Latest News :

‘விஜயானந்த்’ திரைப்பட விமர்சனம்

daeedb1ae7b37880269033023173a7f9.jpg

Casting : Nihal, Siri Prahlad, Anant Nag, Vinaya Prasad, Bharat Bopana, Archana Kottige

Directed By : Rishika Sharma

Music By : Gopi Sundar

Produced By : VRL Film Productions - Dr.Anand Sankeshwar

 

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விஜயானந்த் ரோட்லைன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சங்கேஸ்வர், ஒரு லாரியுடன் தனது தொழிலை தொடங்கி தற்போது சர்வதேச அளவில் மிகப்பெரிய தொழிலதிபாராக உயர்ந்திருக்கும் அவர், சரக்கு போக்குவரத்து துறையோடு பத்திரிகை துறையிலும் மிகப்பெரிய சாதனைகளை செய்திருக்கிறார். இத்தகைய சாதனை பயணத்தில் அவர் சந்தித்த சோதனைகள், எதிர்ப்புகள் மற்றும் ஏமாற்றங்களை எப்படி முறியடித்து வெற்றி பெற்றார், என்பதை விவரிப்பது தான் ‘விஜயானந்த்’ கதை.

 

விஜய் சங்கேஸ்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் நிஹால், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். தொழில்துறையில் எதிர்காலத்தை சரியாக கணித்து அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், அதில் வரும் தடைகளை கவர் கடக்கும் விதம் வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு நம்பிக்கை தரும்படி இருக்கிறது.

 

விஜய் சங்கேஸ்வரின் மகனான ஆனந்த் சங்கேஸ்வர் வேடத்தில் நடித்திருக்கும் பாரத் போபண்ணா, 16 வயதில் தனது அப்பாவின் இடத்தில் இருந்து தொழிலை நடத்துவதும், அதை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வதும் பிரமிக்க வைக்கிறது.

 

விஜய் சங்கேஸ்வரின் மனைவியாக நடித்திருக்கும் சிரி பிரஹலாத், அப்பாவாக நடித்திருக்கும் ஆனந்த் நாக், வினயா பிரசாத், அர்ச்சனா கொட்டிகே, பத்திரிகையாளராக நடித்திருக்கும் நடிகர் என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

 

கீர்த்தன் புஜாரி ஒளிப்பதிவில் 1969 ஆம் ஆண்டு காட்சிகள் மிக நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது. நம்மையும் அக்காலத்தோடு பயணிக்க வைக்கும்படி காட்சிகள் மிக இயல்பாக அமைந்துள்ளது.

 

இசையமைப்பாளர் கோபி சுந்தரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அளவாக இருப்பதோடு படத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலும் இருக்கிறது.

 

கலை இயக்குநரின் பணி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. பழையக்காலத்து ரயில், வியாபார சந்தை, லாரிகள் என அனைத்தையும் மிக தத்ரூபமாக கலை இயக்குநர் வடிவமைத்திருக்கிறார்.

 

ஒருவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் போது இருக்கும் சவால்களை மிக சாமத்தியமாக சமாளித்திருக்கிறார் இயக்குநர் ரிஷிகா சர்மா. தொழிலதிபர், பத்திரிகைதுறை முதலாளி, அரசியல்வாதி என பன்முகம் கொண்ட விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை மற்றும் அவரது வெற்றி பயணத்தில் சில கற்பனைகளை சேர்த்து திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ரிஷிகா சர்மா, நம்பிக்கை தரும்படியாக படத்தை நகர்த்தி செல்கிறார்.

 

சரக்கு போக்குவரத்து துறை என்பது மிகவும் கடினமான துறை என்று படத்தின் சில இடங்களில் குறிப்பிடும் இயக்குநர் ரிஷிகா சர்மா, அந்த துறையின் பின்னணியில் இருக்கும் சவால்களை இன்னும் விரிவாக சொல்லியிருந்தால் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரித்திருக்கும். அதேபோல், விஜய் சங்கேஸ்வர் தினசரி பத்திரிகையை தொடங்கியது ஏன்? என்பதை விவரித்திருக்கும் இயக்குநர் அவர் அரசியலில் ஈடுபட்ட காரணத்தையும் சொல்லியிருக்கலாம். இப்படி முக்கியமான சில விஷயங்களை இயக்குநர் சொல்ல தவறியது ஏன்? என்று தான் தெரியவில்லை.

 

இருந்தாலும், கன்னட சினிமாவின் முதல் வாழ்க்கை வரலாற்று படம் என்ற பெருமையோடு வெளியாகியிருக்கும் இப்படம் அனைத்து தரப்பினருக்கும் நம்பிக்கை அளிக்கும் ஒரு வாழ்க்கை பயணமாகவே இருக்கிறது.

 

மொத்தத்தில், ‘விஜயானந்த்’ வெற்றியாளர்.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery