Latest News :

’செஞ்சி’ திரைப்பட விமர்சனம்

f85324efcccd1d136810e1818580d1c6.jpg

Casting : Ganesh Chandrasekar, ksenya Panferova, Sree Ramya, Yogiram, Shyju kallara, Master Sai Srinivasan Master Vidhesh Annadh, Master Sanjai, Master Dharshan Kumar, Baby Dheekshanya

Directed By : GC

Music By : L.V Muthu Ganesh

Produced By : Chandrasekaran.G

 

பாண்டிச்சேரியில் இருக்கும் தனது மூதாதையர்களின் வீட்டுக்கு வரும் பிரான்ஸை சேர்ந்த க்ஷேன்யா பான்பெரோவாவுக்கு ஒரு ஓலைச்சுவடி கிடைக்கிறது. அந்த ஓலைச்சுவடி பற்றி அறிந்துக்கொள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கணேஷ் சந்திரசேகரின் உதவியை நாடுகிறார். ஓலைச்சுவடியின் ரகசியங்களை ஆராயும் கணேஷ் சந்திரசேகர், அதில் புதைல் ரகசியம் இருப்பதை கண்டுபிடிக்கிறார். இதையடுத்து க்ஷேன்யா பான்பெரோவாவுடன் இணைந்து அந்த புதையலை தேடி செல்லும் கணேஷ் சந்திரசேகர், அந்த புதையலை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘செஞ்சி’.

 

புதையல் வேட்டை உள்ளிட்ட சாகச திரைப்படங்கள் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் குறைவு. அந்த குறையை போக்கும் விதமாக உருவாகியுள்ள இப்படம் புதையல் வேட்டையை மையப்படுத்திய சாகச திரைப்படமாக மட்டும் இன்றி சிறுவர்களை மையப்படுத்திய சாகச திரைப்படமாக அமைந்திருப்பது தனி சிறப்பு.

 

படத்தை இயக்கியிருக்கும் கணேஷ் சந்திரசேகர், கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். ஜாக் என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமாக இருப்பவர், முதல் படம் போல் அல்லாமல் மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார். உடல் மொழி, வசன உச்சரிப்பு என அனைத்திலும் கவனம் செலுத்தியிருக்கும் கணேஷ் சந்திரசேகர் தனது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

 

பிரான்ஸ் நாட்டு பெண் வேடத்தில் நடித்திருக்கும் ரஷ்யா நாட்டை சேர்ந்த க்ஷேன்யா பான்பெரோவா, மர்மங்கள் நிறைந்த தனது மூதாதையரின் வீட்டின் ரகசியங்களை தெரிந்துக்கொள்வதில் காட்டும் ஆர்வம், ஜாக்குடன் சேர்ந்த புதையல் தேடல் பயணம் என்று கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

 

கணேஷ் சந்திரசேகரின் உதவியாளராக நடித்திருக்கும் ஸ்ரீ றம்யா, வில்லனாக நடித்திருக்கும் யோகி ராம், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சுஹைஜு கள்ளரா என மற்ற நடிகர்களும் அளவான நடிப்பால் கவர்கிறார்கள்.

 

Gingee Movie Review

 

சிறுவர்கள் சாய் ஸ்ரீனிவாசன், தர்சன் குமார், விதேஷ் ஆனந்த், சஞ்சய் மற்றும் சிறுமி பேபி தீக்‌ஷன்யா ஆகியோரது குறும்பத்தனமான நடிப்பும், தைரியமான பயணமும் சிறுவர்களை கவரும் விதத்தில் இருக்கிறது.

 

ஹரிஷ் ஜிண்டேவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. தரமாகவும், பிரமாண்டமாகவும் காட்சிகளை படமாகியிருக்கும் ஷரிஷ் ஷிண்டே குறிப்பிட்ட சில லொக்கேஷன்களை வெவ்வேறு கோணத்தில் காட்டியிருப்பதோடு, தனது ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்கிறார்.

 

எல்.வி.முத்து கணேஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. 

 

ஆனந்த் ஜெரால்டு மற்றும் கிருஷ்ணன் உன்னி  ஆகியோரது படத்தொகுப்பு நேர்த்தி. சிறுவர்களின் பயணம், ஜாக் மற்றும் சோபியா ஆகியொரது பயணம் மற்றும் தீவிரவாதிகளின் பயணம் என்று மூன்று பயணங்களையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து திரைக்கதைக்கு கூடுதல் வேகத்தை கொடுத்திருக்கிறார்கள்.

 

கலை இயக்குநர் நட்ராஜின் கைவண்ணத்தில் புதையல் இருக்கும் பகுதி வடிவமைக்கப்பட்ட விதம் இயல்பாக இருக்கிறது. சில இடங்களில் எது செயற்கை, எது இயற்கை என்று கண்டறியாதபடி மிக நேர்த்தியாக கலைப்பணிகள் அமைந்திருக்கிறது.

 

கதை எழதி இயக்கியிருக்கும் கணேஷ் சந்திரசேகர், மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்க வேண்டிய படத்தை சிறிய பட்ஜெட்டிலும் எடுக்கலாம் என்று நிரூபித்துள்ளார். 

 

புதையலை தேடி செல்லும் பயணம் தான் கதை என்றாலும், அதை வைத்து அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையில் சிறுவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது பாராட்டும்படி உள்ளது. அதிலும், சிறுவர்கள் புதையல் இருக்கும் இடத்தில் சிக்கிக்கொண்ட பிறகு, அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக்கொண்டு சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறது.

 

பெரும் புதையல் இருக்கும் இடத்திற்கு செல்லும் குழுவினர் எந்தவித பிரச்சனைகளையும் எதிர்கொள்ளாமல் மிக சுலபமாக செல்வதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும், இயக்குநர் தான் சொல்ல வந்த கதையை, மிக இயல்பாகவும், தொய்வில்லாமல் நகரும் திரைப்படமாகவும் சொல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘செஞ்சி’ வியக்க வைக்கவில்லை என்றாலும் போரடிக்கவில்லை.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery