Casting : SJ.Surya, Sanjana, Laila, Nazar, Vivek Prasanna, Harish Peradi, Smiruthi Venkat, Aruvi Balaji, Pradeep Kumar, Thilip Subbarayan
Directed By : Andrew Louis
Music By : Simon K. King
Produced By : Pushkar and Gayathri
இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்த பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? யாரால் கொலை செய்யப்பட்டார்? என்பதை கண்டுபிடிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.ஜே.சூர்யா தலைமையில் காவல்துறை களத்தில் இறங்குகிறது. எந்தவித துப்பும் கிடைக்காமல் பல மர்மங்கள் நிறைந்த பாதையில் பயணிக்கும் விசாரணையை ஒரு கட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் முடித்துவிடுகிறார்கள். ஆனால், அந்த முடிவை ஏற்க மறுக்கும் எஸ்.ஜே.சூர்யா, தனி ஒரு நபராக உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்க, கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சொல்வது தான் ’வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’.
மொத்தம் 8 பாகங்களை கொண்ட இந்த இணையத்தொடரின் கரு எளிமையானதாக இருந்தாலும், அந்த கருவை வைத்துக்கொண்டு அனைத்து பாகங்களையும் அடுத்தது என்ன நடக்கும்? என்ற ஆர்வத்தோடு பார்க்க வைத்திருக்கிறார்கள்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தான் எடுத்துக்கொண்ட வழக்கை முடிக்க முடியாமல் தவிப்பது, அதே சமயம் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க போராடுவது, அதனால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு மனைவியிடம் புலம்புவது என்று நடிப்பில் அசத்தியிருக்கிறார். சினிமாவில் நாம் இதுவரை பார்க்காத எதார்த்தமான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தனது வழக்கமான பாணியை முழுமையாக தவிர்த்துவிட்டு கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் அளவுக்கு அதிகமான நடிப்பை வெளிக்காட்டாமல் விவேக் என்ற அந்த வேடத்திற்கு எந்த அளவுக்கு நடிக்க வேண்டுமோ அதை மிக சரியான அளவில் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை சஞ்சனா, வெலோனி என்ற கதாபாத்திரம் எப்படிப்பட்ட பெண் என்பதை யூகிக்க முடியாதபடி நடித்திருக்கிறார். அவருடைய வசன உச்சரிப்பு, அவர் மற்றவர்களிடம் பழகுவது, என்று வெலோனியோ குறித்து பரவும் வதந்திகள் உண்மையா? பொய்யா? என்பதை யூகிக்க முடியாதபடி மிக இயல்பாக நடித்திருக்கிறார்.
வெலோனியின் அம்மா வேடத்தில் நடித்திருக்கும் லைலா, ஆங்கிலோ இந்தியன் பெண் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு மிக எதார்த்தமாகவும் நடித்திருக்கிறார்.
போலீஸ் எஸ்.ஐ வேடத்தில் நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, கன்னியாக்குமரி மாவட்ட தமிழை உச்சரிக்கும் விதம் மற்றும் இயல்பான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.
வழக்கு விசாரணை பற்றி நினைத்து குழப்பமடைந்திருக்கும் போலீஸ் கணவனின் மனநிலையை புரிந்துக்கொள்ளாமல், இறந்த பெண் மீது அவர் காதல் கொண்டதாக புலம்பும் மனைவி வேடத்தில் நடித்திருக்கும் ஸ்மிருதி வெங்கட் நடிப்பு பாராட்டும்படி இருந்தாலும், அவருடைய கதாபாத்திர வடிவமைப்பு முட்டாள் தனமாக இருக்கிறது.
எழுத்தாளர் வேடத்தில் நடித்திருக்கும் நாசர், ஹரிஷ் பெராடி, அவினாஷ், அஸ்வின் குமார், குமரன் தங்கராஜ், விக்கி, ஆதித்யா, வைபவ் முருகேசன், மீரன் மீதின், அஸ்வின் ராம், பிரதிப் குமார், திலீப் சுப்பராயன், அருவி பாலாஜி, மகேஸ்வரன், குலபுலி லீலா என தொடரில் நடித்திருக்கும் அனைவரும் கதையோடு பயணிக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருப்பதோடு, எதாவது ஒரு இடத்தில் நம் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் நடித்திருக்கிறார்கள்.
க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் தொடர் என்பதையும் தாண்டி பார்வையாளர்களுக்கு புதுவிதமான உணர்வை தரக்கூடிய விதத்தில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சரவணன் ராமசாமி. தொடரின் ஆரம்பம் முதல் முடிவு வரை அனைத்து காட்சிகளையும் பசுமையாக படமாக்கி கண்களை குளிரச்செய்திருக்கிறார். பொதுவாக சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் என்றாலே அழுக்கு படிந்த அல்லது பாழடைந்த மற்றும் இருள் சூழ்ந்த இடங்களை அதிகமாக காட்டுவார்கள். ஆனால், இதில் வித்தியாசமாக எங்கு பார்த்தாலும் பசுமையும், அமைதியும் நிறைந்த இடங்களை காட்டியிருப்பது கூடுதல் பலமாகவும், புதியதாகவும் இருக்கிறது.
இசையமைப்பாளர் சைன் கே.கிங், தரமான பின்னணி இசை மூலம் தொடருக்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளார். எந்த இடத்திலும் அளவுக்கு அதிகமான சத்தம் இல்லாமல் அவர் கையாண்டிருக்கும் பின்னணி இசை வெலோனி என்ற கதாபாத்திரம் மீது பார்வையாளர்களுக்கு பரிதாபம் ஏற்பட வைக்கிறது.
எளிமையான கருவாக இருந்தாலும் அதை மிக வளிமையாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநருக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின். பார்வையாளர்கள் யூகிக்க முடியாதபடி காட்சிகளை தொகுத்திருப்பவர் இறுதி பாகம் வரை நம் யூகத்தை பொய்யாக்கும் விதமாக காட்சிகளை நகர்த்தி செல்கிறார்.
கதை எழுதி இயக்கியிருக்கும் ஆண்ட்ரூ லூயிஸ், தொடரின் ஆரம்பத்திலேயே வெலோனி கொலை செய்யப்பட்டதை காட்டி நம்மை கதைக்குள் இழுத்துவிடுகிறார். அதன் பிறகு வெலோனி குறித்த வதந்திகள் மற்றும் அவரை சார்ந்த ரகசியங்கள் என்று பயணிக்கும் ஒவ்வொரு பாகத்திலும், அவரை கொலை செய்தது யார்? என்ற கேள்வியை நம் மனதில் எழுப்பி, அதற்கு நம்மையே விடை தேடும்படி திரைக்கதை அமைத்தாலும், இறுதியில் நம் யூகத்தை பொய்யாக்கி தொடரை முடித்திருப்பது சபாஷ் சொல்ல வைக்கிறது.
முதல் நான்கு பாகங்கள் நம்மை சீட் நுணியில் உட்கார வைத்தாலும், அதன் பிறகு வரும் மீதமுள்ள நான்கு பாகங்கள் நம் பொருமையை சற்று சோதிக்கிறது. இருந்தாலும், இந்த கருவை வைத்துக்கொண்டு இத்தனை பாகங்கள் கொண்ட தொடரை அதிலும் இறுதி பாகம் வரை சஸ்பென்ஸ் உடையாமல் நகர்த்தி சென்றிருக்கும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், மிகப்பெரிய சவாலோடு பயணித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், ’வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ இணையத்தொடர் ரசிகர்களுக்கு ஏற்ற விருந்து.
ரேட்டிங் 3.5/5