Casting : Nayanthara, Sathyaraj, Anupam Kher, Vinay, Haniya Nafisa
Directed By : Ashwin Saravanan
Music By : Prithvi Chandrasekhar
Produced By : Vignesh Shivan
கொரோனா ஊரடங்கில் கதை நடக்கிறது. மருத்துவரான நயன்தாராவின் கணவர் வினய் ராய், கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை அளித்து வருகிறார். நயன்தாராவும் அவரது மகளும் வீட்டில் தனியாக இருக்கிறார்கள். அப்போது, நயன்தாராவின் மகள் உடம்பில் கெட்ட ஆவி ஒன்று புகுந்து விடுகிறது. ஆரம்பத்தில் மன அழுத்தத்தில் மகள் பாதிக்கப்பட்டிருப்பதாக நினைக்கும் நயன்தாரா பிறகு ஆவி இருப்பதை அறிந்துக்கொண்டு, கிறிஸ்தவ பாதரியார் அனுபம் கேர் உதவியை நாடுகிறார்.
லாக் டவுன் நேரம் என்பதால், யாராலும் வெளியே வர முடியாத சூழலில், ஆவியை விரட்ட புதிய முயற்சியில் நயன்தாராவும், அனுபம் கேரும் ஈடுபட, அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? அந்த முயற்சி என்ன? என்பதை அலற வைக்கும் வகையில் சொல்வது தான் ‘கனெக்ட்’.
குடும்ப உறவுகள் மற்றும் கொரோனா கால இழப்புகளோடு சேர்ந்து ஆவியின் ஆட்டத்தையும் நம்மோடு கனெக்ட் செய்யும் விதமாக படத்தின் திரைக்கதையும், காட்சிகளும் அமைந்திருக்கிறது.
14 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்திருக்கும் நயன்தாரா அதற்கு ஏற்றபடி மேக்கப் இல்லாமல் நடித்திருப்பதால் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். ஆனால், ஒரு சில காட்சிகளில் அவர் முகத்தில் பெரிய வித்தியாசம் தெரிகிறது. குறிப்பாக அவருடைய மூக்கிற்கு என்ன ஆச்சு? என்று படம் பார்ப்பவர்கள் அலறும் வகையில் முகத்தில் மாற்றம் தெரிகிறது. அந்த மாற்றத்தை தவிர்த்துவிட்டு நடிப்பை மட்டும் பார்த்தால், நயன்தாரா தன்னை மீண்டும் லேடி சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்திருக்கிறார்.
கிறிஸ்தவ பாதரியராக நடித்திருக்கும் அனுபம் கேர், தனது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் கதையை சுமந்திருக்கிறார். பேய் ஓட்டும் போது, பேயின் அச்சுறுத்தல் ஒரு பக்கம் மிரட்ட, அனுபம் கேரின் நடிப்பும் மிரட்டுகிறது.
சத்யராஜ் எப்போதும் போல் தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். நயன்தாராவுக்கு கணவராக நடித்திருக்கும் வினய் ராய், குறைவான காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கிறார்.
இசையமைப்பாளர் பிரித்வி சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். அதிகம் சத்தமில்லாமல் அதே சமயம் படம் பார்ப்பவர்களை எப்போதும் பயத்துடன் வைத்திருக்கும் வகையில் மிரட்டலான இசையை கொடுத்திருக்கிறார்.
ஒரே வீட்டில் அதிலும் பெரும்பாலான காட்சிகள் குறிப்பிட்ட ஒரு அறையில் நடந்தாலும், அந்த உணர்வு ஏற்படாத வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி. குறிப்பாக இருள் சூழந்த காட்சிகள் வரும்போதெல்லாம் நம் மனது திக் திக் என்று அடிக்கிறது.
99 நிமிடங்கள் படம் ஓடுகிறது. எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் காட்சிகளை மிகன் நேர்த்தியாக தொகுத்திருக்கிறார் எடிட்டர் ரிச்சர்ட் கெவின்.
படம் தொடங்கி 15 நிமிடங்களில் நம்மை கதைக்குள் அழைத்துச் சென்றுஇடும் இயக்குநர் அஸ்வின் சரவணன், அதன் பிறகு ஒவ்வொரு காட்சிக்கும் நம்மை பயத்தின் உச்சத்திற்கு அழைத்து செல்கிறார்.
முழுமையான திகில் படம் என்றால் எப்படி இருக்க வேண்டுமோ அதற்கு ஏற்றவாறு கச்சிதமாக காட்சிகளை வடிவமைத்திருப்பவர், படம் முழுவதும் நம்மை படபடப்போடு பார்க்க வைத்திருக்கிறார்.
பேய் படமாக இருந்தாலும் குடும்ப உறவுகள் மற்றும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட இழப்புகளின் வலிகளை ஒரு சில காட்சிகளிலேயே நாம் உணரும்படி செய்திருக்கும், அந்த வலி மிகுந்த நாட்கள் எப்படி இருந்திருக்கும் என்று நம்மை சிந்திக்கவும் வைத்திருக்கிறார். குறிப்பாக பல உயிர்களை காப்பாற்றிய மருத்துவர்களின் பணியை மிக நேர்த்தியாக காட்சிப்பத்தி, அவர்களின் தியாகத்தை நம் மனதோடு கனெக்ட் செய்திருக்கிறார்.
மும்பையில் இருக்கும் கிறிஸ்தவ பாதரியாரையே பந்தாடும் அளவுக்கு படு பயங்கரமான பேயாக காட்டிவிட்டு, அடுத்த காட்சியில் அசால்டாக அந்த பேயை அடக்குவது போல் காட்சி வைத்து படத்தை முடித்திருப்பது, ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேபோல், அந்த ஆவியின் பெயர் தெரிந்துவிட்டது என்று கூறும் அனுபம் கேர், அந்த பெயரை வைத்து என்ன செய்தார்? என்று சொல்லாததும், அந்த பெயர் புரியும்படி சொல்லாததும், கதையில் இருந்து நம்மை விலகிப்போக செய்வதோடு, ஏதோ படத்தை முடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் வைத்த காட்சி போலவும் இருக்கிறது. இந்த இரண்டு விஷயங்கள் தான் படத்தின் மிகப்பெரிய குறையாக இருக்கிறது.
இதை தவிர்த்துவிட்டு பார்த்தால், இசை, ஒளிப்பதிவு, ஒலி கலவை போன்ற தொழில்நுட்ப பணிகள் மற்றும் சீட் நுணியில் உட்கார வைப்பதோடு, பயத்தோடு பார்க்க வைக்கும் காட்சிகள் என ஹாலிவுட் ஹாரர் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு படு பயங்கரமான மேக்கிங்கோடு படம் இருக்கிறது.
மொத்தத்தில், ‘கனெக்ட்’ திகில் படம் ரசிகர்களுக்கு ஏற்ற விருந்து.
ரேட்டிங் 3.5/5