Casting : Sri, Vadudha Krishnamurthy, Chams, Ramji, Balaji Venkatraman
Directed By : Vno
Music By : Sibu Sukumaran
Produced By : Shark Fin Studio - Sri
நாயகன் ஸ்ரீ படித்தும் வேலை கிடைக்காமல் கஷ்ட்டப்படுகிறார். அதனால் கிடைத்த வேலையை செய்துக்கொண்டிருப்பவருக்கு உடல்நிலை சரியில்லாத நபரை பார்த்துக்கொள்ளும் வேலை கிடைக்கிறது. அதன்படி அந்த வீட்டில் தங்கி வேலை செய்யும் அவர், உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர் விஞ்ஞானி என்றும், அவர் கண்டுபிடித்த மருந்தை பல லட்சம் கொடுத்து வாங்க பலர் தயாராக இருப்பதையும் அறிந்துக்கொள்கிறார். பிறகு அந்த மருந்துகள் அனைத்தையும் கைப்பற்றி அதை விற்பனை செய்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்.
இதற்கிடையே, ஸ்ரீயிடம் இருக்கும் பணத்தை அபகறிக்க, அதே வீட்டில் வீட்டு வேலை செய்யும் வசுதா கிருஷ்ணமூர்த்தி திட்டமிடுகிறார். மறுபக்கம் விஞ்ஞானியின் மருந்து பார்முலாவை கைப்பற்ற மருத்துவரான சாம்ஸ் திட்டமிடுகிறார். இவர்களிடம் மாட்டிக்கொள்ளும் ஸ்ரீ உயிருக்கு பயந்து அனைத்தையும் அவர்களிடம் கொடுக்கும் நேரத்தில், யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடக்கிறது. அது என்ன? அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை சுவாரஸ்யமாக சொல்வது தான் ‘புரொஜக்ட் சி - சாப்டர் 2’.
படத்தில் ஐந்து கதாபாத்திரங்கள் வருகிறார்கள். அந்த ஐந்து பேரும் முதன்மையாக இருந்து கதையை நகர்த்துவதோடு, அந்த கதாபாத்திரங்களாக வாழ்ந்து அசத்துகிறார்கள்.
ஆரம்பத்தில் மருத்துவராக வந்து தனது வழக்கமான டைமிங் ஜோக் மூலம் சிரிக்க வைக்கும் சாம்ஸ், அதன் பிறகு எடுக்கும் அவதாரம் மிரட்டுகிறது. இப்படியும் சாம்ஸால் நடிக்க முடியுமா! என்ற ஆச்சரியத்தோடு படம் முழுவதும் புதிய பரிணாமத்தில் வலம் வருபவர், தன்னால் காமெடி வேடத்தை தவிர்த்த மற்ற வேடங்களையும் சிறப்பாக செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளார்.
படித்தும் வேலை கிடைக்காமல் கஷ்ட்டப்படும் இளைஞராக நடித்திருக்கும் ஸ்ரீ, ஆரம்ப காட்சியில் விரக்தியான தனது வாழ்க்கையை நடிப்பு மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதே இளைஞருக்கு வசதியாக வாழ்வதற்கான வாய்ப்பு கிடைத்தால் அவர் என்னவெல்லாம் செய்வார் என்பதையும் தனது நடிப்பு மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் ஸ்ரீ, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
வீட்டு வேலை செய்யும் பெண்ணாக நடித்திருக்கும் வசுதா கிருஷ்ணமூர்த்தி பலமான கதாபாத்திரத்தில் பிரமாதமாக நடித்திருக்கிறார். வயதான கணவரை வைத்துக்கொண்டு தான் கஷ்ட்டப்படுவதை சொல்லும் போதும், ஸ்ரீயுடன் நெருக்கமாக பழகும்போதும் திரையரங்கையே சூடேற்றுகிறார். இறுதியில் பணம் இருந்தால் பெண்களுக்கு ஆண்கள் பாதுகாப்பே தேவையில்லை என்பதை சுத்தியலால் அடித்து சொல்லும் காட்சி மிரட்டல்.
உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும் விஞ்ஞானி வேடத்தில் நடித்திருக்கும் ராம்ஜி, படம் முழுவதும் படுத்தபடி வசனம் பேசாமல் இருந்தாலும் க்ளைமாக்ஸில் எதிர்பாரத ட்விஸ்ட் கொடுத்து கைதட்டல் பெறுகிறார்.
பாலாஜி வெங்கட்ராமனின் கதாபாத்திரமும் அதில் அவர் வெளிப்படுத்திய அளவான நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
இசையமைப்பாளர் சிபு சுகுமாரன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்துள்ளது.
சதிஷ் ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்துள்ளது. ஒரே வீட்டில் கதை நகர்ந்தாலும், அந்த உணர்வே ஏற்படாத வகையில் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.
குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு ஒரு எளிமையான கதையை மிக சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வதற்கு படத்தொகுப்பாளர் தினேஷ் காந்தியின் பணி முக்கிய பங்கு வகித்துள்ளது.
கதை எதுவாக இருந்தாலும் அதற்கான திரைக்கதையும், காட்சி வடிவமைப்புகளும் சுவாரஸ்யமாக இருந்தால் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்பதற்கு சான்றாக இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வினோ.
படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கதைக்குள் நம்மை அழைத்து செல்லும் இயக்குநர் வினோ, ஒரே இடத்தில் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு கதையை விறுவிறுப்பாக நகர்த்துவதோடு, இதுவரை நாம் பார்த்திராத நடிகர்களையும், ஏற்கனவே நாம் பார்த்த நடிகர்களையும் வித்தியாசமாக பயன்படுத்தி படத்தை ரசிக்க வைக்கிறார்.
முழுக்க முழுக்க புதுமுகங்களாக இருந்தாலும் எதிர்பாராத ட்விஸ்ட் மூலம் நம்மை ஆச்சரியப்படுத்தும் இயக்குநர் படம் முடியும் போது ’புரொஜக்ட் சி’ யின் சாப்டர் 1 மற்றும் சாப்டர் 2-வையும் பார்ப்பதற்கான ஆர்வத்தை தூண்டுகிறார்.
குறைவான பட்ஜெட்டையும், புதுமுகங்களையும் வைத்துக்கொண்டு இப்படி ஒரு சுவாரஸ்யமான படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் வினோ, பெரிய வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் மிகப்பெரிய படத்தை கொடுப்பார் என்ற நம்பிக்கையும் இப்படம் கொடுக்கிறது.
மொத்தத்தில், இந்த ஆண்டின் இறுதியில் புதியவர்கள் மூலம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த தரமான பொழுதுபோக்கு படம் ‘புரொஜக்ட் சி - சாப்டர் 2’
ரேட்டிங் 3/5