Latest News :

’விட்னஸ்’ திரைப்பட விமர்சனம்

2e511f0f750de663a1869010c957cedc.jpg

Casting : Shraddha Srinath, Rohini, Subatra Robert, Shanmuga Raja, Azhagam Perumal, G Selva, Rajeev Anand, Tamilarasan, Srinath

Directed By : Deepakv

Music By : Ramesh Thamilmani

Produced By : TG Vishwa Prasad

 

கல்லூரி மாணவர் பார்த்திபன் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் போது  விசவாயு  தாக்கி உயிரிழந்து விடுகிறார். துப்புரவுப் பணியாளரான அவரது அம்மா ரோகிணி, சட்டவிரோதமாக தனது மகனை அந்த பணியில் ஈடுபடுத்தி கொன்றவர்களுக்கு சட்ட ரீதியாக தண்டனை பெற்றுக்கொடுக்க முடிவு செய்கிறார். அவருக்கு உதவியாக தொழிற்சங்க தலைவர் மற்றும் ஷ்ரத்த ஸ்ரீகாந்த் துணை நிற்க, அவர்களது சட்ட போராட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை எதார்த்தமான முறையில் சொல்லியிருப்பது தான் ‘விட்னஸ்’.

 

மக்களின் போராட்டம் அல்லது சட்ட ரீதியிலான போராட்டம், எதுவாக இருந்தாலும் அரசு எந்திரத்தை எதிர்த்தால் இறுதியில் தீர்ப்பு என்பது அவர்கள் பக்கம் தான் இருக்கும். காரணம் நீதித்துறையே அரசு எந்திரத்தின் ஒரு பாகமாகவே செயல்படுகிறது என்பதை மிக தெளிவாக சொல்லியிருக்கும் இப்படம், குப்பைகளை அகற்றி சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்கும் துப்புறவுத்தொழிலாளிகளின் அவல நிலையை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறது.

 

மனித கழிவுகளை மனிதன் சுத்தம் செய்வதற்கு அரசு தடை விதித்தாலும், இன்னமும் நம் நாட்டின் பல பகுதிகளில் அந்த அவலங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதோடு, அதன் மூலம் பல அப்பாவி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருவதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது முத்துவேல் மற்றும் ஜேபி சாணக்யாவின் திரைக்கதை.

 

எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் தீபக், சாமாணிய மக்களின் வாழ்க்கையை சினிமாத்தனம் இல்லாமல் சாதாரணமாக நகர்த்தி சென்றாலும், கதை சொல்லும் கருத்து மக்கள் மனதில் மிக ஆழமாக பதியும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

 

ரமேஷ் தமிழ்மணியில் இசை கதாபாத்திரமாகவே பயணித்திருக்கிறது. கதாபாத்திரங்கள் மன உணர்வை படம் பார்ப்பவர்களிடம் கத்தி காட்சிக்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

பார்த்திபன் வேடத்தில் நடித்த இளைஞர், அவரது அம்மாவாக நடித்திருக்கும் ரோகிணி, ஷரத்தா ஸ்ரீகாந்த் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற கச்சிதமான தேர்வாக இருப்பதோடு, கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

 

ஆண் வர்க்கத்தின் எதிர்ப்பை தனி ஒருவராக எதிர்கொள்ளும் தைரியமான பெண்ணாக நடித்திருக்கும் ஷ்ரத்த ஸ்ரீநாத், ஒரு கட்டத்தில் தனது அம்மாவிடம் தனது இயலாமையை வெளிப்படுத்தி கண் கலங்கும் இடத்தில் இயல்பாக நடிக்கிறார்.

 

சண்முக ராஜா, அழகம் பெருமாள், ஜி.செல்வா, ராஜீவ் ஆனந்த், தமிழரசன், ஸ்ரீநாத், சுபத்ரா ராபெர்ட் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

 

சொகுசு வாழ்க்கைக்காக பல கோடிகளை செலவு செய்யும் கூட்டம், தங்களது கழிவுகளை அகற்றுவதற்கு செலவு செய்ய தயங்குவதோடு, பிற மனிதர்களின் உயிரை துச்சமாக எண்ணி அந்த பணியில் ஈடுபடுத்தும் கொடுமைகளுக்கு பின்னணியில் சாதியும் ஒரு காரணமாக இருப்பதை சுட்டிக்காட்டியிருக்கும் இயக்குநர் தீபக் “சாதி பாகுபாடு இப்போதெல்லாம் இல்லை” என்று வெட்டி பேச்சு பேசுபவர்களுக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார்.

 

இவர்கள் தான் இந்த வேலையை செய்ய வேண்டும், என்று நினைத்து தற்போதும் மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துபவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னதோடு,  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இயக்குநர் தீபக்கை கைதட்டி பாராட்டலாம்.

 

மொத்தத்தில், ‘விட்னஸ்’ நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

 

ரேட்டிங் 4/5

Recent Gallery