Latest News :

’ஜாஸ்பர்’ திரைப்பட விமர்சனம்

5e68de3fe69fbcb109280338edbef50b.jpg

Casting : Vivek Rajagopal, CN Bala, Lawanya, Aishwarya Dutta

Directed By : Yuvaraj.D

Music By : Kumaran Sivamani

Produced By : Manikandan.C

 

நாயகன் விவேக் ராஜகோபால், அவரது மனைவி லாவண்யா மற்றும் பிள்ளை என குடும்பத்தோடு வாடகை வீட்டுக்கு குடி வருகிறார்கள். அந்த வீட்டின் முதலாளியான ஜாஸ்பர், எப்போதும் மதுபோதையில் இருக்கிறார். 

 

இதற்கிடையே, வங்கி மேலாளரான விவேக்கிடம் ஒரு கும்பல் 100 கோடி ரூபாய் கருப்பு பணத்தை மாற்றி கொடுக்குமாறு கேட்கிறது. அதற்கு சம்மதிக்காத அவரை அந்த கும்பல் கடத்தி செல்வதோடு, அவருடைய விரல்களை ஒவ்வொன்றாக வெட்டி அனுப்புகிறது. 

 

தனது கணவரை காப்பாற்றும்படி ஜாஸ்பரிடம் லாவண்யா கேட்க, அவருக்கு உதவி செய்ய களத்தில் இறங்கும் ஜாஸ்பர், விவேக்கை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதை விறுவிறுப்பாகவும், சஸ்பென்ஸாகவும் சொல்வது தான் கதை.

 

இளம் வயது ஜாஸ்பராகவும், அவரது மகனாகவும் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் விவேக் ராஜகோபால் அதிரடி மற்றும் அமைதி என இரண்டு உணர்வுகளையும் மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இளம் வயது ஜாஸ்பராக ஆக்‌ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்துபவர், ஜாஸ்பரின் மகன் ஹரிஸ் வேடத்தில் அப்பாவித்தனமாக நடித்து கலங்க வைக்கிறார்.

 

வயதான ஜாஸ்பர் வேடத்தில் நடித்திருக்கும் சி.எம்.பாலா, ஆறடி உயரம் அதிரடியான உருவம் என மிரட்டலாக இருப்பதோடு, கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாகவும் இருக்கிறார். 

 

நாயகியாக நடித்திருக்கும் லாவண்யா, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா அளவான நடிப்பு மூலம் கவர்கிறார்.

 

வில்லனாக நடித்திருகும் நடிகர், ஜாஸ்பரின் நண்பர்களாக நடித்தவர்கள் என படத்தில் நடித்திருக்கும் பெரும்பாலனவரகள் புதிய முகங்களாக இருந்தாலும் அவர்களுடைய பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

பிரபல டிரம்ஸ் கலைஞர் சிவமணியின் மகன் குமரன் சிவமணி இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். கதைக்கு ஏற்றபடி இசையமைத்திருக்கும் குமரன் சிவமணி, தனித்து தெரியும் வகையில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தனது பெயரை மக்கள் மனதில் பதிய வைப்பார் என்று நம்புவோம்.

 

மணிகண்டராஜாவின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, கதாபாத்திரங்களின் இளமை பருவம் மற்றும் முதுமை பருவத்திற்கான ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியுள்ளார்.

 

எழுதி இயக்கியிருக்கும் யுவராஜ்.டி, வழக்கமான ஆக்‌ஷன் கதையை வித்தியாசமான ரூட்டில் பயணிக்க வைத்திருக்கிறார். 

 

நாயகன் விவேக்கை கடத்திய வில்லன் யார்? அவருக்கும் ஜாஸ்பருக்கும் இடையே இருக்கும் பகை என்னவாக இருக்கும்? போன்றவை படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அந்த காரணம் அழுத்தமாக இல்லாததால் படம் சில இடங்களில் சலிப்படைய செய்கிறது.

 

படம் முழுவதும் பல கொலைகள் செய்யும் ஜாஸ்பரின் வாழ்க்கையை விவரிக்கும் போது, அவர் பற்றி கொடுக்கும் பெரிய பில்டப்புக்கு ஏற்றவாறு காட்சிகள் இல்லாததும் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ்.

 

மொத்தத்தில், ‘ஜாஸ்பர்’ பட்ஜெட் கேங்ஸ்டர்

 

ரேட்டிங் 2.5/5

Recent Gallery