Latest News :

‘என் ஆளோட செருப்ப காணோம்’ விமர்சனம்

266affd913cbea6e1762587ec2f17f48.jpg

Casting : Thamizh, Anandi, Yogi Babu, KS Ravikumar, Livingstane

Directed By : Jagan Naath

Music By : Ishaan Dev

Produced By : Drumsticks Production

நல்ல கதையை விட, வித்தியாசமான ஐடியா கொண்ட படங்கள் அனைத்தும் ரசிகர்களை சுலபமாக சென்றடைவதுண்டு. அந்த வகையில் ஈர்ப்பான தலைப்பை கொண்ட இப்படம் எப்படி என்பதை பார்ப்போம்.

 

கல்லூரி மாணவரான தமிழ், கல்லூரி மாணவி ஆனந்தி மீது கண்டதும் காதல் வயப்பட, அவரை பின் தொடர்ந்து சென்று தனது காதலை வளர்க்கிறார். ஒரு முறை பஸ்ஸில் செல்லும் போது தனது ஒரு செருப்பை விட்டுவிடும் ஆனந்தி, பஸ் எடுக்கப்பட்டு விடுவதால், தன்னிடம் இருக்கும் மற்றொரு செருப்பையும் அங்கேயே போட்டு விடுகிறார். இதை அதே பேருந்தில் இருக்கும் தமிழ் பார்க்கிறார்.

 

செருப்பு போன சோகத்தில் வீட்டுக்கு வரும் ஆனந்திக்கு, வெளிநாட்டில் வேலை செய்யும் தனது அப்பா தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட அதிர்ச்சி செய்தி தெரிய வருகிறது. ஆனந்தியும் அவரது அம்மாவும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்காக ஜோசியர் ஒருவரிடம் குறி கேட்க, அவரோ காணாமல் போன ஆனந்தியின் செருப்பை அவர் எப்போது பார்க்கிறாரோ அப்போதுதான் அவரது தந்தையையும் பார்க்க முடியும், என்று சொல்கிறார். இதனால், தொலைந்த தனது செருப்புகளை ஆனந்தி தேட, இதனை அறியும் ஹீரோ தமிழ், தனது காதலியின் செருப்புகளை கண்டுபிடித்து, அவரிடம் கொடுத்துவிட்டு தனது காதலை சொல்லலாம், என்ற எண்ணத்தோடு செருப்பை தேட, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான், ‘என் ஆளோட செருப்ப காணோம்’ படத்தின் கதை.

 

‘பசங்க’, ‘கோலிசோடா’ போன்ற படங்களில் சிறுவனாக நடித்த பக்கோடா பாண்டி, இந்த படத்தில் தமிழ் என்ற பெயரில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். தோற்றத்தில் மட்டும் அல்லாமல் நடிப்பிலும் தன்னை ஹீரோவாக தயார்ப்படுத்திக் கொண்டுள்ள தமிழ், தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

 

படம் முழுவதும் எளிமையான தோற்றத்துடனேயே வரும் ஆனந்தி, கதாபாத்திரத்திற்கான சரியான தேர்வாக மனதில் நிறைகிறார்.

 

காமெடி வேடம் என்று சொல்வதை விட, படத்தின் மற்றொரு ஹீரோ என்று யோகி பாபுவை சொல்லலாம். அந்த அளவுக்கு படம் முழுவதும் வரும் அவர், தனது நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும் கைதட்டல் பெறுகிறார்.

 

தொலைந்த செருப்பு, அதை மையப்படுத்தி அடுத்தடுத்து வரும் காட்சிகள் என்று இயக்குநர் ஜெகன்நாத், திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைத்திருப்பதோடு, காட்சிகளை கச்சிதமாகவும், காமெடியாகவும் வடிவமைத்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.

 

இஷான் தேவின் இசையும், சுகா செல்வனின் ஒளிப்பதிவும், இது காமெடி படம் மட்டும் அல்ல காதல் படமும் தான், என்பதை பல இடங்களில் நமக்கு நினைவூட்டும்படி அமைந்துள்ளது.

 

கடத்தப்பட்ட அப்பா குறித்து குறி கேட்பதும், அதனுடன் காணாமல் போன செருப்பை சம்மந்தப்படுத்துவதும், சற்று மிகைப்படுத்துவது போல இருந்தாலும், அந்த சம்பவத்தை வைத்துக் கொண்டு இயக்குநர் கே.பி.ஜெகன்நாத், முழு படத்தையும் சிறப்பான பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘என் ஆளோட செருப்ப காணோம்’ திருப்திகரமான பொழுதுபோக்கு படமாக உள்ளது.

 

ஜெ.சுகுமார்

Recent Gallery