவனாகவும் இருக்க வேண்டும், என்று சொல்வது தான் ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ படத்தின் கதை.

 

வழக்கறிஞரான நாயகன் வினீத் ஸ்ரீனிவாசன், தன்னிடம் அனைத்து தகுதிகளும் இருந்தும் தன்னால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியவில்லை என்று வருந்துகிறார். இருந்தாலும் வாழ்க்கையில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பயணிப்பவர், அதற்காக தவறான பாதையை தேர்வு செய்கிறார். அந்த தவறான பாதை அவரை எத்தகைய தவறான மனிதராக மாற்றுகிறது, அதனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனையும், அதில் இருந்து அவர் விடுபட்டாரா?, இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் வினீத் ஸ்ரீனிவாசன், அமைதியான முகம், அமைதியான நடிப்பு, என்று நல்ல மனிதருக்கான அனைத்து தகுதிகளும் கொண்டவராக இருந்தாலும், அவர் செய்யும் தவறுகள் அனைத்தும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஆனால், அதையும் மிக அமைதியாகவே செய்து ரசிகர்கள் மனதில் தனது வில்லத்தனத்தை நல்லத்தனமாக பதிவு செய்துவிடுகிறார்.

 

வினீத் ஸ்ரீனிவாசனின் மனைவியாக நடித்திருக்கும் அர்ஷா பைஜூவின் வேடமும், தவறு செய்யாமல் யாராலும் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்பதை வலியுறுத்தும்படி சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த வேடத்திற்கு ஏற்றவாறு கச்சிதமாக நடித்திருக்கும் அர்ஷா பைஜூ, கணக்கு போட்டு காதல் செய்வதோடு, விபத்து நடந்த உடன் போடும் கணக்கு மூலம், கணவனையே மிஞ்சி விடுகிறார்.

 

வினீத்தின் தோழியாக வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருக்கும் தன்வி ராம், நல்லவர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நச்சுனு நடித்திருக்கிறார். 

 

வினீத்துக்கு போட்டி வழக்கறிஞராக நடித்திருக்கும் சுராஜ் வெஞ்சாரமூடு, சட்டத்துறையால் எப்படிப்பட்ட மோசடிகள் நடந்துக்கொண்டிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். ஆனால், வினீத் ஸ்ரீனிவாசன் யோசிக்கும் அளவுக்கு அவர் யோசிக்காதது ஏன்? என்பது தான் தெரியவில்லை.

 

விஸ்வஜித்  ஒடுக்காதிலின் ஒளிப்பதிவு மற்றும் சிபி மதேவ் அலெக்ஸின் இசை இரண்டுமே அளவாக பயணித்து கதைக்கு பலம் சேர்த்துள்ளது. 

 

அபினவ்  சுந்தர்  நாயக் மற்றும் விமல்  கோபாலகிருஷ்ணன் இணைந்து எழுதியுள்ள கதையை அபினவ் சுந்தர் நாயக் இயக்கியுள்ளார். இவ்வுலகில் பெரிய உயரத்திற்கு சென்ற வெற்றியாளர்கள் அனைவரும் வாழ்க்கையில் எதாவது தவறுகளை செய்து தான் அந்த நிலைக்கு சென்றிருப்பார்கள், என்று சொல்லியிருக்கும் இயக்குநர், வெற்றி பெற கொலை கூட செய்யலாம், என்று சொல்லியிருப்பது பெரும் சோகம்.

 

படத்தின் கரு மிக மிக கொடியதாக இருந்தாலும், அதை காமெடியாக சொல்லி தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்திருக்கும் இயக்குநரின் கொடூரத்தனமான மனம் அனைத்து காட்சிகளிலும் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

 

சட்டத்துறையால் நடத்தப்படும் மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் காட்சிகள் வைத்ததற்காக இயக்குநர் அபினவ்  சுந்தர்  நாயக்கை பாராட்டினாலும், படத்தின் முடிவில் தப்பை சரியாக செய்துவிட்டால் தண்டனையில் இருந்து கூட தப்பிக்கலாம், என்று சொல்லி தவறான வழியை மக்களுக்கு காடும் கொடியவராக தன்னை நிரூபித்துக்கொள்கிறார்.

 

சமூக சீரழிவுக்கு திரைப்படங்கள் முக்கிய காரணம், என்று ஆய்வுகளும் சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள். அது எவ்வளவு பெரிய உண்மை என்பது இந்த படத்தை பார்த்தால் தெரிந்துவிடும்.

 

வாழ்க்கையில் ஜெயிக்க எதை வேண்டுமானாலும் செய்யலாம், என்று வலியுறுத்தும் இப்படத்தின் இயக்குநர் அபினவ்  சுந்தர்  நாயக், சினிமாவில் ஜெயிக்க எப்படிப்பட்ட தவறுகளை செய்தாரோ!

 

மொத்தத்தில், ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ ஆபத்தானவன்.

 

ரேட்டிங் 2.5/5

Recent Gallery