Latest News :

’பவுடர்’ திரைப்பட விமர்சனம்

56ec001414d39920778826f20b07b7fb.jpg

Casting : Nikil Murugan, Vijaysri G, Vaiyapuri, Mottai Rajendran, Aadhavn, Vidhya Pradeep, Durai Shankar

Directed By : Vijay Sri G

Music By : Leander Lee Marty

Produced By : G Media - Jaya Sree Vijay

 

காலையில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் மணப்பெண் வித்யா பிரதீப், இரவில் யாரையோ சந்திக்க செல்கிறார்.

 

தனது மகளை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுக்கும் இளைஞரை வையாபுரி கொலை செய்ய முயற்சிக்கிறார்.

 

வறுமை பிடியில் சிக்கி தவிக்கும் சினிமா மேக்கப் மேனான விஜய்ஸ்ரீ ஜி, பணத்திற்காக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது அவருக்கு ஒரு வேளை வர, அந்த வேலையை செய்ய செல்கிறார்.

 

போலீஸ் கமிஷ்னர் வீட்டில் ஏதோ நடக்க, அது தொடர்பான விசாரணையில் இறங்கும் காவல்துறை அதிகாரி ராகவன் தலைமையிலான குழுவினர் அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள்.

 

தொகுதி எம்.எல்.ஏ-வை கொலை செய்யும் சில இளைஞர்கள் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி டீ கேனில் எடுத்துச் சென்று அப்புறப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

 

இந்த ஐந்து கதைகளும் ஒரு இரவில் நடக்க, இறுதியில் இந்த ஐந்து கதைகளில் தொடர்புடையவர்கள் ஒரே புள்ளியில் எப்படி சந்திக்கிறார்கள்? யார் யாருக்கு என்ன நடந்தது? என்பதை சொல்வது தான் ‘பவுடர்’ படத்தின் கதை.

 

காவல்துறை அதிகாரி ராகவன் வேடத்தில் நடித்திருக்கும்  நிகில் முருகன், உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பால் மிரட்டுகிறார். தாடி வச்ச போலீஸாக வலம் வந்தாலும் தனது கம்பீரமான நடிப்பு மூலம் போலீஸ் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தும் நிகில் முருகன் தனது வேலையை மிக சரியாக செய்து கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

சினிமா மேக்கப் மேன் வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி, பாவமான முகத்தோடு படம் முழுவதும் வலம் வந்தாலும் சில நேரங்களில் கொடூரமான வில்லனுக்கான முகத்தை காட்டி பயமுறுத்தவும் செய்கிறார்.

 

மகளை ஏமாற்றியவரை பழிவாங்க துடிக்கும் அப்பா வேடத்தில் அசத்தியிருக்கும் வையாபுரி, தனது காமெடி இமேஜை உடைத்து புதிய வேடத்தில் நடித்திருப்பது பாராட்டும்படி உள்ளது.

 

காலையில் திருமணத்தை வைத்துக்கொண்டு இரவில் ஒருவரை சந்திக்க செல்லும் வித்யா பிரதீப்பின் வேடமும், அதில் அவர் வெளிப்படுத்திய படபடப்பான நடிப்பு மற்றும் தைரியமான முடிவு சமூகத்தில் தற்போது நடக்கும் இணைய குற்றங்களை தோளுரித்து காட்டுகிறது.

 

காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் பத்திரிகையாளர் துரை சங்கர், போலீஸ் வேடத்திற்கு ஏற்ற உயரம் மற்றும் கம்பீரம் என்று கதாபத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருவதோடு, நடிப்பிலும் போலீஸாகவே வாழ்ந்திருக்கிறார்.

 

சிங்கம்புலி, சிசர் மனோகர், மொட்டை ராஜேந்திரன் ஆகிய அனுபவம் வாய்ந்த நடிகர்களுடன், இளையா, விக்கி, சதீஷ் முத்து, ஷாந்தினி, பிரபாகர் போன்ற புதியவர்களும் இணைந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

 

ராஜ பாண்டியின் ஒளிப்பதிவு மிரட்டலாக இருக்கிறது. படம் முழுவதும் இரவில் நடந்தாலும் ஒவ்வொரு காட்சிகளையும் மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.

 

லியாண்டர் லீ மார்டியின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் நடக்கும் கதைக்கு ஏற்றபடி பின்னணி இசையமைத்திருப்பவர் எந்த இடத்திலும் அதிகமான சத்தத்தை பயன்படுத்தாமல், அளவான இசை மூலம் கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.

 

கதை எழுதி இயக்கியிருக்கும் விஜய்ஸ்ரீ ஜி, ஐந்து கதைகளை வைத்துக்கொண்டு ஒரு நேர்த்தியான சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்போடு நம்மை படத்துடன் பயணிக்க வைக்கும் இயக்குநர் மனிதக்கறி  என்ற புதிய விஷயத்தை சொல்லி மிரட்டவும் செய்திருக்கிறார்.

 

மொத்தத்தில் ‘பவுடர்’ பார்த்தால் பிடிக்கும்.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery