Latest News :

’யூகி’ திரைப்பட விமர்சனம்

a8ed6dd8e8c448b4441292c2a62cb560.jpg

Casting : Kathir, Naren, Natty Natraj, Kayal Anandhi, Pavithra Lakshmi, Aathmeeya, Pradap Pothan, John Vijay, Vinothini

Directed By : Zac Harries

Music By : Ranjin Raj and Dawn Vincent

Produced By : UAN Film House

 

ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான பிரதாப் போத்தன் துப்பறியும் நிறுவனம் நடத்தும் நரேனிடம் ஒரு பெண்ணின் தகவலை கொடுத்து அந்த பெண்ணை கண்டுபிடித்து தர சொல்வதோடு, போலீஸ் எஸ்.ஐ கதிரையும் உடன் வைத்துக்கொள்ளுமாறு சொல்கிறார். நரேன் மற்றும் கதிர் ஆகியோர் அந்த பெண் குறித்து விசாரிக்கும் போது, நட்டி நட்ராஜும் அந்த பெண்ணை தேடுகிறார். இறுதியில் அந்த பெண்ணை யார் கண்டுபிடித்தது? அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை யூகிக்க முடியாத சஸ்பென்ஸோடும், பல திருப்புமுனைகளோடும் சொல்வது தான் ‘யூகி’.

 

நரேன் மற்றும் கதிர் ஆனந்தியின் புகைபப்டத்தை வைத்துக்கொண்டு அவரை தேடும் போதே படத்தில் இருக்கும் பரபரப்பு நம்மை தொற்றிக்கொள்ள, அடுத்தடுத்த காட்சிகளில் வரும் திருப்பங்களும், யூகிக்க முடியாத திரைக்கதையும் படத்தை படு வேகத்தில் நகர்த்தி செல்கிறது.

 

துப்பறிவாளர் வேடத்தில் நடித்திருக்கும் நரேன், கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருப்பதோடு எப்போதும் இறுக்கமான முகத்தோடு இருப்பதால், அவர் பின்னணியில் ஏதோ ட்விஸ்ட் இருப்பதை உணர முட்கிறது. ஆனால், அங்கும் நாம் நினைத்தது நடக்காமல் வேறு ஒன்று நடப்பது எதிர்பாராத ட்விஸ்ட்டாக அமைகிறது.

 

போலீஸ் எஸ்.ஐ-யாக நடித்திருக்கும் கதிரின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் சாதாரணமானதாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் படத்தின் மையக்கருவாக மாறி அவர் காட்டும் அதிரடியும், அதில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பும் அமர்க்களம்.

 

நரேன் தேடுவது போல் நட்டி நட்ராஜும் பெண்ணை தேடுகிறார். ஒரு பக்கம் தனது மகள், மறுபக்கம் பணி என்று சுறுசுறுப்பாக வலம் வரும் நட்டி நட்ராஜ் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

 

கதையின் மையப்புள்ளி வேடத்தில் நடித்திருக்கும் ஆனந்தி, மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். கணவருக்காக அவர் எடுக்கும் முடிவு, பிறகு அதே கணவருக்காக கோபப்படும் போது அவருக்கு ஏற்படும் பரிதாப நிலை படம் பார்ப்பவர்களையும் கலங்க வைக்கிறது.

 

மருத்துவராக நடித்திருக்கும் வினோதினி, ஜான் விஜய், பவித்ரா லக்‌ஷ்மி, ஆத்மியா, பிரதாப் போத்தன் என மற்ற நடிகர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது பணியை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷ் படத்தின் முதல் காட்சி முதல் க்ளைமாக்ஸ் வரை அனைத்து காட்சிகளிலும் சஸ்பென்ஸ் த்ரில்லர் உணர்வு இருக்கும்படி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் இரண்டு விபத்துக் காட்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அதற்கு ஏற்ப அந்த இரண்டு காட்சிகளையும் மிரட்டலாக படமாகியிருக்கிறார். 

 

இசையமைப்பாளர் ரஞ்சன் ராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசையமைத்திருக்கும் டான் வின்செண்ட், சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைக்கு ஏற்ப இசையமைத்திருந்தாலும், அளவான இசை மூலம் காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் சாக் ஹரிஷ், வாடகைத்தாய் முறையை கருவாக வைத்துக்கொண்டு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைக்கதை அமைத்திருப்பதோடு, அதை யூகிக்க முடியாதபடி பல திருப்புமுனைகளை வைத்து ரசிக்க வைக்கிறார்.

 

முதல் பாதியில் ஆனந்தியை தேடும் போது, அவருக்கு என்ன நடந்திருக்கும்? என்ற கேள்வியோடு விறுவிறுப்பாக படத்தை நகர்த்தி செல்லும் இயக்குநர் சாக் ஹாரிஸ், திடீரென்று ஒரு ட்விஸ்ட்டை வைத்து மொத்த படத்தையும் மாற்றுவது, படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறது.

 

அதே சமயம், படத்தில் நரேன் மூலம் வைக்கப்பட்ட திருப்புமுனையும், அவர் மீது சந்தேகம் எழும் காட்சியும் ஏதோ திணிக்கப்பட்டது போல் இருக்கிறது. அதன் பிறகு மற்றொரு திருப்புமுனையோடு உண்மையான காரணத்தை சொல்லும் போது மீண்டும் வேகம் எடுக்கும் படம், இறுதியில் ரசிகர்களுக்கு முழுமையான திருப்தியை கொடுக்கிறது.

 

மொத்தத்தில், ‘யூகி’ வழக்கமான கதையை யூகிக்க முடியாதபடி சொன்னதில் வெற்றி பெற்றிருக்கிறது.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery